ஜெயித்தது தூத்துக்குடியில், நன்றி சொல்வது திருச்செந்தூரிலா.. ஸ்ரீநாத்தை கிண்டல் செய்யும் கட்சிகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், தான் வெற்றி பெற்ற தொகுதி எது என்பதைக் கூட அறியாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மற்றொருவர் வெற்றி பெற்ற திருச்செந்தூர் தொகுதியின் ஒரு பகுதியான புன்னக்காயலுக்குச் சென்று தனக்கு வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்து வருகிறார். தனது தொகுதி எல்லை எது என்று கூடத் தெரியாத அளவிற்கு அரசியல் முதிர்ச்சியற்றவர்கள் அமைச்சர்களாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு என்று அதிமுக ஐடி விங்க் விமர்சித்துள்ளது.
தூத்துக்குடி தொகுதியில் மூன்று முறை (2006, 2016, 2021) தொடர்ச்சியாக வெற்றி பெற்று, பெரும் செல்வாக்குடன் அமைச்சராகவும் இருந்த கீதா ஜீவனை, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நடிகர் ஸ்ரீநாத் தோற்கடித்தது உண்மையிலேயே தென்மாவட்ட திமுக, அதிமுகவினரையே ஆடிப்போக வைத்துள்ளது. எப்படி ஜெயித்தார் ஸ்ரீநாத் என்று ஆய்வு செய்து வருகிறார்கள். இத்தனைக்கும் கடைசி நேரத்தில் தான் ஸ்ரீநாத் வேட்பாளராக அறிவிக்கப்படடார். அப்படி அறிவிக்கப்பட்ட ஸ்ரீநாத் இன்று தூத்துக்குடியின் எம்எல்ஏ மட்டுமல்ல.. மீனவளத்துறை அமைச்சரும் கூட ..

விஜய்யின் கட்சிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் த.வெ.க-விற்கு ஆதரவாக மிகப்பெரிய அரசியல் அலை வீசியிருந்தது. விஜய்யின் தீவிர ரசிகர் பட்டாளம், தங்களின் வாக்குகளை முழுமையாகத் த.வெ.க-வின் பக்கம் திருப்பியதால் பல பெரும் தலைவர்கள் தோல்வி அடைந்தனர். அப்படித்தான் தூத்துக்குடியில் கீதா ஜீவன் தோல்வி அடைந்தார். விஜய் மீதான ஈர்ப்பு, ஸ்ரீநாத்தின் வெற்றிக்கு மிக வலுவான அடித்தளமாக அமைந்தது.
ஸ்ரீநாத் சினிமாவில் நடிகராகவும், விஜய்யின் நெருங்கிய கல்லூரி நண்பர் என்று அறியப்பட்டாலும், அவர் தூத்துக்குடி மாவட்டத்தின் மணப்பாடு பகுதியைச் சேர்ந்தவர். இதனால், ஸ்ரீநாத் 'வெளிஆள்' என்ற விமர்சனத்தைத் தாண்டி, அந்த மண்ணின் மைந்தராகவும், குறிப்பாகக் கடலோரச் சமூக மக்களின் ஆதரவைப் பெற்றார். தி.மு.க-வின் மிக வலுவான கோட்டையாகக் கருதப்பட்ட தூத்துக்குடியில் கீதா ஜீவனையே தோற்கடித்தது இன்று வரை பேசுபொருளாக இருக்கிறது.
அதேநேரம் அமைச்சர் ஸ்ரீநாத் குறித்து திமுக மற்றும் அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அந்த வகையில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் அந்த தொகுதியின் எல்லையை ஒட்டியுள்ள திருச்செந்தூர் தொகுதிக்கு உள்பட்ட புன்னகாயலுக்கு சென்று நன்றி தெரிவித்தார்.
இதனை கிண்டல் செய்து அதிமுக ஐடி விங்க் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், தான் வெற்றி பெற்ற தொகுதி எது என்பதைக் கூட அறியாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மற்றொருவர் வெற்றி பெற்ற திருச்செந்தூர் தொகுதியின் ஒரு பகுதியான புன்னக்காயலுக்குச் சென்று தனக்கு வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்து வருகிறார். தனது தொகுதி எல்லை எது என்று கூடத் தெரியாத அளவிற்கு அரசியல் முதிர்ச்சியற்றவர்கள் அமைச்சர்களாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு என்று விமர்சித்துள்ளது.நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் விமர்சித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications