என்ன பெரிய விஜய்? பக்கா ப்ளான் போடும் பவளவிழா கட்சி! உதயநிதி கையில் மாஸ்டர் ப்ளான்.. அதிரும் அன்பகம்
சென்னை: 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தனது தேர்தல் யுக்திகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான இளைஞர் அணியின் மீது கட்சி தலைமை பெரும் நம்பிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இளைஞர்கள் வாக்குகளை இலக்காகக் கொண்டு, வரும் தேர்தலில் இளைஞர் அணிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 தேர்தலில் தனித்து போட்டியிட்டால், 20 முதல் 23 சதவீதம் வரை வாக்குகள் பெறக்கூடும் என்ற கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில், அந்த வாக்குகளில் பெரும்பகுதி இளைஞர்கள் என்பதே திமுகவின் கவலையாக உள்ளது.
இதை எதிர்கொள்ள, திமுக சார்பில் இளைஞர் முகங்களை அதிக அளவில் களமிறக்க வேண்டும் என்ற முடிவுக்கு கட்சி தலைமை வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுகவில் இருக்கும் இளைஞரணி நிர்வாகிகள் அன்பகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

திமுக இளைஞரணி
இந்த நிலையில் தான், சமீபத்தில் திருவண்ணாமலை அருகே நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. வடக்கு மண்டல பொறுப்பாளரும் அமைச்சருமான எ.வ.வேலு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு உரையாற்றினார்.
உதயநிதி ஸ்டாலின்
மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி, கிளை என அனைத்து நிலைகளிலும் இளைஞரணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் மாநாடு என்பதால், இதில் கட்சி எதிர்காலம் குறித்து முக்கிய அறிவுரைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மாநாட்டில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், 2026 சட்டசபை தேர்தலில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு அதிகமான தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வெளிப்படையாக கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை முதல்வர் ஸ்டாலினும், பொதுச்செயலாளர் துரைமுருகனும் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் உடனடியாக எந்த உறுதியும் அளிக்காத போதிலும், கட்சி தலைமையிடம் மாவட்ட அடிப்படையில் குறைந்தது 35 முதல் 40 தொகுதிகள் வரை இளைஞரணி வேட்பாளர்களை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின், சுமார் 40 தொகுதிகளை இளைஞரணிக்காக கேட்டு பெற முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தல்
இளைஞரணி நிர்வாகிகள் கூறுகையில், 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலராக பொறுப்பேற்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த நேரத்தில் சென்னை விருகம்பாக்கம் தொகுதி உள்ளிட்ட சில தொகுதிக்ளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல், 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் இளைஞரணிக்கு வாய்ப்பு கிடைத்தது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கலைஞர் கருணாநிதி
தற்போது திமுக இளைஞரணி அமைப்பு முன்பை விட பல மடங்கு வலுப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 5 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் உள்ளனர். இத்தகைய வலுவான, கட்டமைக்கப்பட்ட இளைஞர் அமைப்பு திமுகவுக்கு மட்டுமே இருப்பதாக நிர்வாகிகள் பெருமிதம் தெரிவிக்கின்றனர். மேலும், கலைஞர் கருணாநிதி தமிழ்நாடு முதலமைச்சராகவும் திமுக தலைவராகவும் இருந்தபோது அவரது ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் தற்போது மு.க.ஸ்டாலினின் ஆதரவாளர்களாக இருக்கின்றனர்.
இளைஞர் அரசியல்
அதே நேரத்தில் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும்வகையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே உதயநிதியின் கோரிக்கை. தற்போது பெரும்பாலும் சீனியர்கள் அனைவரும் இன்னும் சில ஆண்டுகளில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடலாம். இதனால் கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உதயநிதி ஸ்டாலின் முடிவுகளுக்கு திமுக தலைமை ஒப்புக்கொள்ளும் என்றே சொல்லப்படுகிறது.
அன்பகம்
இதனால் உற்சாகமடைந்துள்ள திமுக இளைஞரணி சேர்ந்த நிர்வாகிகள் தற்போது அன்பகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கி இருக்கின்றனர். மேலும் தங்கள் ஊர்களில் கட்சி நிகழ்வுகளிலும் திமுகவின் போராட்டங்களிலும் ஆர்வமாக கலந்து கொள்வதோடு சமூக வலைதளங்களிலும் தங்கள் பெயர் தெரிய வேண்டுமென தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications