Exclusive: "மசூதி முன் போராட்டம் நடத்த சொன்னார்கள்' - பாஜகவில் இருந்து விலகிய Dr. சரவணன் பகீர்
சென்னை: பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய டாக்டர் சரவணன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
Recommended Video
சமீபத்தில் எல்லையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் லட்சுமணன் உயிரிழந்தார். அவரது உடல் மதுரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக விமான நிலையத்தில் லட்சுமணன் உடலுக்கு அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தி விட்டுத் திரும்பிய போது, அவரது கார் மீது செருப்பு வீசப்பட்டது.
Exclusive: "மெசேஜ் வந்தது.. அண்ணாமலை சொல்லியே செய்தேன்!" பிடிஆர் கார் தாக்குதல்.. Dr. சரவணன் பரபர

சர்ச்சை
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் பாஜகவினர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்றைய தினமே அமைச்சர் பிடிஆரை நேரில் சந்தித்து டாக்டர் சரவணன் வருத்தம் தெரிவித்தார். மேலும், பாஜகவில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

டாக்டர் சரவணன்
இதற்கிடையே பாஜகவில் இருந்து விலகியது குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் ஒன் இந்தியா தமிழ் தளத்திற்கு டாக்டர் சரவணன் அளித்த சிறப்புப் பேட்டியில் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "பாஜக மத அரசியல் செய்வார்கள் என முன்பே தெரியும்தான். ஆனால் இந்த அளவுக்கு மோசமான வெறுப்பு அரசியலில் ஈடுபடும் என்று எனக்குத் தெரியாது. மாவட்டத் தலைவராக என்னை நியமித்த பின்பு எனக்குக் கொடுக்கப்பட்ட சில உத்தரவுகளை நிறைவேற்றும் போது தான் அதெல்லாம் எனக்குத் தெளிவாகப் புரிந்தது" என்றார்,

தேர்தல் சமயம்
ஒரே ஆண்டில் கட்சியிலிருந்து விலக என்ன காரணம் என்ற கேள்விக்குப் பதில் அளித்த டாக்டர் சரவணன், "தேர்தல் சமயத்தில் எனக்குச் சீட்டு கொடுத்தார்கள். அப்போது வாக்கு சேகரிக்கச் சென்ற போது, அங்கு என்னைச் சந்தித்த சிறுபான்மையினர் பலரும் நீங்கள் எங்களுக்குப் பல சமூக சேவைகளைச் செய்திருந்தாலும் எங்களால் பாஜகவிற்கு வாக்களிக்க முடியாது என்றே கூறினர். இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் நுழையவோ விடவில்லை.

மத ரீதியான விஷயம்
மருத்துவராக மெடிக்கல் கேம்ப் நடத்திய இடங்களுக்குக் கூட என்னால் பாஜக வேட்பாளராகச் செல்ல முடியவில்லை. இதையெல்லாம் தாண்டி தான் நான் பாஜகவில் தொடர்ந்தேன். இவர்கள் பொதுவாக மக்களின் பிரச்சினைகள் குரல் கொடுப்பதில்லை. இந்து வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதற்காக மதரீதியான விஷயங்களைக் கையில் எடுக்கிறார்கள். இது தமிழ்நாடு அரசியலுக்கு உகந்ததில்லை. பாஜக கூட்டங்களிலேயே இது குறித்து என்னிடம் கேட்கும் போது, நான் இதை அவர்களிடமே வெளிப்படையாகக் கூறி உள்ளேன்.

பள்ளிவாசலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
சமூக சேவைகளைச் சென்று பாசிட்டிவான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. இதைத் தாண்டி மாவட்ட தலைவராக திடீரென்று பள்ளிவாசலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய் வேண்டும் என்று கூறுவதெல்லாம் என்னால் செய்ய முடியவில்லை. பாஜக சார்பில் நடத்தப்படும் 60- 70% போராட்டங்கள் மத ரீதியானதாகவே இருக்கும். இப்படிப்பட்ட நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டே சென்றது.

விலகும் முடிவு
இதனால் கடந்த ஆறு, ஏழு மாதங்களுக்கு முன்பே நான் கட்சியில் இருந்து விலகலாம் என்று இருந்தேன். அப்போது தலைமையில் இருந்து என்னை அழைத்து சில சமரசங்களை முன் வைத்தனர். காயங்களுடனே இத்தனை காலமாக அங்கு நான் பயணித்தேன். இந்த சூழலில் தான் அமைச்சர் கார் மீதான தாக்குதல் உச்சபட்சமாக அமைந்தது. இப்படி ஒரு நாசக்கார செயலுக்குப் பின்னர் என்னால் அங்குத் தொடர முடியாது அதனால் தான் வெளியேறினேன்" என்றார்.