பேச்சு ஒரு மாதிரி இருக்கே.. உற்றுப் பார்த்த எடப்பாடி.. “கேம் சேஞ்ச்”.. டெல்லிக்கு டிக்கெட்! ரைட்டு!
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுவிட்டுத் திரும்பிய பிறகான அவரது பேச்சுகளை உன்னிப்பாக கவனித்து வரும் எடப்பாடி பழனிசாமி, விரைவில் டெல்லிக்குப் பறக்க இருக்கிறாராம்.
டெல்லி சென்று அமித்ஷா, ஜேபி நட்டா ஆகியோரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அவர்களைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறாராம்.
டெல்லியில் இருக்கும் பாஜக மேலிட புள்ளிகளுக்கு நெருக்கமான அதிமுக எம்.பி மூலம் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவாம்.

அண்ணாமலையின் அதிரடி
தமிழ்நாட்டில் பாஜக வளர வேண்டும் என்றால் அதிமுக - திமுக ஆகிய கட்சிகளோடு கூட்டணி வைக்கக்கூடாது. அதிமுகவை நம்பியிருக்கக் கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைமை சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன் பாஜக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது பாஜகவுக்குள் மட்டுமல்லாது, தமிழ்நாடு அரசியல் அரங்கிலும் அனலைக் கிளப்பிவிட்டது.

கணக்கு
அதிமுக இல்லாமல் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி இல்லை என்கிற முடிவில் டெல்லி தலைமை உறுதியாக இருக்கிறதாம். ஆனாலும், பாஜக தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்றே அண்ணாமலை விரும்புகிறார். அப்போது தான் அதிக சீட்களில் தாங்கள் போட்டியிடுவதோடு, அதிக வாக்கு சதவீதத்தையும் பெற்று தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை பறைசாற்ற முடியும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் அண்ணாமலை. சசிகலா, தினகரன், ஓபிஎஸ் உள்பட தான் விரும்பும் அனைத்துத் தரப்பையும் கூட்டணியில் இணைத்து கூட்டணிக்கு தலைமை வகிக்க விரும்புகிறார் அண்ணாமலை. அதற்காக சில பல கணக்குகளையும் கையில் வைத்திருக்கிறார் அண்ணாமலை.

திமுக + அதிமுக
2014 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி இல்லாமல் 3-வது அணியாக பாஜக கூட்டணி களமிறங்கியது. பாஜக அணி 18% வாக்குகளைப் பெற்றது. அப்போது சேலத்தில் அன்புமணியும், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனும் மட்டும் வெற்றி பெற்றனர். ஆனால், 2019ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதன் பிறகு உள்ளாட்சி தேர்தலில் தனித்துக் களமிறங்கி, பல இடங்களில் வெற்றி பெற்றது பாஜக. இப்போதும் அதேபோல் தங்களுடன் இணக்கமாக உள்ள கட்சிகளை வைத்து மூன்றாவது அணியை கட்டமைக்கலாம் என அண்ணாமலை கணக்குப் போடுகிறாராம். அடித்துப் பிடித்து சில சீட்களை வென்று விட்டால், அப்படியே இந்த கூட்டணியை 2026 சட்டமன்றத் தேர்தல் வரை நீட்டித்துக் கொள்ளலாம் என்பதுதான் அண்ணாமலையின் திட்டம் என்கிறார்கள். இதன் மூலம் திமுக, அதிமுகவுக்கு போட்டியாக தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்திவிடலாம் என்பது அண்ணாமலை ஐடியாவாம்.

பிரஷர் கொடுக்கலாம்
ஆனால், இப்போதைக்கு அதிமுக இல்லாமல் தமிழ்நாட்டில் தேர்தலை சந்திக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கும் டெல்லி பாஜக தலைமை, அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்துப் பேசியது. பாஜகவை சொந்தக் காலில் நிற்கவைக்க முடியும் என்று உறுதியாக நம்பும் அண்ணாமலை, தலைமையிடமும் இதுபற்றிப் பேசியுள்ளார். ஆனால், தேசிய தலைமையோ, 2024 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்வது அவசியம் என்று அண்ணாமலைக்கு அறிவுறுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், பாஜகவுக்கு கூட்டணியில் சீட் அதிகம் வேண்டும் என்ற வகையில் அதிமுகவுக்கு பிரஷர் கொடுக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உற்று கவனிக்கும் எடப்பாடி
இந்நிலையில் தான் டெல்லியில் இருந்து திரும்பி வந்த அண்ணாமலை, கூட்டணி பற்றி தேசிய தலைமை முடிவெடுக்கும் என்று சொன்ன கையோடு, கூண்டுச்சிறையை விட்டு கிளி பறக்கத் தயாராகிவிட்டது என்று பொடி வைத்தும் பேசினார். அண்ணாமலையின் இந்தப் பேச்சுகளை எடப்பாடி பழனிசாமி உன்னிப்பாக கவனித்து வருகிறாராம். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், பாஜக தேசியத் தலைவர் நட்டாவையும் சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்ததும், எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணத்திற்கு ரெடியாவார் என்கிறார்கள்.

எடப்பாடிக்கு புரிந்தாலும்
தமிழ்நாட்டில் தங்கள் துணையுடன் பயணிக்க விரும்பும் பாஜக, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளைப் போலவே தங்களையும் கையாள நினைக்கிறது என்பதை எடப்பாடி பழனிசாமியும் புரிந்து கொண்டிருந்தாலும், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சி, மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்புள்ள கட்சி என்ற அளவில் பாஜக தலைமையுடன் இணக்கமான போக்கையே கையாள விரும்புகிறாராம் எடப்பாடி பழனிசாமி. மேலும், அதிமுக உட்கட்சி விவகாரத்திலும், தேர்தல் ஆணையம் கை கொடுக்க வேண்டும் என்பதால், பாஜக தலைமையின் தயவு அவசியம் தேவை என்று கருதுகிறாராம் எடப்பாடி பழனிசாமி.

டெல்லிக்கு விசிட்
சமீபத்தில் தம்பிதுரையை அனுப்பி மோடியை சந்திக்க வைத்த எடப்பாடி பழனிசாமி, எப்போதும் தங்களது ஆதரவு பாஜகவுக்குத் தான் என்பதை அவரிடம் நேரில் உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில், அண்ணாமலையின் பேச்சுகள், பாஜக தலைவர்களின் மனதை மாற்றிவிடக்கூடும் என்ற நிலையில் தான், பாஜக உடனான உறவை வலுப்படுத்தும் வகையில் டெல்லி பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் என்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு வந்து தங்களைச் சந்திக்க அமித்ஷாவும், நட்டாவும் நேரம் கொடுத்துவிட்டாலே, ஈபிஎஸ்ஸின் முயற்சிக்கு பாதி வெற்றி தான் என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications