ஓவர் இடையூறு.. மக்களுக்கு நன்மை செய்யக் கூடாது என்பதற்காகவே ஆளுநரை நியமித்துள்ளனர்! கனிமொழி பேச்சு
சென்னை: திண்டிவனத்தில் நடைபெற்ற அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி, ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பதாகச் சாடினார்.
திமுக பொதுச்செயலாளராக இருந்தவர் பேராசிரியர் க. அன்பழகன். இவரது நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக சார்பில் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கனிமொழி
இந்தக் கூட்டத்தில் பேசிய கனிமொழி, "முதல்வர் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அவரை போன்ற ஒரு தலைவரை மீண்டும் நாம் பார்ப்பது ரொம்பவே கடினம். அவர் தன்னை பற்ற எந்தவொரு இழுக்கு வந்தாலும் கோபப்பட மாட்டார். அதேநேரம் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் சிறு இழுக்கு வந்தால் கூட கோபத்தில் பொங்கி எழுந்துவிடுவார்.

ஆன்லைன் ரம்மி
பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாத மாநிலங்களில், அவர்கள் ஆளுநர் மூலம் ஆட்சியை முடக்க முயல்கிறார்கள்.. ஆர்எஸ்எஸ் அமைப்பை வலுப்படுத்த முயல்கிறார்கள். தமிழக ஆளுநர் ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யும் சட்டத்திற்கு ஒப்புதல் தர மறுக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாகப் பல முறை சட்டத்துறை அமைச்சர் ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கமளித்துவிட்டார். இருந்த போதிலும் ஆளுநர் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்.

ஆளுநர்
மாநில அரசுகள் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்து விடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக இவர்கள் ஆளுநர்களை நியமித்து உள்ளனர். தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கான எதிர்ப்பு குறைந்து விட்டதாகச் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், இங்குத் தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்க முடியாது. இந்தி திணிப்பிற்கான எதிர்ப்பும் இன்னும் நீர்த்துப் போகவில்லை.. . சூடு சொரணை உள்ளவர்களுக்கு இந்தி எதிர்ப்பு குறையாது என்று சொன்னவர் நமது பேராசிரியர் அன்பழகன்.

திராவிட ஆட்சி
இங்கு எதுவும் அறியாத சிலர், திராவிட ஆட்சி என்ன செய்த என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்போது தமிழகம் பல்வேறு துறைகளில் வளர்ந்து உள்ளது. இதற்குப் பின்னால் இருப்பதே திராவிட ஆட்சி தான். நாட்டிலேயே மருத்துவ கல்வியில் தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக உள்ளது. இதுதான் திராவிட மாடல்... இதை உடைக்கவே நீட் நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்துள்ளது. 2ஜி விவகாரத்தை வைத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் நம்மை விமர்சனம் செய்தார்கள். ஆனால், இப்போது நீதிமன்றமே 2ஜி கேஸ் பொய் என்று கூறிவிட்டது.

பாஜக மீது அட்டாக்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் கூட, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைப்பது இல்லை. விலைவாசி உயர்வைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் பொதுமக்களைச் சாதி வாரியாகவும் மதம் வாரியாகவும் பிரிக்கும் நடவடிக்கையில் பாஜக இறங்கியுள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வந்த போது அதற்கு ஆதரவு அளித்தது, இங்கு எதிரக்கட்சியாக உள்ள அதிமுக தான்.

திமுக ஆட்சி
தமிழ்நாட்டில் அதிமுக இருந்தவரை எந்தவொரு தொழில் வாய்ப்புகளையும் அவர்கள் ஏற்படுத்தித் தரவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த உடன் இளைஞர் நலனைக் கருத்தில் கொண்டு பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தது திமுக அரசு" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications