"4.5 வருடம் உழைத்துத்தான் அமைச்சராகி உள்ளேன்.. ஒரே பாட்டில் பெரிய ஆளாகவில்லை.." உதயநிதி பேச்சு
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கண்ணை நம்பாதே திரைப்படம் வெளியாகிறது.
சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, தான் ஒரே பாடலில் பெரிய ஆளாகவில்லை என்றும் உழைத்து படிப்படியாகவே இந்த இடத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அமைச்சரான பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்... இருந்த போதிலும், அவரது நடிப்பில் உருவான இரண்டு திரைப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை.
உதயநிதியின் கண்ணை நம்பாதே திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்தச் சூழலில், கண்ணை நம்பாதே படத்தின் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் உதயநிதி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர அரசியலில் உள்ளார். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் மக்களிடையே அறிமுகமான உதயநிதி முரசொலி நாளிதழின் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார். இதற்கிடையே கடந்த 2018 மார்ச்சில் அவர் தீவிர அரசியலில் இறங்கினார். குறிப்பாக, 2019 மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட்ட போது தான் உதயநிதி முதல்முறையாகத் தமிழ்நாடு முழுக்க பிரசாரம் செய்தார். இதில் திமுக கூட்டணி 40இல் 39 எம்பி இடங்களைக் கைப்பற்றியது.

வேட்பாளர்
அப்போது அவருக்குக் கட்சியில் எந்தவொரு பதவியும் இல்லை. பிரசாரம் மட்டுமே செய்தார். அதன் பிறகு அவருக்குப் பதவி வழங்க வேண்டும் என்று பல மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், கடந்த 2019 ஜூலை மாதம், திமுக இளைஞரணி செயலாளராகப் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு இளைஞரணியில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது, கூட்டங்களை நடத்துவது என்று அரசியலில் ஒரு பக்கமும் சினிமாவில் நடிகராக மறுபுறமும் பயணித்து வந்தார். 2021 சட்டசபைத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திய நிலையில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

பிரசாரம்
இந்தத் தேர்தலிலும் உதயநிதி தனது தொகுதி மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க பிரசாரம் செய்தார். அவரது பிரசாரத்திற்கு மிகப் பெரியளவில் ஆதரவு இருந்தது. குறிப்பாக எய்ம்ஸ் செங்கல் பிரசாரத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. மேலும், அவர் தனது தொகுதியில் 69,355 வாக்குகள் வித்தியத்தில் வென்றார். இதையடுத்து திமுக ஆட்சி அமைத்த நிலையில், அப்போதே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்போது அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

அமைச்சர்
இருப்பினும், அவருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்ற குரல் எழத் தொடங்கியது. பல மூத்த அமைச்சர்களும் உதயநிதிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தனர். தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகே கடந்தாண்டு அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றார். அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு உதயநிதி நடிப்பிற்கு குட்பை சொல்லிவிட்டார். இருப்பினும், அவரது நடிப்பில் முன்பு உருவான படங்கள் இப்போது வெளியாகி வருகிறது. கடந்தாண்டு அவர் நடித்த கலகத் தலைவன் வெளியானது. அதற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இன்னும் அவரது நடிப்பில் கண்ணை நம்பாதே, மாமன்னன் திரைப்படங்கள் வெளியாகக் காத்திருக்கிறது.

உதயநிதி
இதனிடையே கண்ணை நம்பாதே படம் ரிலீசாக இருக்கிறது. இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் இயக்குநர் மாறன் இயக்கியுள்ள 'கண்ணை நம்பாதே' படம் வரும் மார்ச் 17ஆம் தேதி வெளியாகிறது. இதன் காரணமாகக் கண்ணை நம்பாதே திரைப்படக் குழுவினர் சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சரும் படத்தின் ஹீரோவுமான உதயநிதி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அவர் பேசுகையில், "நான் நடித்த படங்களிலேயே அதிக நாட்கள் ஷூட்டிங் செய்யப்பட்ட படம் என்றால் அது கண்ணை நம்பாதே படம்தான்.

உழைத்துத் தான்
இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த போது நான் அரசியலுக்கு வருவேனா என்றே தெரியாது. கட்சியில் மட்டுமே இருந்தேன்.. முதல் ஷெட்யூல் முடித்த பிறகு எம்பி தேர்தல் பிரசாரத்திற்குச் சென்றேன். அதன் பிறகு சட்டசபை உறுப்பினர். அதன் பிறகு எம்எல்ஏ இப்போது அமைச்சராகவே ஆகிவிட்டேன். நான் ஒரே பாடலில் பெரிதாகிவிட்டேன் என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால், உழைத்துத் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications