பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய அளவிலும் தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தியா கூட்டணிக் குழப்பங்களுக்குக் காரணம் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளும் ராகுல் காந்தியின் அரசியல் முதிர்ச்சியின்மையுமே என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'முரசொலி' தனது தலையங்கத்தில் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் கடுமையான விமர்சனங்களால் ராகுல் காந்தி நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அந்த கட்டுரை, அவரது பேச்சு மற்றும் செயல்பாடுகளை அப்பட்டமான வரிகளில் தோலுரித்துக் காட்டியுள்ளது.

முரசொலி தன்னுடைய விமர்சனத்தில், "ஒற்றுமையைப் பற்றி ராகுல் வகுப்பு எடுத்துள்ளார். இது காலம் கடந்த ஞானோதயம் ஆகும். இந்த ஒற்றுமையை ஒவ்வொரு மாநிலத்திலும் கெடுத்தவரே ராகுல்தானே?

dmk rahul gandhi congress party tvk vijay tamil nadu politics dmk congress congress tvk alliance political controversy breaking political news


இந்தியா கூட்டணிக் கட்சி

இந்தியா கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் தான் ஆற்றிய உரையை ராகுல் காந்தி, சில நாட்கள் கழித்து வெளியிட்டு இருக்கிறார். ஜூன் 3 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் தான் என்ன பேசினேன் என்பதை ஜூன் 11 ஆம் தேதி வெளியிட்டு இருக்கிறார் ராகுல். இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகள், காங்கிரஸ் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் அதிகம் பரவியதால் தனது உரையை வெளியிட வேண்டிய நெருக்கடி ராகுலுக்கு ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் ராகுல் எப்படி நடந்து கொண்டார் என்பதை இடதுசாரிகளும், சமாஜ்வாடி கட்சியும், ராஷ்டிரிய ஜனதா தளமும் கடுமையான விமர்சனங்கள் வைத்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ஆற்றிய உரை மிக முக்கியமானது. கேரளாவில் காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிரெதிராக போட்டியிட்டன. இரண்டும் சம செல்வாக்கு உள்ள கட்சிகள் ஆகும். அவை இரண்டும் நேருக்கு நேராக மோதியதை யாரும் குறை சொல்லவில்லை.

ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு

ஆனால், ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு அபத்தமானது. "பினராயி விஜயனை மோடி ஏன் கைது செய்யவில்லை? இரண்டு பேருக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளது" என்று பேசினார் ராகுல். இதைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான குற்றச்சாட்டாக வைக்கிறது.

"இடது சாரிகளுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே ஒரு ரகசிய உடன்பாடு இருப்பதாக ராகுல் காந்தி, கேரள மாநில சட்டசபை பரப்புரையின் போது அப்பட்டமான பொய்களைப் பேசினார். இடதுசாரிகளுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருப்பதாகப் பேசினார். இடது சாரிகளின் பா.ஜ.க. எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு காங்கிரஸிடம் இருந்து சான்றிதழ் தேவையில்லை" என்று ராகுல் முன்னிலையில் குற்றம் சாட்டினார் மார்க்சிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ்.

இடதுசாரிகள் இப்போது இடதுசாரிகளாக இல்லை

"இடதுசாரிகள் இப்போது இடதுசாரிகளாக இல்லை" என்று ராகுல் சொன்னதைக் குறிப்பிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, 'இது ராகுலின் அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது' என்று விமர்சித்தார். 'இல்லை, உண்மைகளின் அடிப்படையில்தான் நான் அப்படிச் சொன்னேன்' என்று குறிப்பிட்ட ராகுல், 'அதானியை கேரளாவுக்கு கொண்டுவந்தது இடதுசாரி அரசே' என்று வாதிட்டார். 'அதானியை கேரளாவுக்கு கொண்டு வந்தது காங்கிரஸ் அரசு தான்' என்று இடதுசாரி அமைப்பினர் பதில் அளித்துள்ளார்கள்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் பேசும் போது, "இந்தியா கூட்டணியில் இருந்து தி.மு.க. மற்றும் ஆம் ஆத்மி விலகி இருப்பது மிகப்பெரிய பின்னடைவு. இந்தியா கூட்டணி இதே வழியில் தொடர வேண்டுமா என்பது குறித்து தீவிரமாக ஆராய வேண்டும்" என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

"பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்கும் பா.ஜ.க. தலைவர்களுக்கும் இடையே பல பிரச்சினைகளில் ரகசிய உடன்படிக்கைகள் இருந்தனவா என்பது குறித்து எனக்கு சந்தேகம் இருக்கிறது. இது பற்றி காங்கிரஸ் தலைமையிடம் பல-முறை குறிப்பிட்டும் நிலைமையைச் சரி செய்ய அவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை" என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வீ சொல்லி இருக்கிறார்.

பிரதமர் மோடியைக் கட்டி அணைத்தவர்

பினராயி விஜயனை என்னால் கட்டியணைக்க முடியாது' என்று சொல்லி இருக்கிறார் ராகுல். அவர் தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியைக் கட்டி அணைத்தவர் ஆயிற்றே! அந்தக் காட்சியை மறக்க முடியுமா?

"யாரும் ராகுல் காந்தியை பினராயி விஜயனை கட்டியணைக்கச் சொல்லவில்லை. மாறாக, பினராயி விஜயன் மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்யக் கோருவதன் மூலம், அவர் அமலாக்கத்துறைக்கும் மோடி அரசுக்கும் ஒரு உதவியாளராகச் செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். அது எதிர்க்கட்சித் தலைவரின் வேலை அல்ல" என்று மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பேபி மீண்டும் குற்றம் சாட்டி இருக்கிறார். இதற்கு ராகுலின் பதில் என்ன?

தமிழ்நாட்டில் நடந்த கதை ஊரறிந்தது ஆகும். தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டே காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள் ராகுல் ஆசீர்வாதத்துடன் செய்யப்பட்டவையே ஆகும். இன்றைக்கு அவர்கள் சேர்ந்துள்ள கட்சியின் தலைவர், இந்தியா கூட்டணிக்குள் வர மாட்டேன் என்று பெப்பே காட்டியதும்தான், ராகுல் காந்தி நல்லபிள்ளை வேஷம் போடுகிறார். 'நான் 100 விழுக்காடு உண்மையாக இருப்பேன். இப்போதே தி.மு.க.வுக்கு உத்தரவாதம் தருகிறேன்' என்கிறார் ராகுல்.

கீழ்த்தரமான வேலைகள்

சட்டமன்றத் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் எல்லாம் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க எல்லா கீழ்த்தரமான வேலைகளையும் பார்த்து விட்டு, நாடாளுமன்றத் தேர்தல் வரும் போது, 'புலிக்கு பயந்தவர்கள் என் மேலே படுத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்வதைப் போல ஆதரவைத் தேடுவதற்கு வெட்கமாக இல்லையா?

தி.மு.க.வை காங்கிரஸ் நடத்திய விதம் குறித்து அகிலேஷ், தேஜஸ்வீ, உமர் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை அனைத்தும் காங்கிரஸ் கட்சி மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்கள்.

இதனை ராகுல் எதிர்பார்க்கவில்லை. பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காகக் கூடிய கூட்டத்தில் காங்கிரஸ் எதிர்ப்புதான் அதிகமாக பேசப்பட்டிருப்பதற்கு பொறுப்பேற்க வேண்டியது ராகுலின் முதிர்ச்சியின்மையும், நேர்மையின்மையுமே காரணம் ஆகும்.

சாடிய திமுக - முரசொலி

'இந்தியா கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸ் மீது வைக்கும் விமர்சனங்கள் ஏற்கப்படும்" என்று ராகுல் சொல்லி இருக்கிறார். இவர் இனி விமர்சனங்களை ஏற்றால் என்ன? ஏற்காமல் போனால் என்ன? 'சிவன் விஷத்தைக் குடித்ததைப் போல அனைத்து விமர்சனங்களையும் காங்கிரஸ் விழுங்கிக் கொள்ள வேண்டும்' என்கிறார் ராகுல்.

அவர் சொல்லும் புராணக் கதைப்படியே பார்த்தாலும் விஷத்தை சிவன் உருவாக்கவில்லை. தேவர்களும், அசுரர்களும்தான் உருவாக்கினார்கள். அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்த போது விஷம் வந்தது. அதனை சிவபெருமான் குடித்தார். ஆனால் 'இந்தியா'க் கூட்டணிக்குள் அமுதமாக இல்லாமல் விஷத்தையே கடைந்தது யார்? என்று முரசொலி கேள்வி எழுப்பியிருக்கிறது.

தமிழக காங்கிரஸ் பதிலடி

இதற்கு பதிலடியாக, தமிழக காங்கிரஸ் துணை தலைவர் விஜயன் வெளியிட்ட அறிக்கையில், 'ராகுலை தொடர்ந்து கொச்சைப்படுத்தி, தரம் தாழ்த்தி எழுதுவது, தி.மு.க.,வின் ஆணவத்தையும், அகங்காரத்தையும் காட்டுகிறது. இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ள கட்சிக்கு அமைச்சர் பதவி தந்தது, முதல்வர் விஜயின் பெருந்தன்மையை காட்டுகிறது. அதனால் தான், தி.மு.க.,வுடன் இருந்த கட்சிகளும் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளன என்று பதிலடி தந்துள்ளார்.

தமிழகத்தில் ரொம்ப காலமாகவே நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் இடையேயான தேர்தல் பந்தம், தற்போதைய அரசியல் மறுசீரமைப்பால் முற்றிலுமாகச் சிதைந்து, இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.

முரசொலியின் இந்த துரோகக் குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து வந்துள்ள இந்த ஆக்ரோஷமான பதிலடி, இரு தரப்பிற்கும் இடையே இனி சமரசம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை முற்றிலுமாக முடக்கியுள்ளது.

தேசிய அளவில் இந்தியா கூட்டணியின் எதிர்காலத்தையே அசைத்துப் பார்க்கும் இந்த திமுக - காங்கிரஸ் மோதல், வரும் நாட்களில் டெல்லி மற்றும் தமிழக அதிகார மையங்களில் இன்னும் என்னென்ன அரசியல் மாற்றங்களையும் திருப்பங்களையும் நிகழ்த்தப் போகிறதோ தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+