ராணுவ வீரர்களை பாதுகாக்க கண்ணிவெடிகள் மேல் படுத்து தூக்கிவீசப்பட்டு மரணித்த சுபேதார் சுப்பிரமணியம்!
சென்னை: ஆங்கிலேயர்களிடம் ராணுவ வீரர்களாக பணியாற்றிய இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களின் வீரம் செறிந்த வரலாறு இன்னமும் ஆவணப்படுத்தப்படாமல் இருக்கிறது. இப்படி ஆவணப்படுத்தப்படாத ஒரு வீரத் தமிழர்தான் சுபேதார் சுப்பிரமணியம்.
சுபேதார் சுப்பிரமணியம்: 1912-ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தவர் சுபேதார் சுப்பிரமணியம். அவரது தந்தை அப்போது பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். தந்தையை தொடர்ந்து மகன் சுப்பிரமணியமும் ராணுவத்தில் இணைந்தார். விக்டோரியா மகாராணியின் சொந்த படைப்பிரிவு Madras Sappers and Miners. ராணுவத்தினருக்கான பாலங்கள் கட்டுதல், கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அகற்றுதல் என்பது இதன் பிரதான பணி. இப்படைப் பிரிவில் இணைந்த சுபேதார் சுப்பிரமணியம் 2-வது உலகப் போர் காலத்தில் இத்தாலி போர்முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 32.

இரண்டாம் உலகப் போரில்.. : 1943-ம் ஆண்டு டிசம்பரில் இத்தாலிய போர் முனையில் இணைந்தார் சுப்பிரமணியம். அங்கிருந்து 1944-ம் ஆண்டு நிகழ்ந்த உலகின் மிக கோரமான யுத்தங்களில் ஒன்றான Monte Casino போரில் ஈடுபடுத்தப்பட்டார் சுப்பிரமணியம். ராஜ்புத், கூர்கா படைகள் Monte Casino மீது தாக்குதல் நடத்த, Madras Sappers படையணி அவர்களுக்கு உதவியாக களத்தில் நின்றது.
கண்ணிவெடிகளுடன் 'யுத்தம்': 1944-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி ராணுவ அதிகாரி ஜெகத் சிங் மற்றும் ராணுவ பொறியாளர்கள் கண்ணிவெடிகளுக்கு நடுவே சிக்கி கொள்கின்றனர். இதனால் Madras Sappers and Miners உதவி கோராப்படுகிறது. அப்போது சுபேதார் சுப்பிரமணியம், ராணுவ வீரர்களைப் பாதுகாக்க தாமாக முன்செல்கிறார். அவருக்குப் பின்னால் சிகாமணி என்ற மற்றொரு வீரர் நிற்கிறார். கண்ணிவெடிகளை தங்களிடம் இருந்து கருவிகள் மூலம் கண்டுபிடித்தனர் சுபேதார் சுப்பிரமணியம், சிகாமணி. ஆனால் அது வெடிக்கக் கூடிய நேரம் சில வினாடிகள்தான்.. என்ன செய்வது என விழிபிதுங்கிக் கொண்டிருக்காமல் அந்த கண்ணிவெடி அப்படியே மேலே படுத்தார் சுபேதார் சுப்பிரமணியம். கண்ணிவெடி வெடித்து சிதறும் போது தாமும் தூக்கிவீசப்பட்டு வெடித்து சிதறுவோம் என அறிந்தே இருந்தார் சுபேதார் சுப்பிரமணியம். ஆனால் சக ராணுவ வீரர்களைக் காப்பாற்ற தன்னையே அர்ப்பணிக்க அப்படியே கண்ணிவெடி மீது படுத்தார் சுபேதார் சுப்பிரமணியம். சில நொடிகளில் கண்ணிவெடி வெடித்து சிதற வானில் சுபேதார் சுப்பிரமணியமும் தூக்கி வீசப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

விருது: சுபேதார் சுப்பிரமணியன் இந்த வீரதீர செயலுக்காக அப்போதைய வைஸ்ராயிடம் இருந்து George Cross (இறப்புக்கு பிந்தைய) விருதை அவரது 27 வயது மனைவி சண்முகவள்ளி பெற்றுக் கொண்டார்.
நினைவு சின்னங்கள்: இத்தாலியின் Sangro River Cremation Memorial -ல் இன்றும் சுபேதார் சுப்பிரமணியன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவிலும் காஷ்மீரிலும் அவரது உருவ சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லி இந்தியா கேட்டிலும் சுபேதார் சுப்பிரமணியம் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications