“ஆளுநர் பொய் சொன்னால் வழக்கு தொடர முடியுமா?” - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் பதில்
சென்னை: தமிழ்நாடு அமைதிப் பூங்காதான் என்பதை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லி இருக்கிறது உச்சநீதிமன்றம். ஆளுநர் ஆர்.என்.ரவி முன்வைத்த கருத்திற்கு முற்றிலும் எதிரான கருத்தைச் சுட்டிக் காட்டி இருக்கிறார் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட்.
கடந்த கடந்த ஏப்ரல் பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக மணீஷ் காஷ்யப் வதந்தி பரப்பிவந்த கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கு தற்சமயம் தமிழ்நாட்டில் நடந்துவருகிறது. இதற்கிடையே தனது மீதான தேசியப் பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி யூடியூபர் மணீஷ் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அதனை உச்சநீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்துள்ளது. அத்துடன் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் பொது அமைதியைச் சீர் குலைக்கும் வகையில் எதையும் பதிவிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதி ஆளுநர் ஆர்.என். ரவியின் பேட்டிக்கு மாறான ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார். அந்தக் கருத்து இப்போது திமுகவின் நிலைப்பாட்டுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்து பற்றி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரனிடம் பேசினோம். அவர், "ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எனக்கு ஒரே ஒரு கேள்வி இருக்கிறது. இவர் ஒரு முன்னாள் எஸ்.பி. தானே. அவர் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் அவரது மாவட்ட எல்லைக்குள் ஒரு கொலை சம்பவம்கூட நடைபெற்றதே இல்லையா?

ஒருவேளை இவர் அதிகாரியாகப் பொறுப்பிலிருந்த காலத்தில், ஏதேனும் ஒரு கொலை நடந்ததை வைத்து அந்த மாவட்டம் முழுவதுமே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று ஒருவர் சொன்னால் அதை இவர் ஏற்றுக் கொள்வாரா? உலகில் குற்றங்கள் நடைபெறாத ஒரு மாநிலமோ அல்லது ஒரு நாடோ எங்கும் இல்லை.
எதை நாம் நல்ல அரசு எனச் சொல்கிறோம். ஒரு குற்றம் நடைபெற்றால் உடனடியாக எந்த பாரபட்சமுமின்றி உடனடியாக எது நடவடிக்கை எடுக்கின்றதோ அதைத்தான் நாம் நல்ல அரசு என்று சொல்கிறோம்.

பாரபட்சமாக ஒரு அரசு நடந்து கொள்கிறது என்றால், அதை மக்கள் சுட்டிக்காட்ட வேண்டும். அப்படிச் சுட்டிக் காட்டும் போது அரசு அதை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதானே நடைமுறை? உலக வழக்கம்?
ஆனால், ஆளுநர் ஆர் என் ரவி ஆங்கில பத்திரிகைக்கு அளித்த தகவல்கள் பொய்யானவை என்று சொல்லி பக்கம் பக்கமாக அமைச்சர் தங்கம் தென்னரசும் பொன்முடியும் விளக்குகிறார்கள். என்னிடம் ஒரு மசோதா கூட நிலுவையில் இல்லை என ஆளுநர் சொல்லி இருக்கிறார்.

அதற்கு அமைச்சர்கள் மசோதாக்கள் நிலுவையில் உள்ளன என ஆதாரத்துடன் பதிலளித்திருக்கிறார்கள். அதன்பிறகு ஏன் ஆளுநர் விளக்கம் அளிக்கவில்லை? அவர்தானே விளக்கம் தரவேண்டும்? அப்படி என்றால் கவர்னர் என்கிற மாண்பையே குறைக்கின்ற விதத்தில்தானே ரவி நடந்துகொண்டுள்ளார்?
கல்வித்தரம் குறித்து இந்தியளவில் போடப்பட்ட பட்டியலில் 100 இடத்திற்கும் கீழாகச் சென்றுவிட்டது தமிழ்நாடு என்று ஆளுநர் பொய் சொல்கிறார். இந்திய அளவில் ஒட்டுமொத்த சிறந்த 100 கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் 18 இடங்களில் தமிழ்நாடுதான் உள்ளது.
நமது மாநிலக் கல்லூரி 3வது இடத்தில் இருப்பதாக உயர்கல்வி அமைச்சர் சொல்கிறார். ஆனால், ஆளுநர் எந்த ஆதாரமும் இல்லாமல் போகின்ற போக்கில் பேசி இருக்கிறார்.

ஒருவேளை உயர்கல்வி அமைச்சரின் தகவல் தவறு என்றால் உடனடியாக ஆளுநர் மறுத்திருக்க வேண்டாமா? ஏன் வாயை மூடிக் கொண்டிருக்கிறார். பொய்களைப் பரப்பி, ஒரு மாநிலத்தின் கவுரவத்தைக் குலைக்கின்ற வேலையைச் செய்வதற்கு ஆளுநர் தேவையா இங்கே? இவருடைய நோக்கமே துர்நோக்கமாகவே உள்ளது" என ஆவேசமாகப் பேசுகிறார் பாலசந்திரன்.
அவரிடம் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக உள்ளது என்பது குறித்த கேள்வியை முன்வைத்தோம். அதற்கு பாலசந்திரன், "சுருக்கமாகச் சொன்னால் உச்சநீதிமன்றம் மறைமுகமாக ஆளுநரின் மண்டையில் ஒரு கொட்டு கொட்டி இருக்கிறது.

ஆனால், அதைப்பற்றியெல்லாம் அவருக்குக் கவலை இல்லை. முன்பே ஒருமுறை ஆளுநர் என்பவர் அவருடைய வேலையை மட்டும் பார்க்கவேண்டும். எந்த மாநிலத்திற்கு அவர் நிர்வாகியாக உள்ளாரோ அந்த மாநிலத்திற்கு எதிராகப் பொதுவெளியில் பேசக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அதன்பிறகுதான் அதிகம் பேசுகிறார்கள். நாம் என்ன செய்ய முடியும்?" என்கிறார்
மேலும் அவரிடம் சில விளக்கங்களைக் கேட்டோம். சட்டசபையில் உண்மைக்குப் புறம்பான ஒரு தகவலை யாரும் பேச முடியாது. அப்படிப் பேசினால், அதற்கு எதிராக வழக்குத் தொடரலாம். அதே விதி ஆளுநருக்குப் பொருந்தாதா? உயர்கல்வியின் தரம் குறைந்துவிட்டது என்கிறார் ஆளுநர்.
ஆனால், ஆதாரப்பூர்வமாகப் பட்டியலில் 3வது சிறந்த கல்லூரியாக மாநிலக் கல்லூரி உள்ளது என விளக்கம் அளித்துள்ளார் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி. அப்படி எனில் தவறான தகவலைத் தரும் ஆளுநர் மீது வழக்கு தொடர முடியாதா? என்றோம்.
"மக்கள் மத்தியில் ஒரு குழப்பம் பல காலமாக நிலவுகிறது. ஆளுநர் என்ற முறையில் செய்கின்ற காரியங்களை எதிர்த்துத்தான் வழக்கு தொடர முடியாதே ஒழிய, அவர் மீது வேறு காரணங்களுக்காக வழக்குத் தொடர முடியும்.

இவர் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறுகிறார். அதை அவர் ஆளுநராக இருந்து சொல்லவில்லை. ஆளுநர் என்ற முறையில் சொல்ல அவருக்கு சட்டப்படி 3 வழிகள் உள்ளன. முதலமைச்சரை அழைத்துச் சொல்லலாம். இது முதல் வழி. அல்லது எழுத்துப்பூர்வமாகக் கடிதம் எழுதலாம். இது 2வது வழி. அல்லது குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பலாம். அது 3வழி.
இன்னொன்றையும் சொல்கிறேன். ஒவ்வொரு ஆளுநரும் மாதம் ஒருமுறை தனது மாநிலத்தின் நிர்வாகத்தைப் பற்றி குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பவேண்டும். அதை விட்டுவிட்டு தத்துப் பித்து என இவரைப் போல பொதுவெளியில் உளறக்கூடாது.
கேரளாவில் 50 ஆயிரம் பெண்கள் காணாமல் போனதாகப் படம் எடுக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள இந்தியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் அறிக்கையோ குஜராத்தில் கடந்த 5 வருடங்களில் 40 ஆயிரம் பெண்களைக் காணவில்லை என்கிறது. தினம் 25 பெண்கள் மாயமாவதாகச் சொல்கிறது. அதற்கு இவர்களின் பதில் என்ன?
அதானிக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என்றால் பிரதமர் பதில் சொல்ல மாட்டார். ஷெல் கம்பெனியில் 20 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிறதே அது யார் பணம் எனக் கேட்டால் பதில் சொல்லமாட்டார்.
மாறாகக் கேள்வி கேட்டவரின் எம்.பி பதவி பறிபோகும். இந்த 20 ஆயிரம் கோடியும் உங்கள் பணம்தான் என கெஜ்ரிவால் சொன்னால் அவர் மீது சிபிஐ பாயும். பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என பாரதி சொன்னது இப்போது உண்மையாகிக் கொண்டுள்ளது" என்கிறார்












Click it and Unblock the Notifications