“திமுக 170 தொகுதிகளில் நின்றே ஆகணும்.. இல்லன்னா கஷ்டம்.. 2 முறை நடந்த தவறு”.. தராசு ஷ்யாம் பளிச்!
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கடந்த முறையை விட கூடுதல் சீட் எதிர்பார்த்து வருகிறது. மேலும் தேமுதிகவை கூட்டணியில் இணைக்க திமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும், திமுக 170 தொகுதிகளுக்கு அதிகமாக போட்டியிட வேண்டும், இல்லையென்றால் கடினம் தான் என அரசியல் விமர்சகர் தராசு ஷ்யாம் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் கூட்டணி கட்சிகளுக்கு சீட் பகிர்வு செய்யும் பணியில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட்சிகளோடு தேமுதிகவை இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒருபுறம் காங்கிரஸ் கட்சி 36 சீட்களை கேட்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறையை விட 10 சீட் அதிகம் கொடுத்தால், மற்ற கட்சிகளும் கூடுதல் சீட் கேட்கும், திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்.

திமுக சீட்
திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தால் அக்கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைப்பதில் சிக்கல் எழலாம் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது, திமுக குறைந்த இடங்களில் போட்டியிட்ட தேர்தல்களில் அக்கட்சி தோல்வி அடைந்துள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி நடப்பு நிகழ்வுகளைப் பேசியுள்ளார் அரசியல் விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான தராசு ஷ்யாம்.
2 முறை செய்த தவறு
ஊடகங்களுக்கு தராசு ஷ்யாம் அளித்துள்ள பேட்டியில், வெற்றிகரமான கூட்டணிக்கு என்ன தேவை என்பதற்கு திமுகவிடம் பெரிய ரெக்கார்டு இருக்கிறது. 1967ல் அப்படித்தான் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றது. கூட்டணியில் 2 முறை தவறு செய்தது திமுக. 1980ல் 117 இடங்களில் போட்டியிட்டது திமுக. 2011ல் திமுக 119 இடங்களில் போட்டியிட்டது. இந்த 2 முறையுமே திமுக வெற்றி பெறவில்லை. கட்சிக்காரர்கள் மற்ற சின்னத்துக்காக உழைப்பதை விட தம் கட்சி சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கத்தான் விரும்புவார்கள். இதெல்லாம் திமுகவுக்கு பாடம். 160க்கும் குறையாத இடங்களில் நின்றே ஆகவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் திமுக தலைமை இருக்கிறது.
கூட்டணிக்குள் எத்தனை கட்சிகள் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அவரவருக்கு உரிய இடங்கள் இவ்வளவுதான் என்ற கணக்கு உண்டு. 5 தொகுதியில் திமுக என்றால் 1 தொகுதி கூட்டணி கட்சி. இதுதான் கணக்கு. 1996 தேர்தலுக்கு முன்பு ஒருமுறை புதுக்கோட்டை இடைத்தேர்தல் வந்தது. அப்போது பொது வேட்பாளரை நிறுத்த ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால், கருணாநிதி, திமுக வேட்பாளரை நிறுத்துவதில் உறுதியாக இருந்தார். ஆளுங்கட்சியான அதிமுக வென்றாலும் பரவாயில்லை, கட்சி களத்தில் நிற்க வேண்டும் என முடிவு செய்தார்.
தனி மெஜாரிட்டி பெற
சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்றாக வேண்டும். அதற்கு இவ்வளவு தொகுதிகளில் நிற்க வேண்டும் என்ற எண்ணிக்கை இருக்கிறது. திமுக 2 முறை சூடுபட்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் சூடுபட்டுக் கொண்டிருக்க முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கொடுத்தால் பிற கட்சிகளுக்கும் அதிக சீட் கொடுக்க வேண்டியிருக்கும். பிறகு திமுக 120 இடங்களில் தான் நிற்க முடியும். அதற்கு திமுக ஒப்புக்கொள்ளாது.
தேமுதிகவின் முக்கிய பிரமுகர் மற்றும் திமுகவின் மூத்த அமைச்சர் இடையே திருமண சம்பந்தப் பேச்சுவார்த்தை நடக்கிறது. அது அரசியல் கூட்டணியாகவும் மாறும் எனக் கூறப்படுகிறது. தேமுதிக திமுக கூட்டணிக்கு வர வாய்ப்பிருக்கிறது. அவர்கள் 6 சட்டசபை தொகுதி + 1 ராஜ்யசபா சீட்டுக்கு ஒப்புக்கொண்டால். திமுகவுக்கு இது சில தொகுதிகளில் வெற்றிக்கு பெரிதும் உதவக்கூடும் என்பது அக்கட்சித் தலைமையின் கணக்கு.
தேமுதிகவை கூட்டணியில் சேர்த்தால்
கடந்த முறை தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், 20 தொகுதிகளில் 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளது. அதில் 8 தொகுதிகளை அக்கட்சிக்கு கொடுத்துவிட்டு, மற்ற 12 தொகுதிகளில் திமுக மற்றும் மற்ற கூட்டணி கட்சிகள் போட்டியிட வைக்கப்படலாம் என்பதுதான் கணக்கு. மற்ற தொகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு தேமுதிகவுக்கு என வாக்குகள் உண்டு. அதையும் பெறலாம்.
1967ல் திமுக 5000 வாக்குகளுக்கு கீழ் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் 70. இப்போதும் நிலைமை அதுதான். எல்லா கட்சிகளையும் உள்ளே சேர்க்க வேண்டும் என்பதுதான் கூட்டணி கணக்கு. ஒருவேளை காங்கிரஸ் 39 சீட் என்பதில் முரண்டு பிடித்தால், அக்கட்சி போனால் பரவாயில்லை என திமுக தலைமை முடிவெடுக்கவும் கூடும்.
திமுக இழக்க வேண்டி இருக்கும்
கூடுதல் கட்சிகள் வரும்போது சீட் பகிர்வு எப்போதுமே கடினம் தான். புதிதாக கூட்டணியில் இணையும் கட்சிக்கு அதிக சீட் கொடுத்தால் ஏற்கனவே உள்ள கட்சிகளும் அதிகம் எதிர்பார்க்கும். காங்கிரஸ் கட்சிக்கு 5 சீட்களை அதிகமாக்கினால், கூட்டணியில் இருக்கும் விசிக, கம்யூனிஸ்ட்களும் 1 சீட் அதிகம் எதிர்பார்ப்பார்கள். புதிதாக இணையும் தேமுதிகவும் எதிர்பார்க்கும். கடைசியில் திமுக தான் போட்டியிடும் சீட் எண்ணிக்கையில் 10 சீட்களை இழக்கவேண்டி இருக்கும் என தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications