மாலை உருவாகிறது மாண்டஸ் புயல்.. சென்னைக்கு அருகே எங்கே இருக்கிறது தெரியுமா?
சென்னை: வங்கக் கடலில் இன்று மாலை உருவாகவுள்ள மாண்டஸ் புயல் எங்கே இருக்கிறது தெரியுமா?
வங்கக் கடலில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவானது. இது நேற்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்தது. இந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்படுகிறது. இதை ஐக்கிய அரபு நாடுகள் வைத்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தம்..புயலாக மாறுமா? வானிலை ஆய்வு மையம் சொன்னது இதுதான்!

பெயர் காரணம் என்ன
உலக வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக இருக்கும் அப்துல்லா அல் மாண்டஸ் என்பவர் ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்தவர். அதனால் இந்த மாண்டஸ் என்ற பெயரை அந்த நாடு பரிந்துரைத்தது. இந்த புயலால் நாளை முதலே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 9 அதி கனமழை
இந்த புயலால் வரும் டிசம்பர் 9ஆம் தேதி தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பேரிடர் மீட்பு குழுவினர் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

புயல் எச்சரிக்கை கூண்டு
நாகை, புதுவை, காரைக்கால், சென்னை உள்ளிட்ட இடங்களில் முதலாம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீன் பிடிக்க சென்ற மீனவர்களும் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மாண்டஸ்
இந்த நிலையில் இந்த மாண்டஸ் நேற்று நிலவரப்படி புதுவையின் வடக்கு பகுதியில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த காற்றழுத்தம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டே சென்னை அருகே வருகிறது. சரியாக சென்னையிலிருந்து 830 கி.மீ. தென் கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

12 கி.மீ. வேகம்
இது மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகரும் நிலையில் இன்று மாலை புயல் உருவாகிறது. எனவே இன்று மாலை உருவாகும் புயல் எங்கு கரையை கடக்கும், எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து தெரியவில்லை. எனினும் தமிழக அரசும் புதுவை அரசும் தயார் நிலையில் உள்ளனர்.