"167".. தட்டி தூக்கும் திமுக.. அதிமுக 51.. பாஜகவுக்கு ஒன்றும் இல்லை.. வெளியான புது கருத்து கணிப்பு
திமுக கூட்டணி 167 இடங்களை கைப்பற்றும் என கணிப்பு ஒன்று கூறுகிறது
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 167 இடங்களை பிடித்து, ஆட்சியை கைப்பற்றும் திருச்சியில் குட் வில் கம்யூனிகேஷன் இயக்குநர் ஜெகத் கஸ்பா பேட்டி
திருச்சி: மொத்தம் 167 இடங்களை இந்த முறை திமுக கூட்டணி பிடித்து ஆட்சியை கைப்பற்றும் என்று குட் வில் கம்யூனிகேஷன் இயக்குநர் ஜெகத் கஸ்பா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
தேர்தல் நாள் நெருங்கிகொண்டிருக்கிறது.. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.. சூடு பறப்பும் பிரச்சாரங்களும் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அதிமுக
இதற்கு நடுவே, பல்வேறு கணிப்பு கணிப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.. இதுவரை வெளிவந்த கணிப்புகளில் பெரும்பாலும் திமுகவுக்கு சாதகமான முடிவுகளே வந்துள்ளன.. அதேசமயம், சில இடங்களில் அதிமுகவும் முக்கிய தொகுதிகளை திமுகவுக்கு விட்டுத்தராத வண்ணம் இறுக்கி பிடித்துள்ளன.

களப்பணி
கருத்து கணிப்புகள் தொடர்ந்து திமுகவுக்கு சாதகமாக வந்தாலும், தொண்டர்கள் அனைவரும் களப்பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று ஸ்டாலின் அட்வைஸ் செய்து வருகிறார்கள்... இது சம்பந்தமாக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளும் அறிக்கை விடுத்தும் வருகிறார்.. இந்நிலையில், குட் வில் கம்யூனிகேஷன் சார்பிலும் கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன.. கடந்த 2006-ம் ஆண்டு முதல் சட்டசபைத்தேர்தலுக்கான தேர்தல் கருத்து கணிப்புகளை நடத்தி வருகிறது..

வல்லுநர்கள்
இந்த முறையும் தமிழ்நாடு முழுவதும் 70 களப்பணியாளர்கள், 10 ஒருங்கிணைப்பாளர்கள், 4 நிபுணர்கள் என ஏப்ரல் 7-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை கள ரீதியாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.. தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டலங்கள், சென்னை, வடதமிழகம், வட மேற்கு உள்ளிட்ட காவேரி படுகை பகுதிகளில் எடுக்கப்பட்ட சர்வே பொதுமக்கள் மற்றும் அரசியல் வல்லுநர்கள், சமூக சேவைகள், அனைத்து தரப்பினரையும் சந்தித்து நேரிடையாக களப்பணிகள் இதில் செய்யப்பட்டன. இதுகுறித்து, குட் வில் கம்யூனிகேஷன் இயக்குநர் ஜெகத் கஸ்பா தெரிவித்துள்ளதாவது:

திமுக
"முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான அதிகபட்ச அதிருப்தி 55 சதமும், குறைந்தபட்ச 40 சதமும் பதிவாகி உள்ளது.. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீதான அதிகபட்ச அதிருப்தி 90 சதமும், குறைந்தபட்ச அதிருப்தி 65 சதமும் வெளிப்படுகிறது... பாஜக கூட்டணியில் இல்லாமல் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவுடன் சமாதானம் செய்து கொண்டு போட்டியிட்டிருந்தால் மீண்டும் 3வது முறையாக அதிமுக அரசு ஆட்சி அமைக்க வாய்ப்பு பெற்றிருக்கும்.

வாக்குறுதி
வடமேற்கு தமிழகத்தில் வன்னியர், கொங்கு வேளாளர் ஆகிய இரு சமூகங்களும் இணைந்து மிகப் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளில் அதிமுக வெற்றி வாய்ப்பு அதிகமாக தெரிகிறது. அதிமுக தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசம் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காவிரி படுகை, திருவாண்ணாமலை, கரூர் பரப்புகளை திமுக கூட்டணி எளிதாக வெல்கிறது. அதேபோல் தென் தமிழகத்தில் திமுக வெற்றி பெறும்.

நோட்டா
நாம் தமிழர் கட்சி தன் ஆதரவு தளத்தை இளம் சமூகத்தினரிடையே கணிசமாக அதிகரித்துள்ளது. அதேபோல் நகர்புற மற்றும் நடுத்தர வர்க்க மக்களிடையே மக்கள் நீதி மய்யம் தனது ஆதரவை பெற்றுள்ளது. சுமார் 10 சதவீதம் இளைஞர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்க போவதாக அறிவித்துள்ளார்கள். திமுக, அதிமுக, இரு கட்சிகளுக்குமே இளைஞர்கள் வாக்குகள் ஆதரவு குறைவாகவே இருக்கிறது.

திமுக கூட்டணி
2016 சட்டப்பேரவை தேர்தலில் ஒப்பிடும் வகையில் நாம் சந்தித்த வாக்காளர்களிடையே முதன்மையான இரு கூட்டணிகள் சந்திக்கும் வாக்கு சதவீதம் சரிவு ஏற்படும்... 2016 -ல் அதிமுக கூட்டணி வாக்களித்தவர்கள் சராசரி 7 சதவீதம் பேர் இப்போது அக்கட்சிக்கு எதிராக திமுக கூட்டணி வாக்களிக்கிறார்கள். 2016-ல் மூன்றாவது அணிக்கு வாக்களித்தவர்களும், திமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்களில் சிறு தொகுப்பினரும் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு வாக்களிக்க உள்ளார்கள். அதிமுகவின் அடிப்படை வாக்குகளில் 3 சதவீதம் வாக்குகளை அமமுகவுக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளார்கள்.

ஓட்டுக்கள்
அதன் அடிப்படையில், திமுக கூட்டணி 42 சதவீதம் ஓட்டுகளை பெற்று 167 இடங்களில் வெற்றி பெறும். ஆளுங்கட்சியாக உள்ள அதிமுக கூட்டணி 35 சதவீத ஓட்டுகள் பெற்று, 51 க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும். மக்கள் நீதி மையம் , அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை தலா ஒரு இடங்களில் வெற்றி பெறும்... இதில் மக்கள் நீதி மையம் 5 சதவீத ஓட்டுகளையும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 4 சதவீத ஓட்டுகளையும் பெறும். அதிகபட்சமாக இணைப்பாளர் சீமானின் நாம் தமிழர் கட்சி 7 சதவீத ஓட்டுகளை பெற்றிருக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 14 இடங்கள் இதர வேட்பாளர்கள் கைப்பற்றி இருப்பார் என்றும் அந்த முடிவில் தெரியவந்துள்ளது.

முக ஸ்டாலின்
திமுக தலைவர் முக ஸ்டாலின் முதிர்ச்சி அடைந்த தலைவராக மக்கள் ஏற்றுகக் கொண்டிருக்கிறார்கள். அவர் போகிற இடமெல்லாம் பேசுவது வாக்குறுதி தருவது போன்ற அவருடைய பேச்சு தமிழக மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது... அதேபோல் திருச்சி மாவட்டத்தில் பொறுத்தவரை திமுக கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள். ஶ்ரீரங்கம் தொகுதி பொறுத்தவரை அதிமுகவுக்கு ஆரம்பத்தில் சாதகமாக இருந்தது. கடந்த 2 நாட்களாக திமுகவுக்கு அதிக அளவில் வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

கடுமையான போட்டி
கோவையில் பொறுத்தவரை அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் இருந்தாலும் கடுமையான போட்டிகள் இருக்கிறது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதியில் பாஜகவுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கு தான் போட்டி நிலவுகிறது... இன்று வரை அங்கு யார் வெற்றி பெறுவார் பார்த்தால் கமல்ஹாசனுக்கு அதிகமாக வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பொறுத்தவரை கடையநல்லூர் மற்றும் சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெறுவது மிகவும் கடினம் தான் அங்கு இரட்டை இலைக்கு தான் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

அதிருப்தி
கடையநல்லூர் தொகுதி பொறுத்தவரை தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் பொறுத்தவரை தொகுதியில் பல இடங்களில் அவருக்கு அதிருப்தி நிறைய இருக்கிறது.

செங்கோட்டை
செங்கோட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழா, கடையநல்லூர் நகரத்தில் ஜமாஅத் பிரச்சினை, கட்சிக்குள்ளே பிரச்சினை, தொகுதிக்கு உட்பட்டவர்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அங்குள்ள மக்கள் எங்களது கள ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக பார்க்கும் அதிமுகவைவிட திமுகவுக்குதான் அதிக இடங்களில் வெற்றி வாய்ப்பு மற்றும் முக ஸ்டாலின் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications