தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட மேம்பால சாலை அமைக்க முடியாதது ஏன் தெரியுமா?
சென்னை: தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உள்ள போக்குவரத்து நெரிசல் என்பது தமிழ்நாட்டில் வேறு எங்குமே இல்லாத போக்குவரத்து நெரிசல் ஆகும்.. ஆனாலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட மேம்பால சாலையை அமைக்க அரசால் முடியவில்லை. இந்த சாலைக்காக நிலம் கூட கையகப்படுத்த வேண்டியது இல்லை.. ஆனாலும் சிக்கலான நிலையே இருக்கும்.. என்ன காரணம் என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம். அதற்கு மாற்று வழியாக அரசு செய்யும் திட்டம் பற்றி பார்ப்போம்.
காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட சில மாவட்ட மக்களே சென்னை வர பெங்களூர் சாலையை பயன்படுத்துகிறார்கள்.. மற்றபடி தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் அத்தனை வாகனங்களும் செங்கல்பட்டு, தாம்பரம் வழியாகவே வருகின்றன. இதேபோல் மேற்கு மாவட்டங்கள்,டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களும் சென்னை வர செங்கல்பட்டு தாம்பரம் சாலையைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை உள்ள சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மின்சார ரயில்கள் ஒரு நாள் ஓடாமல் போனாலும், அந்த சாலையில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நெரிசல் ஏற்படுகிறது. இதேபோல் பீக்அவர்ஸ், வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், சுபமுகூர்த்த தினங்கள், பொங்கல்,தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட பல்வேறு பண்டிகை நேரங்களில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் இடமாக ஜிஎஸ்டி சாலை உள்ளது.இந்த சாலையில் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை உயர்மட்ட மேம்பால சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.
ஏனெனில் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை முழுமையாக ஊராக உள்ளது. பல லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இதன் காரணமாக உள்ளூர் மக்களின் வாகனங்கள், வெளியூர் செல்வோரின் வாகனங்கள் சாலை பிதுங்கி வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்றால், உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.ஆனால் நடைமுறையில் உயர்மட்ட மேம்பால சாலை அமைப்பதில் பல்வேறு சிக்கல் இருக்கிறது.
ஏனெனில் பெருங்களத்தூரில் சாலையின் இருபுறமும் மேம்பாலங்கள் உள்ளன. அடுத்ததாக வண்டலூரில் மேம்பாலம் உள்ளது. அடுத்து கிளாம்பாக்கம் அருகே வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேம்பாலம் உள்ளது.அதன்பிறகு சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மேம்பாலம் இருக்கிறது. இப்படி சாலை முழுக்க மேம்பாலங்கள் அமைந்துள்ளதால் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட மேம்பால சாலை அமைக்க முடியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரம் மாற்று வழியாக கிளாம்பாக்கம் முதல் காட்டாங்குளத்தூர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஏனெனில் இப்போது நெரிசல் என்பது கூடுவாஞ்சேரி,பொத்தேரி, ஊரப்பாக்கம் பகுதியில் தான் அதிகமாக இருக்கிறது என்பதால் இந்த திட்டத்தை அரசு கையில் எடுத்திருக்கிறது.இதுபற்றி அரசு அறிவிப்பு வெளியிட்ட போதிலும், எப்போது இதற்கான பணிகள் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications