குத்தகை பத்திரம்..தான பத்திரம் இருக்கா? பத்திரப்பதிவு செய்யும்போது இந்த ஆவணங்களின் அவசியத்தை பாருங்க
சென்னை: சொத்துக்களை வாங்கி பத்திரப்பதிவு செய்யும்போது, சிலவகையான ஆவணங்கள் அதி முக்கியத்துவம் பெறுகின்றன.. அந்தவகையில், அத்தகைய ஆவணங்களின் பெயர்கள் என்ன? அந்த பத்திரங்களின் வகைகள் என்ன? என்பதை பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
சொத்துக்களை விற்பனை செய்தவரிடமிருந்து உங்களுடைய பெயருக்கு பதிவு செய்யப்படுவதே ஆவணமாக கருதப்படும்.. இந்த ஆவண பத்திரங்களை பத்திரமாக பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்..

பத்திரங்களின் வகைகள்: விடுதலைப் பத்திரம், பரிவர்த்தனை ஆவணம், உயில் பத்திரம், கிரைய உடன்படிக்கை ஆவணம், பொது அதிகார ஆவணம், சிறப்பு அதிகார ஆவணம், சமாதான பத்திரம், சம்மத பத்திரம் என்று பல வகைகளில் பத்திரங்கள் உள்ளன.
அதேபோல கிரய பத்திரம், செட்டில்மென்ட் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், தான பத்திரம், குத்தகை பத்திரம், உறுதி மொழி பத்திரம், அடமான கடன் பத்திரம், வாடகை ஒப்பந்த பத்திரம், அடமான கடன் பத்திரம் என்றும் பலவகைகளில் பத்திரங்கள் நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்றன.
கிரய பத்திரம்: ஒரு தனியார் நிறுவனம் அல்லது தனி நபர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அல்லது பங்குதாரர்கள், தன்னுடைய அல்லது தங்களுடைய, அல்லது தனியார் நிறுவனத்தினுடைய சொத்துக்களை தனிநபருக்கோ, குடும்ப உறுப்பினர்களுக்கோ, பங்குதாரர்களுக்கோ தனியார் நிறுவனம் உள்ளிட்ட (இன்னொருவர்) பெயருக்கு பணத்திற்காகவே, பொருளுக்காகவோ அல்லது மற்றொரு பிரதி பலனுக்காகவோ ஆவணம் மூலம் சொத்து உரிமை மாற்றம் செய்து கொடுப்பது கிரய பத்திரம் ஆகும்.
செட்டில்மென்டு பத்திரம்: தன்னுடைய சொத்துக்களை அவரது விருப்பத்தின் அடிப்படையில், தனது ரத்த சம்பந்தமான வாரிசுகளுக்கும், மெய்க்காப்பாளர்கள் உள்ளிட்ட மூன்றாம் நபர்களுக்கும் அவரது எண்ணப்படி பிரித்து எழுதி வைக்கப்படும் ஆவணம் செட்டில்மென்டு பத்திரம் ஆகும்.
பாக பிரிவினை பத்திரம் : ஒருவரது சொத்துக்களை அவர் இறந்த பிறகு அவருடைய நேரடி வாரிசுகள் மற்றும் வாரிசுகளின் வாரிசுகளுக்குள் சரிசமமாகவோ அல்லது அவர்களின் விருப்பத்தின் பெயரிலோ பிரித்து தனித்தனியாக சம்பந்தப்பட்டவர்களது பெயருக்கு ஆவணமாக பதிவு செய்து கொடுப்பதை பாகப் பிரிவினை பத்திரம் என்பர்.
தான பத்திரம்: ஒருவருக்கு சொந்தமான சுய சம்பாத்திய சொத்துக்களை குடும்ப உறுப்பினர் மற்றும் மூன்றாம் நபர் என யார் ஒருவருக்கும் பணம் அல்லது வேறு பிரதி பலன் போன்ற எவ்விதமான பயனையும் எதிர்பார்க்காமல் தாமாக முன்வந்து தானமாக எழுதி கொடுக்கும் ஆவணம் தானப்பத்திரம் எனப்படும்.
குத்தகை பத்திரம்: ஒருவருக்கு சொந்தமான சொத்தின் மீது ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு அந்த தொகைக்கு ஈடாக வட்டி ஏதும் இன்றி சம்பந்தப்பட்ட சொத்தை அனுபவித்துக் கொள்ளும் உரிமையை வழங்குவது. ஒருவேளை நிலமாக இருந்தால் விவசாயத்தை மேற்கொள்வதற்கு வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து பெற்றுக் கொண்டும், அல்லது விலைகின்ற தானியத்தில் ஒரு பகுதி என நிர்ணயித்து பெற்றுக்கொள்ளும் வகையில் எழுதிக் கொடுக்கும் ஆவணம் குத்தகை ஆவணம் எனப்படும்.
உறுதிமொழி பத்திரம்: சொத்தின் மீது அல்லது ஆவணத்தின் மீது தனி நபர் அல்லது நிறுவனம் சொல்ல நினைப்பது, செய்ய நினைப்பது, மாற்றியமைக்க நினைப்பது, அதில் குறிப்பிடும் விபரங்கள் அனைத்தையும் உண்மையாக நிறைவேற்றும் வகையில் எழுதிக் கொள்ளும் பத்திரம் உறுதிமொழி ஆவணம்.
அடமான கடன் பத்திரம்: தனது பெயரில் உள்ள சொத்து சம்பந்தமான ஆவணத்தின் மீது வங்கியிலோ அல்லது நிதி நிறுவனத்திலோ அல்லது தனியார் நபர்களிடத்திலோ கடனைப் பெற்றுக் கொண்டு அந்த கடனுக்கான வட்டி விகிதம், காலக்கெடு, நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை எழுதி பதிவு செய்து கொடுக்கும் ஆவணம் அடமான கடன் பத்திரம் ஆகும்.
பிழைதிருத்தம் பத்திரம்: பொதுவாக எந்தவிதமான ஆவணத்தையும் எழுதி பதிவு செய்யும் போது அதில் ஏற்படுகின்ற தவறுகளை சரி செய்யும் வகையில், பிழையை நீக்கி, (குறிப்பாக சொத்து விவரத்தில் பிழை, நான்கு பக்க எல்லைகள் மற்றும் அளவுகளில் பிழை, புல எண் அல்லது உட்பிரிவு எண்ணில் பிழை, தாய் பத்திர எண் குறிப்பிடுவதில் பிழை போன்றவை) சரியானவற்றை எழுதி பதிவு செய்துகொள்ளும் ஆவணம் பிழைதிருத்தம் பத்திரம் எனப்படும்.
வாடகை ஒப்பந்த பத்திரம்: தங்களுக்கு சொந்தமான சொத்தினை மூன்றாம் நபருக்கு அல்லது நிறுவனத்துக்கு வாடகைக்கு விடும் இனங்களில் முன்தொகை, மாத வாடகை, மின் இணைப்பு கட்டணம், குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி, பராமரிப்பு கட்டணம் மற்றும் உபகரணங்கள், ஒப்பந்த கால அவகாசம், கால நீட்டிப்பு உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு எழுதி கொடுக்கும் ஒப்பந்த பத்திரம் வாடகை ஒப்பந்தத்தை பத்திரம் எனப்படும்.












Click it and Unblock the Notifications