ஸ்தம்பித்த சென்னை சாலை.. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது அண்ணாமலை.. ராஜீவ் காந்தி கடும் தாக்கு
சென்னை: கோர்டுக்கு வந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அண்ணாமலை, மக்களை போக்குவரத்து நெரிசலில் சிக்க வைத்துள்ளார். ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது அண்ணாமலை என்று திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி விமர்சித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 14ம் தேதி தி.மு.க.வினரின் சொத்துப் பட்டியல்களை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அண்ணாமலை வெளியிட்ட பட்டியலில் திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலுவின் பெயரும் இடம் பெற்று உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிஆர் பாலு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். மேலும், அவர் மீது வழக்குத் தொடரப்போதவதாகவும் அறிவித்தார் அதன்படி, திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை பெருநகர 17-வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
டிஆர் பாலு தனது வழக்கில், 1957ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து, எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ள தனக்கு பொதுமக்கள் மத்தியில் நற்பெயரும் மரியாதையும் உள்ளது. அதை களங்கப்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் என குற்றம்சாட்டி இருந்தார் டி.ஆர்.பாலு.
இந்த மனு மாஜிஸ்திரேட்டு அனிதா ஆனந்த் முன் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு ஆஜராகி பிரமாண வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில் வழக்கு கடந்த ஜூன் 15ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது டிஆர் பாலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எங்கள் குடும்பத்தினர் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். பொய்யான குற்றச்சாட்டை கூறி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணாமலை எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். இதுதவிர அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இருந்தார்.
இதையடுத்து, இவ்வழக்கு விசாரணைக்கு ஜூலை (14-ம் தேதி) நேரில் ஆஜராகும்படி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. இதைத் தொடர்ந்து, நீதிமன்ற ஆணைக்கிணங்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று அண்ணாமலை ஆஜரானார் . அப்போது அவருக்கு வழக்கின் நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையான ஆகஸ்ட் 24-ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு அண்ணாமலைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீதிமன்றத்தில் இன்று ஆஜராக வந்த காரணத்தால், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரிய அளவில் திரண்டனர். இதனால் சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகம் முழுவதும் பாஜகவினர் நிரம்பி வழிந்தது. பீக் அவர்ஸ் நேரம் என்பதால் சைதாப்பேட்டை நீதிமன்றம் அமைந்துள்ள கிண்டி சாலையில் ஏராளமான வாகனங்கள் சிக்கி கொண்டன. ஒருவழிப்பாதையான அந்த சாலை வழியாகவே கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரியில் இணைய முடியும். அடையாறு, மயிலாப்பூர், கோட்டூர்புரம் செல்லவும் அந்த சாலை வழியாக சென்றால் தான் முடியும்.
ஆளுநர் மாளிகையை ஒட்டிய பகுதியில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு ஏதேனும் சம்பவம் நடந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் சென்னை அண்ணா சாலையும், அடையாறு சாலையும், கிண்டி சாலையும் ஸ்தம்பித்துவிடும். அண்ணாமலை வந்த போது சாலைகள் ஸ்தம்பித்து போனதை சுட்டிக்காட்டி திமுகவினர் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி வெளியிட்ட பதிவில், கோர்டுக்கு வந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அண்ணாமலை, மக்களை போக்குவரத்து நெரிசலில் சிக்க வைத்துள்ளார். ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது அண்ணாமலை என்று அவரை டேக் செய்து கூறியுள்ளார்.
கோர்டுக்கு வந்த Accused அண்ணாமலை!
— R.Rajiv Gandhi (@rajiv_dmk) July 14, 2023
மக்களை போக்குவரத்து நெரிசலில் சிக்க வைத்துள்ளார்🤦🏽♂️🤦🏽♂️
ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது @annamalai_k !! pic.twitter.com/CzLgYfAQmS












Click it and Unblock the Notifications