பலிக்குமா பாஜக வியூகம்? மீண்டும் வலுப்பெறும் ஆர்எஸ்எஸ்? பிளான்கள் தவிடுபொடியாகுமா?
சென்னை: கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில், பிரதமர் மோடி 3 நாட்கள் தியானம் செய்கிறார்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து சில தகவல்கள் வட்டமடிக்க துவங்கியிருக்கின்றன.
இன்றுடன் இறுதிகட்ட பிரச்சாரம் ஓய்கிறது.. இந்த பிரச்சாரம் முடித்த கையோடு மாலை கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி.. ஜூன் 1 வரை மூன்று நாட்கள், விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்கிறார்.

இப்படித்தான் கடந்த 2014ல் மஹாராஷ்ட்ராவின் பிரதாப்கர் கோட்டையிலும், 2019ல் உத்தரகண்டின் கேதார்நாத் குகையிலும், பிரதமர் மோடி தியானம் செய்தார்.. இந்த முறை தேர்தலிலும் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தேர்வு செய்திருக்கிறார். இதற்கு அரசியல் காரணங்களும், ஆன்மீக காரணங்களும் மாறி மாறி சொல்லப்படுகின்றன.
முதல் காரணம்: இதுகுறித்து பாஜக தரப்பில் சொல்லும்போது, "விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், அவருக்கு நினைவு மண்டபம் கட்ட முடிவு செய்தபோது, அன்றைய முதல்வர் பக்தவத்சலமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, அப்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர் குருஜி கோல்வால்கர், நினைவு மண்டபம் கட்டும் பணியை முடிக்கும் பொறுப்பை, ஏக்நாத் ரானடேவிடம் ஒப்படைத்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஹூமாயூன் கபீரின் எதிர்ப்பையும் மீறி, நினைவு மண்டபம் கட்ட முடிவெடுத்த ஏக்நாத் ரானடே, பல்வேறு யுக்திகளை கையாண்டுள்ளார்.. ஜனசங்கம் கட்சியினரும், விவேகானந்தர் பக்தர்களும் கபீருக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். இறுதியில், 300க்கும் அதிகமான எம்பிக்களின் கையெழுத்தைப் பெற்று, பிரதமர் நேருவிடம் அளித்ததையடுத்து, நினைவு மண்டபத்துக்கு அனுமதி பெறப்பட்டது.
அண்ணாதுரை: திமுக தலைவர் அண்ணாதுரையை நேரில் சந்தித்து, அவருடைய ஆதரவையும் ரானடே பெற்றார்.. இப்படி நீண்ட போராட்டத்திற்குப் பிறகே விவேகானந்தர் நினைவு மண்டபம், 1970ல் திறக்கப்பட்டது.
எனவே, விவேகானந்தர் நினைவு மண்டப போராட்டம் என்பது, 1962 முதல் 1970 வரை, ஆர்எஸ்எஸ் ஜனசங்கம் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.. அயோத்தி ராமர் கோவில் போராட்டத்திற்கு ஊக்கம் தந்ததே, இந்தப் போராட்டம் என்பதால், பிரதமர் மோடி இங்கு தியானம் செய்யவிருக்கிறார் என்கிறார்கள். " என்கிறார்கள்.
இரண்டாவது காரணம்: சுவாமி விவேகானந்தர், பாரத மாதாவை தரிசனம் செய்த இடம் கன்னியாகுமரியாகும்.. பார்வதி தேவியும், அதே இடத்தில் பகவான் சிவனுக்காக காத்திருந்தபடி, ஒரே காலில் தியானம் செய்தார்.
கடலில் அமைந்துள்ள இந்த பாறை, சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, அதே இடத்தில் தியானம் செய்வதன் வாயிலாக, விவேகானந்தரின் வளர்ந்த இந்தியாவின் பார்வையை உயிர்ப்பிக்க செய்வதில், பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை காட்டுகிறது என்கிறார்கள்.
மூன்றாவது காரணம்: மேற்கு வங்கத்தில் 9ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க போகிறது.. விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைத்த வரலாற்றில், மேற்கு வங்கத்திற்கும் முக்கிய பங்கு உள்ளதால், பிரதமர் இங்கு தியானம் செய்வதாகவும், இது மேற்கு வங்கத்தில் தாக்கத்தை தரும் என்றும் கூறுகிறார்கள்.
இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் போன்ற அனைத்துமே சங்கமிக்கும் இடம் கன்னியாகுமரி.. எனவே, தேச ஒற்றுமையை வலியுறுத்தவே, இங்கு தியானம் செய்வதாக கூறப்படுகிறது.
நான்காவது காரணம்: கடந்த முறை கேதார்நாத் குகையில் தியானத்துக்கு பிரதமர் சென்றிருந்தார்.. அதற்கு பிறகே 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பெரும்பாலான இடங்களை பாஜகவும் கைப்பற்றியது..
ஆனால், இந்த முறை பாஜகவுக்கு "கள நிலவரம்" அந்த அளவுக்கு ஆதரவாக இல்லையாம். குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் 13 இடங்களில் மட்டுமே நம்பிக்கை கிடைத்திருப்பதாகவும், மற்ற இடங்கள் சாதகமாக இல்லை என்றே தகவல்கள் கூறுகின்றனவாம்..
அதுபோல, பீகாரும் பாஜகவுக்கு சாதகமாக இல்லை. இப்படிப்பட்ட சூழலில்தான், இறுதி கட்டத்தில் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.. இதில் குறைந்தது 30 இடங்களையாவது பெற வேண்டுமென பாஜக நினைப்பதால், இப்படியொரு தியானம் நடத்த பிரதமர் முடிவு செய்திருப்பதாக கூறுகிறார்கள்.
ஐந்தாவது காரணம்: தேர்தல் முடிந்த பிறகும், பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகிறார் என்றால், அது தமிழகத்தின் மீதான மோடியின் ஆழ்ந்த அர்ப்பணிப்பையும், அன்பையும் காட்டுகிறது என்கிறார்கள்.
இதைத்தவிர இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. அதாவது, ஜூன் 1ம் தேதி, இந்தியா கூட்டணி தங்களது கூட்டத்தை நடத்த போகின்றன.. இதனால், நாட்டின் கவனம் முழுக்க இந்தியா கூட்டணி மீதே ஃபோகஸ் செய்யப்படும்.. இந்த கவனத்தை திசைதிருப்பும் வகையில், கன்னியாகுமரி தியான நிகழ்ச்சி இருக்க வேண்டும் என்பதற்காகவே, இப்படியொரு திட்டம் என்கிறார்கள்.
என்ன காரணம்: இன்னும் இப்படி எத்தனையோ காரணங்கள் யூகங்களாக வலம்வந்து கொண்டிருக்கின்றன., இதில் எது உண்மை என்று தெரியவில்லை..
அதேசமயம் இத்தனை அரசியல் எதிர்ப்புகளையும் மீறி, நடுக்கடலில் தியானம் செய்வது, பாஜகவுக்கு சாதகமான முடிவை தேர்தலில் பெற்று தருமா? மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு கல்தா கொடுக்க உதவுமா? ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு உத்வேகத்தை பெற்றுதருமா? வளர்ந்த இந்தியாவை மீண்டும் உயிர்ப்பிக்க உதவுமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!












Click it and Unblock the Notifications