இந்த காலத்தில் இப்படி ஒருத்தரா? IT ரெய்டை விடுங்க.. ஜெகத்ரட்சகனுக்குனு சொந்தமா செல்போனே கிடையாதாமே!
சென்னை: திமுக எம்பி ஜெகத்ரட்சகன் இதுவரை செல்போனை பயன்படுத்தியதே இல்லையாம். இப்போதும் கூட செல்போனையே பயன்படுத்த மாட்டாராம்.
திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை தொடர்ந்து சோதனை நடத்தி வந்த நிலையில் இந்த சோதனை முடிவடைந்துள்ளது. சோதனையில் முக்கிய ஆவணங்களும், சிடியும் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

இவருக்கு சொந்தமான 40 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றதால் இவர் யார் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. யார் இந்த ஜெகத்ரட்சகன் என்ற கேள்விக்கு அவர் விழுப்புரம் மாவட்டம் கலிங்கமலை எனும் ஊரை சேர்ந்தவர் என்பது பதிலாக கிடைப்பதுடன் நிறைய விஷயங்கள் அவரை பற்றி வெளிவந்துள்ளன.
பல்வேறு கல்லூரிகளுக்கு சொந்தக்காரரான ஜெகத்ரட்சகன் 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவருக்கு தொழில் செய்வதில் ஆர்வம் அதிகரித்தது. அத்துடன் அரசியலில் வலம் வர வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. இதனால் அதிமுகவில் இணைந்த அவர் 1980 ஆம் ஆண்டு முதல்முறையாக தமிழக சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
1984 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் வென்று மக்களவை எம்பியானார். 1998 ஆம் ஆண்டு அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ஆர்.எம்.வீரப்பனுக்கும் இடையே பாட்ஷா பட வெற்றி விழா விவகாரத்தில் மோதல் போக்கு ஏற்பட்டு ஆர்.எம்.வீரப்பன் அதிமுகவிலிருந்து வெளியேறினார்.
இதையடுத்து அவர் எம்ஜிஆர் கழகத்தை தொடங்கினார். அவருடன் ஜெகத்ரட்சகனும் இணைந்து பணியாற்றினார். இதையடுத்து வீர வன்னியர் பேரவை, ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்ற கட்சிகளை நடத்தினார். பின்னர் மறைந்த முதல்வர் கருணாநிதியின் அழைப்பை ஏற்று 2009ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அந்த ஆண்டு நடந்த எம்பி தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராகவும் பின்னர் வர்த்தகத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இதையடுத்து 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த அவர் 2019-இல் நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.
இந்த நிலையில் ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து அதன் பேரில் வருமான வரித் துறை சோதனை நடந்தது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஜெகத்ரட்சகன் இதுவரை செல்போனையே பயன்படுத்தியதில்லையாம். தற்போதும் பயன்படுத்துவதில்லை என்கிறார்கள். ஒரு வேளை ஜெகத்ரட்சகனை தொடர்பு கொள்ள வேண்டுமானால் அவருடன் இருக்கும் உதவியாளர்களையோ வீட்டு லேன்ட்லைன் போனிலோ தொடர்பு கொள்ள வேண்டும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications