“ஸ்டாலினுக்கு அசிங்கமா இல்லையா? எடப்பாடியும் தான் உடந்தை” - அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் ஆவேசம்
சென்னை: "குதிரை பேரத்தை திமுக நிறுத்த வேண்டும். 40 கோடி, 50 கோடி ரூபாய் கொடுத்து ஒரு எம்.எல்.ஏவை விலைக்கு வாங்க ஸ்டாலினுக்கு கொஞ்சம்கூட வெட்கமாக இல்லையா? மக்கள் உங்களுக்கு எதிராகத் தீர்ப்பளித்து விட்டார்கள். உங்கள் கூட்டணிக் கட்சிகள் உங்களை விட்டு வெளியேறிவிட்டன. எடப்பாடியை முதல்வராக்க கூட்டணித் தலைவர்களிடம் பேசி இருக்கிறார். இதைவிட கேவலமான செயலை ஸ்டாலின் செய்ய முடியாது" என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினரான இளையராஜாவை தவெக சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க ரூ.35 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டது என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இருவர் உட்பட, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "உதயநிதி உத்தரவின் பேரில் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்களிடம் பணம் கொடுப்பதாக பேரம் பேசுகின்றனர். ஸ்டாலினும் உதயநிதியும் 50 கோடி ரூபாய் வரை மற்ற கட்சி எம்எல்ஏக்கள் இடம் பேரம் பேசுவது மிகவும் கேவலம். பல எம்எல்ஏக்கள் புகார் தந்துள்ளனர். ஒரு சில எம்எல்ஏக்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமியும் ஒரு வழியில் திமுகவுடன் கூட்டு சேர்ந்து தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறார்.
கீழ்தரமான, கேவலமான வேலை செய்வோர் மீது சட்டபூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கைது செய்யப்பட்ட நரேஷ் தொடர்ந்து செந்தில் பாலாஜி உடன் தொடர்பில் இருக்கிறார். செந்தில் பாலாஜி கூடவே உள்ளவர்களுக்கு, கரூர் கம்பெனி நடத்துவோருக்கு நேரடியாக குதிரை பேரம் விவகாரத்தில் தொடர்பு உள்ளது. திமுகவின் செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்." என்று தெரிவித்துள்ளார்.
வெட்கமாக இல்லையா?
மேலும், "குதிரை பேரத்தில் ஈடுபட்ட ஸ்டாலினுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்க கேவலமாக முயற்சித்து தான் ஸ்டாலின் தோல்வி அடைந்தார். ஓட்டுக்கு உங்களை போல் பணம் தராமல் தேர்தலை சந்திப்பதால் எங்களுக்கு தேர்தலை மீண்டும் சந்திப்பதில் பயமில்லை. முதல்வர் வேட்பாளராக தோற்ற ஸ்டாலின் தயவு செய்து அரசியலில் இருந்து விலகி விடுங்கள்.
செந்தில் பாலாஜி, அசோக் போன்றோரை வைத்துக்கொண்டு அரசியல் செய்தால் இப்படிதான் தோல்வியடைவீர்கள். திமுகவினர் மாட்டிக்கொண்டதால் சமாளிப்பதற்காக முதல்வர் குதிரை பேரம் செய்ததாக திமுக ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளது. நாங்கள் யாரிடமாவது பேசினோமா அல்லது அதற்கு உரிய ஆதாரம் இருக்கின்றதா?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் நிர்மல்குமார்.
என்ன நடந்தது?
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ இளையராஜா. இவரை சில தினங்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்ட சென்னையை சேர்ந்த தேர்தல் வியூக வகுப்பாளர் திருநாவுக்கரசு, தான் Indian Political Democratic Strategies (IPDS) என்ற கருத்து கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், ஒரு முக்கிய கட்சியை சேர்ந்த சிலர் கேட்டுக் கொண்டதன்பேரில் தொடர்பு கொள்வதாகவும், நேரில் சந்திக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். ஆனால், தான் வேறு பணியில் இருப்பதாகக் கூறி இளையராஜா தொடர்பை துண்டித்துள்ளார்.
ஆனால், மீண்டும் தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு, எம்.எல்.ஏ இளையராஜாவிடம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது தாங்கள், நாங்கள் சொல்வதுபடி நடந்துகொள்ள வேண்டும் என்றும், அதற்கு சன்மானமாக ரூ.35 கோடி வரை தருவதாகவும் ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளையராஜா, எனக்கு அதில் விருப்பமில்லை. இனிமேல் என்னிடம் பேசாதீர்கள்' என்று கண்டிப்புடன் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய திருநாவுக்கரசு, தான் பேசியது குறித்து வெளியே தெரிவித்தால் இளையராஜாவும் அவரது குடும்பத்தினரும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று மிரட்டியுள்ளார்.
இதனால் சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா, கடந்த 29.06.2026 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது ஊழியரான தன்னிடம், தனது மக்கள் பணியை செய்யக்கூடாது என்பதற்காகவும், தனது பேச்சுக்கு உடன்பட லஞ்சம் தர முயற்சித்ததோடு, தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்புலமாக செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.
செந்தில் பாலாஜி தொடர்பு
அப்புகாரின்பேரில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புலன் விசாரணையின் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்னணியாகச் செயல்பட்ட திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் புலன் விசாரணையில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் என்பவர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நரேஷை சென்னையில் சந்தித்ததும், செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோரின் அறிவுரையின் பேரிலேயே, திருநாவுக்கரசு வழக்கின் புகார்தாரரான சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை தொடர்பு கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications