"சைஸாக" சொன்ன அமித்ஷா.. "வசதியாக" மறைத்த எடப்பாடி.. ஸ்டாலினை விமர்சித்த ஓபிஎஸ்ஸுக்கு அமைச்சர் பதிலடி
ஓபிஎஸ்ஸுக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் தந்துள்ளார்
சென்னை: திமுகவை விமர்சித்த ஓபிஎஸ்ஸுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு தக்க பதிலடியை தந்துள்ளார்.. அத்துடன் திமுகவின் இந்தி மொழி குறித்த விளக்கத்தையும் தந்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், திமுகவை விமர்சித்தும், காட்டமாக கேள்வியை எழுப்பியும் எழுப்பியிருந்தார்.
"ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் தி.மு.க. தலைவரை விளம்பரப்படுத்துவது என் இரட்டை வேடம் போடுகிறது..

திமுக அரசு
தி.மு.க. தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு பேரறிஞர் அண்ணா கூறிய இருமொழிக் கொள்கையில் ஒன்றான ஆங்கிலத்தை பயன்படுத்துவதற்குப் பதில் ஏன் மும்மொழிக் கொள்கையில் ஒன்றான இந்தியை தி.மு.க. தலைவர் பயன்படுத்துகிறார் என்று மக்கள் கேட்சு ஆரம்பித்து இருக்கிறார்கள். ஒருவேளை ஊருக்கு தான் உபதேசம் போலும்" என்று ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். ஓபிஎஸ்ஸுக்கு தற்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி தந்துள்ளர்.. இதுதொடர்பாக தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்... அதில், "அதிமுகவின் உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வந்த உடனேயே, நாளும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அந்தக் கட்சியில் தன்னுடைய இருப்பைப் பிரபலப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஈடுபட்டிருக்கின்றார் என்பதை நாடு நன்றாக அறியும்.

சொத்தை வாதம்
தன்னை அதிமுகவில் முன்னிலைப்படுத்திப் பிரபலப்படுத்திக் கொள்ள அவர் எடுக்கும் இத்தகைய பகீரதப் பிரயத்தனங்கள் குறித்து எங்களுக்குக் கவலை ஏதும் இல்லை. ஆனால், இன்றைக்கு இந்தியத் திருநாட்டில் உள்ள முதல்வர்களில் முதன்மையானவர் என பல்வேறு அரசியல் தலைவர்களும், ஊடகங்களும், இந்திய அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வரும் அரசியல் நோக்கர்களும் நம்முடைய முதல்வரைப் போற்றுவது கண்டு மனம் பொறுக்காமல், 'எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்ற நிலையில் சொத்தை வாதம் ஒன்றைத் தூக்கிக் கொண்டு, அதன் பேரில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு ஓ.பன்னீர் செல்வம் குளிர்காய முற்பட்டு இருக்கிறார்.

அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று சொன்னவுடனேயே, தமிழ் நாட்டின் தலைமகனாக இருக்கும் நம்முடைய முதல்வர், உள்துறை அமைச்சரின் இந்தக் கருத்து இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் செயல் என்றும் ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது; ஒருமைப்பாட்டையும் உருவாக்காது எனவும் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் தனது நிலைப்பாட்டினை உறுதிபடத் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி
ஆனால், இன்றைக்கு மொழிப் பிரச்சனையை எடுத்துக்கொண்டு வீராவேசமாக அறிக்கை விடும் ஓ.பன்னீர் செல்வம், சட்டப்பேரவயில் தனக்குப் பக்கத்திலேயே எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்திருக்கும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சரின் இந்தக் கருத்துக் குறித்துத் தனக்கு 'ஒன்றுமே தெரியாது' என நழுவிக்கொண்டதை மட்டும் ஏன் வசதியாக மறந்து விட்டார் எனத் தெரியவில்லை.
உண்மையான தமிழ் உணர்வும், அக்கறையும் இருக்குமானால் எடப்பாடி பழனிச்சாமியின் இந்தப் பாசாங்குச் செயலைத்தான் ஓ. பன்னீர்செல்வம் கண்டித்திருக்க வேண்டுமே அல்லாமல் முதல்வர் மீது உள்நோக்கம் கற்பிக்க முனைந்திருப்பது கண்டனத்திற்குரிய செயலாகும்.பன்னீர்செல்வம் உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் தோற்றுவிப்பது குறித்தும் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

முதல்வர்
முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகுதான் ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைக்கு ரூபாய் 1.25 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது என்பதனையும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தலைவர் கலைஞர் பெயரில் செம்மொழித் தமிழ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர், செம்மொழிச் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் முதற்கட்டமாகத் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள ஐந்து பல்கலைக்கழகங்களில் 'செம்மொழித் தமிழ் இருக்கைகள்' அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருப்பதையும் அவருக்கு நான் நினைவூட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

தொன்மை
அது மட்டுமல்ல; தமிழின் தொன்மையையும், பெருமையையும் உலகளாவிய வகையில் எடுத்தியம்பும் வண்ணம் தமிழகத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு ரூபாய் ஐந்து கோடி நிதி ஒதுக்கம் செய்து, அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள் மற்றும் தரவுகளின் வாயிலாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழின் தொன்மையையும், தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் தொல்லியல் துறையில் ஒரு மறுமலர்ச்சியை முதல்வர் உருவாக்கி இருக்கிறார்.

முன்னெடுப்புகள்
இத்தகைய ஆய்வு முடிவுகளையும், அவை சார்ந்த அறிவிப்புக்களையும் சமூகநீதி சார்ந்த முன்னெடுப்புகளையும் தமிழ் கூறும் நல்லுலகமும், ஆய்வு நெறி சார்ந்த அறிஞர் பெருமக்கள் மட்டுமன்றி இந்திய அளவில் வெகுமக்களும் தெரிந்து கொள்ள வகை செய்யும் வண்ணம்தான் செய்தி- மக்கள் தொடர்புத்துறை பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளது.

பழைய நண்பர்
அதிமுக ஆட்சிக்காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள் தவிர்த்து ஏனைய நூல்கள் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அன்றைய முதல்வரால் 19-02-2019 அன்று வெளியிடப்பட்டதை ஓ. பன்னீர்செல்வம் மறந்திருந்தாலும் இத்தகைய அறிக்கைகளை வெளியிடும் முன்னர் தனது பழைய நண்பர் அன்றைய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications