முதல் முறையாக மு.க.ஸ்டாலின் விருது.. மீண்டும் சீனுக்கு வந்த தஞ்சை சீனியர் மாஜி எம்பி பழனிமாணிக்கம்!
சென்னை: திமுகவின் 75-வது ஆண்டு பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் விருது பெறும் பலரில் கவனம் ஈர்த்திருப்பவர் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்தான். திமுக முப்பெரும் விழாவில் முதல் முறையாக வழங்கப்படும் மு.க.ஸ்டாலின் விருது, லோக்சபா தேர்தலில் இருந்தே ஓரம்கட்டப்பட்டவராக இருக்கும் பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்படுவதன் மூலம் தஞ்சாவூர் திமுக அரசியல் மீண்டும் பரபரப்பாகி இருக்கிறது.
தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.. லோக்சபா தேர்தலில் 6 முறை வென்றவர். திமுகவின் பொருளாளர் டிஆர் பாலுவின் சகாவாக டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் வலம் வருகிறவர். முன்னாள் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர். லோக்சபா தேர்தலின் போது தஞ்சாவூர் தொகுதி எப்படியும் பழனிமாணிக்கத்துக்குதான் என சத்தியமடித்து காத்திருந்தனர் அவரது ஆதரவாளர்கள். ஆனால் திமுக தலைமையோ பழனிமாணிக்கத்துக்கு சீட் தர மறுத்தது. அதுவரை அறியப்படாத தென்னங்குடி முரசொலி என்பவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்தது. இதனால் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்தின் அரசியல் அத்தியாயம் என்பது கேள்விக்குறியாக நின்றது. தென்னங்குடி முரசொலியும் எம்பியாகிவிட்டார். இதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கனத்த மவுனத்துடன் கடந்த சில மாதங்களாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் திமுகவின் முப்பெரும் விழாவில் முதல் முறையாக மு.க.ஸ்டாலின் விருது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக கலைஞர், அண்ணா, பெரியார், பேராசிரியர் விருதுகள் வழங்கப்படும். இந்த வரிசையில் பெரியார்- அண்ணா- கலைஞர்- பேராசிரியர் வரிசையில் மு.க.ஸ்டாலின் பெயரில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை முதலில் பெறுகிற பெருமைக்குரியவராக நேற்று வரை ஓரம்கட்டப்பட்ட எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இப்போது மீண்டும் சீனுக்கு வந்துவிட்டார். சட்டசபை தேர்தல் உள்ளிட்டவற்றை கணக்கில் வைத்துதான் திமுக தலைமை இந்த விருதை பழனிமாணிக்கத்துக்கு அறிவித்திருக்கலாம்.. ஆனாலும் சீனியர் சீனில் வந்துவிட்டார் என தஞ்சாவூரில் அவரது ஆதரவாளர்கள் போடும் குதியாட்டம் தலைநகர் வரை கேட்காமலும் இல்லை!
அதேநேரத்தில் ஆதரவாளர்களே! ஓவராக ஆட்டம் போட்டுதான் அண்ணனுக்கு சீட் கிடைக்காமல் செய்தீர்கள்.. அண்ணனை வனவாசம் போக வைத்தீர்கள்.. இப்படி எல்லாம் ஆடினால் எல்லாமும் போய்விடும் காலம் தொலைவில் என்கிற திமுக தலைமையின் எச்சரிக்கையாகவும் இதனைப் பார்க்க வேண்டும் என்கின்றன அண்ணா அறிவாலய வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications