சொத்து வரி கட்டியாச்சா? 1 % போயிருமே! அதைவிடுங்க, 100 பேர் சிக்கிட்டாங்களாமே! சென்னை மாநகராட்சி மாஸ்
சென்னை: சொத்து வரி தொடர்பாக முக்கிய நடவடிக்கை ஒன்றினை சென்னை மாநகராட்சி மேற்கொள்ளப்போகிறதாம்.. இது தொடர்பான தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் மூலமாக உள்ளது சொத்து வரிகளேயாகும்.. அதாவது கிட்டத்தட்ட 13 லட்சம், சொத்து உரிமையாளர்கள் மூலம் இந்த வருவாய் கிடைத்து வருகிறது. வீடுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கடைகள் மூலம் வருடத்துக்கு 2 முறை சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது...

திடக்கழிவுகள்: இப்படி கிடைக்கும் வருவாயை வைத்துதான், பொதுமக்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள், சாலைகளை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற மிக மிக அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையை பொறுத்தவரை, 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ளதால், இவர்களிடமிருந்து அரையாண்டுக்கு சுமார் ரூ.850 கோடி வீதம், வருடத்துக்கு ரூ-1,700 கோடி வசூலிக்கப்பட்டு வருகிறது. சொத்து வரியை செலுத்தாவிட்டால், அந்த உரிமையாளர்கள் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரியை செலுத்த வேண்டும்.
ஊக்கத்தொகை: அதேபோல, சொத்துவரி மற்றும் தொழில்வரியை தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்படுகிறது.. அதாவது, அரையாண்டு துவங்கும் முதல் 30 நாட்களில், சொத்துவரி செலுத்துவோருக்கு, வரியில் 5 சதவீதம், அதிகபட்சம் 5,000 ரூபாய் ஊக்கத்தொகையும் அளிக்கப்பட்டு வருகிறது..
அத்துடன், அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்தியவர்களுக்கு 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ5 ஆயிரம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதற்கு பிறகு செலுத்தப்படும் சொத்துவரிக்கு, 1 சதவீதம் தனிவட்டி விதிக்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல, நீண்டகாலமாக யாரெல்லாம் சொத்துவரி செலுத்தவில்லையோ, அவர்களின் பட்டியல்கள், மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/propertytax_revision என்ற வெப்சைட்டில் வெளியிடப்பட்டும் வருகிறது.
அறிவிப்பு: இதுகுறித்துதான் ஒரு முக்கிய அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது.. அதாவது, மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை வைத்துள்ள முதல் 100 பேர் பட்டியலை இணையத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாம்.
காரணம், சிலர் ரூ.1 கோடிக்கு மேல் நீண்ட காலமாக நிலுவை வைத்திருக்கிறார்களாம். இப்படி நீண்ட கால நிலுவை வைத்துள்ளோர் விவரங்களை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பட்டியல்: நீண்டகாலமாக நிலுவை வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாம்ல, அதிகபட்ச நிலுவைத் தொகையின் அடிப்படையில் முதல் 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம். மாநகராட்சி மாமன்ற அனுமதி கிடைத்தவுடன் இணையத்தில் வெளியிடப்படலாம் என்கிறார்கள்.
இந்த அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால், இந்த தொகைக்கு மாதம் 1 சதவீதம் தனி வட்டி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications