உங்களுக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? மாணவி கேட்ட ஒற்றை கேள்வி.. வியந்து போன உதயநிதி! பரபர
சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுக்க இளைஞரணி சார்பில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாகக் கலந்து கொண்டு வருகிறார்.
இதற்கிடையே அவரது தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதியின் பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பள்ளி நிகழ்ச்சி
மாணவர்களின் கற்றல் ஆர்வம்-திறனை அதிகரித்திட, மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் கற்பிக்கும் வகையில், மெட்டா கல்வி ( MetaKalvi) நிறுவனத்தின் உதவியுடன் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலுள்ள 5 அரசுப் பள்ளியில் VR LAB-ன் பயன்பாடு தொடங்கப்பட்டு உள்ளது. லேடிவில்லிங்டன் கல்லூரியில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழாவில் திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டனர்,

உதயநிதி
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது: "இப்போது இருக்கிற மாணவர்கள் எந்த அளவுக்குத் தெளிவாக இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். நான் மேடையில் உட்கார்ந்திருக்கிறபோது, அருகே இருந்த சகோதரி (மாணவிகளிடம்) பெயர் கேட்டேன். ஒரு மாணவி கிறிஸ்டினா என்றார்.

உங்க பெயர் என்ன
இன்னொரு மாணவியிடம் பெயர் கேட்டேன். யாஸ்மின் என்று சொன்னார். "என்ன கிளாஸ் படிக்கிறீங்கமா" என்று கேட்டேன். அதற்கு மாணவி, 8வது படிக்கிறார் என்று கூறினார். மாணவி கிறிஸ்டினா என்னிடம், "உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டார். நான் "என் பெயர் உனக்கு தெரியாதாமா?" என்று கேட்டேன். மாணவி "தெரியாது" என்றார். "என் பெயர் உதயநிதிமா" என்றேன்.

உங்களுக்கும் கருணாநிதிக்கும் என்ன உறவு
அந்த மாணவி உடனே "உங்களுக்கும் கருணாநிதிக்கும் என்ன உறவு? என்ன சம்பந்தம்?" என்று கேட்டார். "நான் அவருடைய பேரன்மா" என்று கூறினேன். அதற்கு மாணவி "அப்படியா சரி" என்று கூறினார். அந்த அளவுக்கு இந்த காலத்தில் குழந்தைகள் அவ்வளவு தெளிவாக, அவ்வளவு தைரியமாகப் பேசுகிறார்கள். சந்தோஷமாக இருந்தது. பெண்களுக்கான கல்வி, மாணவர்களுக்கான கல்வியை கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.

திராவிட மாடல்
அதற்காகத்தான் தலைவரின் இந்த திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது. முதல்வர் சமீபத்தில் கூட கூறினார். கல்வி அறிவை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்போம். இந்தியாவுக்கே ஒரு முன்னோடியான மாநிலமாக அனைத்திலும் வளர்ச்சியடைந்த மாநிலமாக நமது தமிழ்நாடு திகழ்ந்துகொண்டிருக்கிறது என்றால், அதற்குத் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போட்ட விதைதான் காரணம்.

அன்பில் மகேஸ்
தலைவர் ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்தி கல்விச் செல்வத்தைக் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டிருக்கிறார். அதற்காக அனைவரும் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். ஒரு பள்ளிக் கல்வித்துறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அன்பில் மகேஷ் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications