தனி வழியில் பெரியார்.. 10,000 பேர் கைதான அரசியலமைப்பு எரிப்பு போராட்டம்! சாதிக்கு எதிரான சண்டமாருதம்
சென்னை: நாடே நவம்பர் 26 ஆம் தேதியான இன்று அரசியலமைப்புச் சட்ட நாள் என கொண்டாடும் நிலையில் தந்தை பெரியார் இந்த நாளை சட்ட எரிப்பு நாள் என அறிவித்து அரசியலமைப்பு சட்ட எரிப்பு போராட்டத்தை முன்னெடுத்தது ஏன் தெரியுமா? விரிவாக பார்ப்போம்.
இன்று அரசியலமைப்பு சட்ட தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, "அரசியலமைப்புச்சட்ட நாள் என கொண்டாடும் இன்றைய நாளில் தான் தந்தை பெரியார் அச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி 1957 நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு சட்ட எரிப்பு போராட்டத்தை முன்னெடுத்தார்.

இப்போராட்டத்தில் தந்தை பெரியார் உள்ளிட்ட 10,000 பேர் கைதானார்கள். சிறைக்குள்ளேயே 5 பேரும் போராட்டக்களத்தில 13 பேரும் வீரச்சாவடைந்தனர். இதில் குறிப்பிடக்கூடிய செய்தி என்னவென்றால், போராட்டத்தில் பங்கெடுத்த 16 வயது சிறுவனான வாளாடி பெரியசாமிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீதிமன்றம் வழங்குகிறது. அப்போது சிறையை பார்வையிடச் சென்ற அன்றைய ஆளுனர் விஷ்ணு ராம் மேதி, "மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்ய பரிந்துரைக்கிறேன்" என்று சொன்ன போது, முடியாது என மறுதலித்தார்.
இத்தகைய போராட்டத்தை தந்தை பெரியார் எதற்காக எரித்தார்?அரசியல் சட்டத்தில் தீண்டாமையை விலக்கிவிட்டு ஜாதி வேற்றுமைக்குப் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் சட்டம் 17 ஆவது பிரிவு "Untouchability is abolished" என்று கூறுகிறது. ஆனால் தீண்டாமைக்குக் காரணமான - "Caste is abolished" என்று கூறவில்லை.
இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில் - உட்பிரிவுகள் 13(2); 25(1); 26; 29(1),(2); மற்றும் பிரிவு 368 ஆகியவை மதத்தை, ஜாதியைப் பாதுகாக்கின்ற வகையில் உள்ளன. ஆகவே, இந்த அரசியல் சட்டத்தின் இப்பிரிவுகளை நீக்க வேண்டும் என்றும், ஜாதி, மதங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற பாதுகாப்பைப் பொதுவான அரசியல் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தந்தை பெரியார் வலியுறுத்தி வந்தார்.
"தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அரசியல் சட்டத்தின் பிரிவு 17-இல் உள்ள 'தீண்டாமை' என்னும் வார்த்தைக்குப் பதிலாக, ஜாதி ஒழிக்கப்பட்டு விட்டது என்று சட்டத் திருத்தம் செய்யுங்கள்" என்று இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தினார். இப்போராட்டத்துக்கு பிறகு தான் அரசியலமைப்புச் சட்டத்தை எரித்தால் எத்தகைய தண்டனை தர வேண்டும் என்பது குறித்த விவாதம் எழுந்தது. சாதி அமைப்பு முறையை பாதுகாக்கும் இப்பிரிவுகளை நீக்க கோரி தந்தை பெரியார் முன்னைடுத்த போராட்டத்தை முன்னெடுப்பது ஒவ்வொருவருடைய கடமையாகும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.


Click it and Unblock the Notifications
