விசிக இல்லாமலே 2வது இடம் பிடித்த திமுக.. பெரும் கலக்கத்தில் திருமாவளவன்! புலம்ப ஸ்டார்ட் பண்ணிட்டாரே
சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஆளும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ள போதிலும், தேர்தல் களம் வெளிப்படுத்தியிருக்கும் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் விசிக மற்றும் அதன் தலைவர் தொல். திருமாவளவனுக்குக் கடுமையான அரசியல் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கூட்டணிக் கட்சிகள் எதுவுமின்றி, குறிப்பாக விசிக ஆதரவு இல்லாமலேயே திமுக இவ்விரு தொகுதிகளிலும் மிக வலுவான வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதுதான் இதற்குக் காரணம்.
மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் இ. பரந்தாமன் 54,008 வாக்குகளையும், தாராபுரத்தில் வழக்கறிஞர் எஸ். சுகன்யா 57,370 வாக்குகளையும் பெற்று அதிமுகவை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தைக் கைப்பற்றினர்.

விசிக இனி தேவை இல்லை
2026 பொதுத்தேர்தலில் விசிக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது திமுக பெற்ற வாக்குகளை விட, இம்முறை எவ்வித கூட்டணிக் கட்சிகளின் தயவும் இன்றி திமுக தனித்து நின்றே கணிசமான வாக்குகளை அள்ளியுள்ளது. திமுகவின் சொந்த வாக்கு வங்கி களத்தில் எவ்வளவு கட்டுக்கோப்பாகவும் அசைக்க முடியாததாகவும் இருக்கிறது என்பதை இந்த முடிவுகள் பட்டவர்த்தனமாக நிரூபித்துள்ளன.
விசிக தலைவர் திருமாவளவன் கலக்கம்
இந்த முடிவுகள் வெளியானதும், விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட கருத்துக்கள் அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. "விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் அணியே வெற்றி பெறும்" என்றும், "விசிகவின் வாக்குகள் தவெக கூட்டணிக்குச் சென்றதால்தான் வெற்றி சாத்தியமானது" என்றும் அவர் உரிமை கோரத் தொடங்கினார். மேலும், திமுக 2-வது இடத்தைப் பிடித்தது போதாது என்றும், வெற்றி பெற வேண்டும் என்றால் விசிக போன்ற கூட்டணிக் கட்சிகள் உடனிருக்க வேண்டும் என்றும் பேசி வருகிறார்.
திமுக, ஆளுங்கட்சிக்கு நேரடி சவாலாக உருவெடுத்தது
ஆனால் கள யதார்த்தமும் புள்ளிவிவரங்களும் இதற்கு முற்றிலும் மாறாக உள்ளன. பட்டியலின மக்கள் கணிசமாக வசிக்கும் இந்த இரண்டு தனித்தொகுதிகளிலும் விசிக ஆதரவு தவெக பக்கம் நின்ற போதிலும், திமுகவை எந்த வகையிலும் பலவீனப்படுத்த முடியவில்லை. மாறாக, விசிக இல்லாமல் களமிறங்கிய திமுக, ஆளுங்கட்சிக்கு நேரடி சவாலாக உருவெடுத்தது, அதோடு அங்கே ஏற்கனவே வென்ற அதிமுகவையே மூன்றாவது இடத்திற்குத் தள்ளியது. விசிக இல்லாமல் திமுகவால் சோபிக்க முடியாது என்ற வாதத்தை திமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் வாக்கு எண்ணிக்கையில் முறியடித்துள்ளனர்.
இதனால், திமுக தலைமைக்குத் தனது கட்சியின் செல்வாக்கு இன்னும் தேவை என்பதை மறைமுகமாகவும் நேரடியாகவும் வெளிப்படுத்த வேண்டிய தற்காப்பு நிலைக்கு திருமாவளவன் தள்ளப்பட்டுள்ளார் என்றே அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன. தேர்தல் கணக்குகளில் தாங்கள் இல்லாமல் திமுக பலமாக இருப்பதை மறைக்கவும், தங்களது முக்கியத்துவத்தை இழந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே திருமாவளவன் இத்தகைய கருத்துக்களை முன்வைக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கூட்டணிக் கட்சிகளின் தயவின்றி திமுக வெளிப்படுத்திய இந்த வாக்கு பலம், தமிழக தேர்தல் களத்தில் விசிக உள்ளிட்ட சிறிய கட்சிகளின் பேர வலிமையைக் கணிசமாகக் குறைத்துள்ளதுடன், திருமாவளவனின் கூட்டணிக் கணக்குகளையும் ஆட்டம் காண வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications
