43வது ஆண்டில் திமுக இளைஞரணி! உதயநிதியை கண்டு தந்தையாக இன்றி தலைவராக மகிழ்கிறேன்: ஸ்டாலின் நெகிழ்ச்சி
சென்னை: திமுக இளைஞரணி நாளை 43-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், அதில் செயலாற்றிய காலத்தை இப்போது நினைத்தாலும் இனிமை தருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணியில் உதயநிதி சிறப்பாக முன்னெடுத்து வரும் பணிகளை கண்டு தந்தையாக அல்லாமல், கழகத்தின் தலைவராக மகிழ்கிறேன் என பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் விவரம் வருமாறு;

இளமைப் பருவத்தில்
என் இளமைப் பருவத்திலேயே அண்ணா - கலைஞர் - நெடுஞ்செழியன் - பேராசிரியர் உள்ளிட்டோரின் செயல்பாடுகளைக் கண்டு, அதனால் உந்துதல் பெற்று, நண்பர்களுடன் இணைந்து கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பைத் தொடங்கினேன். மாநகராட்சித் தேர்தல் பரப்புரைப் பணியில் ஈடுபட்டேன். பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினேன். கழகப் பிரச்சார நாடகங்களில் மேடையேறினேன்.

ஓரமாக அமர்ந்து
கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றும் மேடைகளில் ஓரமாக அமர்ந்து, அவர்களின் உரைகளை ஒரு டேப்ரெகார்டரில் பதிவு செய்து, பின்னர் அதனை முரசொலியில் அச்சிட ஏற்ற வகையில் எழுதித்தரும் பணியையும் மேற்கொண்டேன். கருப்பு - சிவப்பு என்பது கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் குருதியுடன் கலந்த உணர்வு. அந்த உணர்வுமிக்க இளைஞர்களைக் கொண்டு, 1980-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் கழகத் கலைஞர் அவர்களால் மதுரை ஜான்சிராணி பூங்காவில் தி.மு.கழகத்தின் துணை அமைப்பாக இளைஞரணி உருவாக்கப்பட்டது.

புதிய பட்டாளம்
'கழகம் வில்லாம்! நின் அணியே கணையாம்' என நம் கலைஞர் சொன்னதற்கேற்ப, அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த கழகத்தினை வலிமைப்படுத்திடவும், இளைய ரத்தம் கொண்ட புதிய பட்டாளத்தை ஜனநாயகப் போர்ப்படையாக உருவாக்கிடவும் உங்களில் ஒருவனான என்னிடம் இளைஞரணியின் செயலாளர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. உடன்நின்ற இளைஞரணித் தோழர்களுடன் தமிழ்நாடு முழுவதும் பயணித்து, கழகக் கொடிகளை ஏற்றி வைத்தும், மன்றங்களைத் தொடங்கி வைத்தும், படிப்பகங்களைத் திறந்து வைத்தும் இந்த அமைப்பை வலுப்படுத்தினோம்.

ஆரோக்கியமான போட்டி
இனமானப் பேராசிரியர் வைத்த ஆரோக்கியமான போட்டியில் மற்ற அணிகளுக்கு முன்பாக 11 லட்ச ரூபாய் நிதி திரட்டித் தந்து இளைஞரணி சார்பில் அதனை வழங்கி அன்பகம் எனும் அலுவலகத்தைப் பெற்றோம். இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகவும், ஈழத் தமிழர் நலன் காத்திடுவதற்காகவும், அன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை எதிர்த்தும் கலைஞர் அறிவித்த ஜனநாயகப் போர்க்களங்களில், காராகிரகத்திற்கு அஞ்சாத பட்டாளமாக முன்னின்று சிறைச்சாலைகளை நிரப்பியது இளைஞரணி.

அண்ணா அறிவாலயம்
கழகத்தின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டபோதும், சமூகநீதிக் காலவர் வி.பி.சிங் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்ற தேசிய முன்னணி தொடக்க விழாவின் போதும் சென்னை அதிர்ந்திடவும், இந்திய துணைக்கண்டமே ஆச்சரியமடையும் வகையிலும் இளைஞரணியின் வெண்சீருடை அணிவகுப்பு அமைந்தது. அதுவரை ஊர்வலம் எனச் சொல்லப்பட்டு வந்ததை, 'பேரணி' என மாற்றிய பெருமை கழகத்தின் இளைஞரணிக்கே உரியது.

2003-இல் விழுப்புரத்தில்
ஒரு மாநிலக் கட்சியின் இளைஞரணியின் கட்டமைப்பும் அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் இந்திய அளவிலான அரசியல் கட்சிகளை வியந்து நோக்க வைத்தன. 2003-இல் விழுப்புரத்தில் நடந்த கழகத்தின் மண்டல மாநாட்டில் இளைஞரணிச் செயலாளரான என்னைத் தலைமையேற்கப் பணித்தவர் தலைவர் கலைஞர். 2004-இல் சேலத்தில் நடந்த சிறப்பு மாநாட்டில் கழகக் கொடியினை உயர்த்தி வைக்கும் வாய்ப்பையும் இளைஞரணிச் செயலாளரான எனக்கு வழங்கினார்.

இளைஞரணி வெள்ளி விழா
எல்லாவற்றுக்கும் சிகரமாக 2007-ஆம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற இளைஞரணியின் வெள்ளி விழா மாநாட்டில் தமிழ்நாட்டின் முதலமைச்சரான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் நிதியமைச்சரான கழகப் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களும் கழக முன்னோடிகளும் பங்கெடுத்து, கொட்டும் மழையில் நடந்த வண்ணமிகு பேரணியை தனி மேடையில் கண்டு ரசித்து வாழ்த்தியதை வாழ்வில் மறந்திடவே இயலாது.

நினைக்கவே இனிக்கிறது
திமுக தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என இத்தனை பொறுப்புகள் இருந்தாலும் என் இளமைப் பருவம் முதல் இயக்கத்தோடு என்னை இரண்டறக் கலக்கச் செய்த கோபாலபுரம் இளைஞர் தி.மு.க அமைப்பும், தலைவர் கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இளைஞரணியும் இயக்கத்தில் எனக்குத் தாய் மடியாகும். அதில் தவழ்ந்த காலத்தை இப்போது நினைத்தாலும் இனிமை தருகிறது. எண்ணம் எல்லாம் இளமை ஆகிறது.

42 ஆண்டுகள் கடந்து
இளைஞரணி தொடங்கப்பட்டு 42 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது அதனை தம்பி உதயநிதி அவர்கள் சிறப்பாக முன்னெடுத்து வருவதைக் கண்டு தந்தையாக அல்லாமல், கழகத்தின் தலைவராக மகிழ்கிறேன். காலத்திற்கும் களத்திற்கும் ஏற்ற வகையில் அதன் செயல்பாடுகள் தொடரவேண்டும் என விரும்புகிறேன். நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தல் களத்தில் தம்பி உதயநிதியும் அவரது இளைஞரணிப் பட்டாளத்தினரும் ஆற்றிய முனைப்பான பணிகள் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மகத்தான வெற்றிக்குத் துணை நின்றன.

இளைஞரணி பணி
குடியுரிமைத் திருத்தச் சட்டம் எதிர்ப்பு, நீட் விலக்குப் போராட்டம், கொரோனா கால நிவாரணப் பணிகள் ஆகியவற்றில் இளைஞரணியின் பங்களிப்பை ஒரு தாயின் உணர்வுடன் கவனித்து பெருமை கொண்டேன். இளைஞர்களிடம் இலட்சியத்தைக் கொண்டு சேர்க்கின்ற வியூகமும், எதையும் தாங்கும் இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்து தமிழ்நாட்டை உலகளவில் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வற்குத் துணை நிற்கக்கூடியதாகும். இயக்கத்தைக் கட்டிக் காக்கும் பல்வேறு துணை அமைப்புகளுடன் இளைஞரணி தன் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications