என்னாச்சு.. திடீர்னு கேட்ட சீனியர் அமைச்சர்.. "எங்களுக்கு வேணும்".. ஜெர்க் ஆன அப்பாவு.. திகைத்த சபை
சைரன் வாகனங்கள் அமைச்சர்களுக்கும் தேவை என துரைமுருகன் கோரிக்கை வைத்தார்
சென்னை: அமைச்சர்கள் கார்களில் ரெட் லைட், சைரன் வேண்டும் திமுக அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதான் தற்போது விவாதமாக உருவெடுத்துள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒருமாத காலமாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது.
இன்றைய தினம் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் பல்வேறு அறிவிப்புகளைத் தமிழக அரசு வெளியிட்டது.

கோரிக்கை
அந்த வகையில் அமைச்சர் துரைமுருகனும் சட்டப்பேரவையில் சில கோரிக்கைகளை இன்றைய தினம் முன்வைத்தார்.. அதன்படி அமைச்சரின் வாகனத்தில் சைரன் வேண்டும் என்றும், அதிகாரிகளுக்கு வழங்கியது போல் எங்களுக்கும் சைரன் விளக்கு வழங்க வேண்டும் என்றும் கூறினார். அதுமட்டுமல்ல, எங்களுக்கு இல்லை என்றால் அதிகாரிகளுக்கும் வழங்க கூடாது என்றும் துரைமுருகன் கூறினார்.

அப்பாவு
இதை கேட்டு அதிர்ந்துபோன சபாநாயகர் அப்பாவு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சைரன் விளக்குகள் அகற்றப்பட்டுள்ளன என்று அமைச்சர் துரைமுருகனுக்கு விளக்கம் தந்தார்.. பொதுவாக, அரசியல் தலைவர்களின் வாகனங்களில் சைரன் உட்பட ரெட் லைட் சுழலும் விளக்குகள் பொருத்தப்படுவது வழக்கம்.. அதன்படி, பிரதமர், மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் என பலரும் தங்களது கார்களில் சிவப்பு சைரன் விளக்குகளை பயன்படுத்துகின்றனர்.

உதவிகள்
இதைவைத்து, சாலையில் உள்ள டிராபிக் போலீசார், சைரன் வைத்து வரும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் வழங்க, இதர வாகனங்களை அப்படியே நிறுத்தி வைத்து விடுவார்கள்.. இது தேவையற்ற போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாகவும், பொதுமக்களுக்கும், இதர அவசர உதவி வாகனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் அவ்வப்போது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.

அழைப்பு
இந்நிலையில்தான், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர உதவி வாகனங்களுக்கு வழிவிடும் வகையிலும், விஐபிக்களின் கார்களுக்கு சாலையில் வழங்கப்படும் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையிலும் 3 வருடங்களுக்கு முன்பு, மத்திய அரசு ஒரு புது விதிமுறையை கொண்டு வந்தது.. அதன்படி, சிவப்பு சைரன் விளக்குகளை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மோடியே அப்போது அழைப்பு விடுத்திருந்தார்.

கோரிக்கை
மேலும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் ஆகிய 3 பேருக்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டது.. இதையடுத்து, பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட தமிழக அமைச்சர்கள் தங்களது காரில் இருந்த சைரன் விளக்குகளை அகற்றினர்.. பின்னர், கார்களில் சைரன், ரெட் லைட் சுழல் விளக்கு பயன்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது.

ஆச்சரியம்
அதற்கு பிறகு எந்த தலைவர்களும் சைரன் வாகனங்களை பயன்படுத்துவதுமில்லை.. காவல் துறையில் ரோந்து மற்றும் ஆம்புலன்ஸில் மட்டுமே அனுமதி என்கிற நடைமுறையும் அமலில் உள்ளது.. இதெல்லாம் மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு தெரியாமல் இல்லை.. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றும் இதே நடைமுறைதான் உள்ளது என்பதும் அவருக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை..

காரணம் என்ன?
அப்படி இருந்தும், துரைமுருகனே, அதுவும் சட்டம் பயின்ற மூத்த தலைவரே இப்படி ஒரு கோரிக்கையை வைத்ததுதான் பலருக்கும் ஆச்சரியத்தை கிளப்பி வருகிறது... திடீரென சைரன் வைத்த வண்டி மேல் துரைமுருகனுக்கு ஆசை வந்ததற்கு காரணம் என்னவா இருக்கும்?











Click it and Unblock the Notifications