தமிழகம் முழுக்க நடந்த போராட்டம் வாபஸ்.. நாளையில் இருந்து பணிக்கு திரும்புவதாக டாக்டர்கள் அறிவிப்பு
சென்னை: சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். நெல்லை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை கிண்டி மருத்துவமனையிலும் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும், நாளைக்கு பணிக்கு திரும்புவதாகவும் தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்தது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரசு மருத்துவமனையின் புற்றுநோயாளிகளுக்கான பிரிவில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் பாலாஜி. நேற்று மருத்துவர் பாலாஜியை வாலிபர் ஒருவர் கத்தியால் 7 இடங்களில் வெட்டினார். புற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி அந்த இளைஞர் மருத்துவரை தாக்கியுள்ளார்.

அரசு மருத்துவமனைக்குள் சென்று மருத்துவரையே கத்தியால் வெட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்றைய தினமே கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். எனினும் தமிழக அரசு மற்றும் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
மருத்துவரை கத்தியால் வெட்டிய இளைஞர் விக்னேஷ்வரனை போலீசார் கைது செய்தனர். இன்று கத்தியால் தாக்கப்பட்ட மருத்துவர் பாலாஜி நலமுடன் இருக்கும் வீடியோ வெளியிடப்பட்டது. இன்று காலையில் மருத்துவர் பாலாஜியை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது கத்தியால் குத்தப்பட்ட பாலாஜி உணவு சாப்பிடுவதாகவும், நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.
இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிண்டி மருத்துவமனையில் இன்று காலை 10 மணியளவில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், டாக்டர்கள் மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது போன்ற சம்பவங்கள் பெரும் அச்சுறுத்தல் என்றும், மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கூறி போராட்டம் செய்தனர்.

கிண்டி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இன்று மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புறநோயாகளிகளுக்கான சிகிச்சை பாதிக்கப்பட்டது.
பணி பாதுகாப்பு, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கோரியும் மருத்துவர்கள் போராட்டம் செய்தனர். நெல்லையில் உள்ள அரசு மருத்துவமனையிலும், மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இவ்வாறு தமிழகத்தின் பல அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அரசு மருத்துவமனைக்கு வந்த புற நோயாளிகள் கடும் சிரமமடைந்தனர். காலை 8 மணிக்கு வந்ததாகவும், ஆனால் 2 மணி நேரம் ஆகியும் மருத்துவர்கள் வரவில்லை என்றும் அவர் கூறினர்.
இதையடுத்து அமைச்சர் மா சுப்பிரமணியனுடன் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்தது. நாளை முதல் பணிக்கு திரும்புவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். அவசர சிகிச்சை பிரிவு, உயிர் காக்கும் பிரிவு தவிர மற்ற எந்த துறையும் செயல்படாது என்று தெரிவித்து இருந்தனர். இதனால் டாக்டர்கள் இன்று பணிக்கு வராததால் பல புற நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்துவிட்டு திரும்பி சென்றனர்.
இதற்கிடையே சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் போலீஸ் பூத் அமைக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள 19 அரசு மருத்துவமனைகளில் 9 அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே போலீஸ் பூத் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications