செந்காந்தல் கிழங்கை சாப்பிட்டவர் பலியானது எப்படி? கிழங்கில் உள்ள அந்த விஷ(ய)ம் என்ன? டாக்டர் பரூக்
சென்னை: ஆம்பூர் அருகே செங்காந்தல் செடியின் கிழங்கை சாப்பிட்ட இளைஞர் பலியானது எப்படி என்பது குறித்து சிவகங்கை அரசு பொது மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது செங்காந்தள் செடியின் கிழங்கை இயற்கை மருந்து என்று சாப்பிட்ட இளைஞர் மரணமடைந்திருப்பது துரதிருஷ்டவசமானதாகும். இது குறித்த எனது விளக்கம் : செங்காந்தள் என்பது பன்னெடுங்காலமாக மருந்தாகப் பயன்பட்டு வரும் மூலிகைச் செடியாகும். இதன் அறிவியல் பெயர் "Gloriosa superba".
இத்தகைய செங்காந்தள் குறித்து எகிப்திலும் சரி நமது சங்க கால நூல்களிலும் சரி குறிப்புகள் உள்ளன. இந்தச் செடியின் மலர் இலை வேர் குறிப்பாக கிழங்கில் கோல்ச்சிசின் (COLCICHINE ) எனும் மருந்து மூலப்பொருள் இருக்கிறது. இதன் காரணமாக இந்த செடி ஆயுர்வேதம், சித்தா , யுனானி மருத்துவப் பிரிவுகளில் கீல் வாதம் , மூட்டு வலி போன்ற ரியூமாடிக் பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்பட்டு வந்திருக்கிறது. பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

நவீன மருத்துவம்
நவீன மருத்துவத்தில் இந்த கோல்சிசின் - கீல்வாதம் எனும் கவுட் பிரச்சனைக்கும் , மெடிட்டரேனியன் ஃபீவர் எனும் நோய்க்கும மருந்தாகப் பயன்பட்டு வருகிறது. இந்த மருந்தின் பிரச்சனை யாதெனில் இதற்கு NARROW THERAPEUTIC INDEX உள்ளது. அதாவது நோயை சரிசெய்ய கொடுக்கப்படும் மருந்தின் டோஸுக்கும் அபாயகரமான பக்கவிளைவுகளை உண்டாக்கும் டோஸ்க்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்காது.

மருந்தின் அளவு
எனவே கொஞ்சம் இந்த மருந்தின் அளவு கூடினாலும் பல அபாயகரமான பக்க விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். எனவே இந்த மருந்தை மருத்துவர் பரிந்துரை இன்றி உட்கொள்வது ஆபத்தானது. இந்த கோல்சிசின் மருந்து கீழ்வாத நோய்க்கு தினமும் 1.2 மில்லிகிராம் என்ற அளவில் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் இந்த செங்காந்தள் கிழங்கில் சுமார் 350 மில்லி கிராம் வரை கோல்சிசின் இருக்கக்கூடும்.

மரணிக்க செய்யும் அளவு
ஒருவரை மரணிக்கச் செய்ய 7 முதல் 26 மில்லிகிராம் அளவு கோல்சிசின் போதுமானது எனும் போது இந்த இளைஞர் எத்தனை கிழங்குகளை சாப்பிட்டார் என்று தெரியவில்லை. கட்டாயம் உயிரைப் போக்கும் அளவு அவர் சாப்பிட்டிருக்கக் கூடும் என்பது திண்ணம். முதலில் வாந்தி வயிற்றுப்போக்கு எனும் ஆரம்பித்து பிறகு படிப்படியாக சிறுநீரகம், கல்லீரல் என்று உறுப்புகளை செயலிழக்கச் செய்து மரணத்தை தரவல்லது.

மருந்து செடியின் விதை
இந்த விஷம் இந்தச் மருந்துச் செடியின் விதைகள் மற்றும் கிழங்குகள் மருத்துவ குணத்திற்காக நல்ல விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆயினும் மருத்துவத்தை இயற்கை மருத்துவம். பாட்டி மருத்துவம், வீட்டு மருத்துவம் என்ற பெயரில் கையில் எடுத்து இது போன்ற அசம்பாவிதங்களில் சிக்கிக் கொள்வது தவறு. முறைப்படி மருத்துவம் பயின்ற மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவது தான் நல்லது. தானாக இவ்வாறான செய்தித் துணுக்குகளைப் படித்து சுய சிகிச்சை செய்யும் போது உயிருக்கு ஆபத்து நேரிடும் என்பதற்கு இது போன்ற செய்திகள் சாட்சி. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications