இது வெயில் காலம் என்பதால் எதிர்பாராத விபத்து.. திமுக நிர்வாகியின் ட்வீட்! ரவுண்டு கட்டிய நெட்டிசன்ஸ்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்வை நேரில் பார்க்கச் சென்ற லட்சக்கணக்கான மக்களில் 5 பேர் பலியான நிலையில், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு பதில் கொடுத்துள்ள திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, "இது வெயில் காலம் என்பதால் எதிர்பாராது விபத்து ஏற்பட்டு இருக்கிறது." எனக் கூறியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சியில், விமானப்படையில் உள்ள பல்வேறு வகையான 72 விமானங்கள் சாகசங்களில் ஈடுபட்டன.

சென்னை விமான சாகச நிகழ்வில் பலி: இந்த விமான சாகச நிகழ்ச்சியை மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் நேரில் பார்த்தனர். இந்நிலையில் விமான சாகச நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வெயிலின் தாக்கம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதுள்ளது.
மேலும் விமான சாகச நிகழ்ச்சியின் போது வெயில் தாக்கம் காரணமாக 230 பேர் மயக்கமடைந்தாகவும், அதோடு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு 93 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. விமான சாகச நிகழ்ச்சியைப் பார்க்க வந்த பார்வையாளர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் விமர்சனம்: விமானப்படை சாகச நிகழ்வை பார்க்கச் சென்றவர்களில் 5 பேர் பலியானதோடு, பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, உரிய ஏற்பாடுகளைச் செய்து தரவில்லை என தமிழக அரசை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், அதிமுகவுக்கு பதில் கொடுத்துள்ளார் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி.

ராஜீவ் காந்தி ட்வீட்: ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சென்னை எம்.ஜிஆர்.நகரில் வெள்ள நிவாரணம் வாங்க வந்த மக்களை ஜெயலலிதா அவர்கள் வருகிறார்கள் என காக்க வைத்து 42 பேரை கொலை செய்து, கும்பமேளாவில் ஜெயலலிதா குளிக்க வருகிறார் அனைவரும் வாரீர் என சுவரொட்டி அடித்து மக்களை அழைத்து 110 பேரை கொலை செய்த கும்பல், தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த அடிமை அதிமுக கும்பல் சட்ட ஒழுங்கு, பாதுகாப்பு குறித்து எல்லாம் வகுப்பு எடுப்பதை பார்த்தா காலக் கொடுமையா இருக்கு!!
இது வெயில் காலம் என்பதால்: மெரினாவில் எதிர்பார்த்ததை விட மக்கள் அதிகம் கூடியதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இது வெயில் காலம் என்பதால் எதிர்பாராது விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு அரசை குறை சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு துளியும் அருகதை இல்லை!!" என விமர்சித்துள்ளார்.
ராஜீவ் காந்தி மீது நெட்டிசன்கள் தாக்கு: மழை பெய்யும் புரட்டாசி மாதம் உங்களுக்கு வெயில் காலமா?! என நெட்டிசன்கள், ராஜீவ் காந்தியின் கருத்தை விமர்சித்துள்ளனர். 70 பேரை கள்ளச்சாராய சாவில் பலி கொடுத்து விட்டு, கடும் வெள்ளத்தில் மக்களை நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டு, நிகழ்ச்சி பாக்க வந்தவர்களை காவு கொடுத்து விட்டு, இன்னும் முட்டு கொடுத்து கொண்டிருக்கிறீர்கள் என அதிமுகவினர் ராஜீவ் காந்தியை விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications