ரூ.1000 உரிமை தொகை பெற புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம்! 4.49 லட்சம் அட்டைகள் ரத்து! ராதாகிருஷ்ணன்
சென்னை: தமிழகத்தில் 4.49 லட்சம் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு, உணவுத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் கடந்தாண்டில் 4.54 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நகர் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை கோபாலபுரத்தில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான கிடங்கை கூட்டுறவு, உணவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தமிழகத்தில் மொத்தம் 36,954 ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை மற்றும் உப்பு போன்றவை இருப்பு உள்ளன. வரும் காலங்களில் மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு வழங்கவும் ஒரு கோடி பாக்கெட் பாமாயில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் 4.54 லட்சம் குடும்ப அட்டைதாரருக்கு நகல் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 4.49 லட்சம் தனிநபர் ஸ்மார்ட் கார்டுகள், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் என்ற அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 58 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ரூ 6.98 கோடி மதிப்புள்ள ரேஷன் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ரேஷன் குறை தொடர்பான புகார்களுக்கு 044-28592828, 1967 மற்றும் 1800 1800 4255901 என்ற எண்களில் புகார் அளிக்கலாம். மேலும், www.tnpds.gov.in என்ற இணையதளத்திலும் புகார்கள் தெரிவிக்கலாம் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டுகள் கேட்டு ஏராளமானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதற்கு முக்கிய காரணம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தினால்தான்.
இந்த அறிவிப்பிற்கு ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை மடமடவென உயர்ந்தது. இதன் பிறகு லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் புதிய ரேஷன் கார்டுகள் குறித்த நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் தேர்தல் முடிந்ததும் ரேஷன் கார்டுகளை வழங்கும் பணியை அரசு முடுக்கிவிட்டது.
அதன்படி புதிதாக 2.8 லட்சம் புதிய ரேஷன் அட்டைகளை வழங்க முடிவு செய்யப்பட்டு அவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இதனால் விரைவில் அவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என தெரிகிறது. தற்போது தமிழ்நாட்டில் 2.24 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் அட்டைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் கூறுகையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக அரசு பல்வேறு தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அதில் கடந்த ஒரு வருடத்தில் 5631 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 6675 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.அது தொடர்பாக 6.98 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரேஷனில் தேர்தலால்தான் பருப்பும் பாமாயிலும் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இனி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முன்கூட்டியே டெண்டர் விட ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ரேஷன் பொருட்கள் முழுமையாக கிடைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications