ஓட்டலில் ஷவர்மா, வீட்டில் மீன் குழம்பு.. காலையில் மயங்கி விழுந்த சென்னை டீச்சர்.. அதிர வைத்த தகவல்
சென்னை: சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதாகும் சுவேதா என்ற பெண் ஆசிரியை சவர்மா, மீன் குழம்பு சாப்பிட்டுள்ளார். போரூரில் உள்ள ஒரு கடையில் சாப்பிட்டு வந்தவர், மறுநாள் காலையில் மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிக்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் ஒரு சில ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சியில் செய்யப்பட்ட உணவுகளை சமைப்பதாக புகார்கள் உள்ளது. அப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். கெட்டுப்போன உணவுகளை சூடுபடுத்தி தருவதால், பலரும் அதனை கெட்டுபோன உணவு என்றே தெரியாமல் சாப்பிட்டு விட்டு அவதிப்படுகிறார்கள். இதில் குறிப்பாக பரோட்டோ, சிக்கன் ரைஸ் மற்றும் சவர்மா சாப்பிட்டவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் சென்னை போரூர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் பற்றி பார்ப்போம். சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம், நூம்பல் பகுதியை சேர்ந்த 22 வயதாகும் சுவேதா தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். ஆசிரியை சுவேதா கடந்த வாரம் போரூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் போரூரில் உள்ள ஒரு பிரபல ஓட்டல் கடையில் சவர்மா சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு வீட்டுக்கு வந்தவர், மீன் குழம்பு சாப்பிட்டிருக்கிறார். மறுநாள் காலையில் சுவேதாவுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆசிரியை சுவேதாவை சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆசிரியை சுவேதா இறந்து போனார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த சென்னை மதுரவாயல் போலீசார், பலியான சுவேதா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிரியை சுவேதா, சவர்மா சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவரது சாவுக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே நேற்று சென்னை கொடுங்கையூரில் உள்ள ஒரு பிரபல பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட 7 குடும்பங்களை சேர்ந்த 34 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரியாணி கடை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏழு குடும்பங்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications