ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து.. மாணவர்கள் செம ஹேப்பி.. விஜய் கொடுத்த பரிசு எவ்வளவு தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் டாப் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு இன்று பரிசு வழங்கி பாராட்டியுள்ளார். முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு எவ்வளவு பரிசு வழங்கியுள்ளார் தெரியுமா?
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நிலவி வருகிறது. அவரது ரசிகர்களும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு முன்னோட்டமாக விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு அரசியல் - சமூகம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த நடிகர் விஜய் ரசிகர்களை கேட்டுக்கொண்டு இருந்தார். அதன்படி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர்.
அதன் தொடர்ச்சியாக தீரன் சின்னமலை, காயிதே மில்லத், சிவந்தி ஆதித்தனார், பாரதிதாசன் உள்ளிட்டோரின் பிறந்தநாளன்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து, உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு வேளை உணவு விஜய் மக்கள் இயக்கத்தினரால் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு விஜய் ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வருகிறார். அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இதற்கான விழா இன்று நடைபெற்றது.
இந்த ஆண்டு நடந்து முடிந்த பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறார்.

மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார். இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தொகுதி வாரியாக, முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளார் விஜய். தொகுதி வாரியாக இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ. 15 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ. 10 ஆயிரமும் காசோலையாக வழங்கப்பட்டுள்ளன.
அதோடு, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்த திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசாக வழங்கினார். வைர நெக்லஸை மாணவியின் தாயாரிடம் கொடுத்து, அதனை அணிவிக்க செய்தார் விஜய்.












Click it and Unblock the Notifications