பாமகவுக்கு கூட்டணி கதவை "தட்டியும்" திறக்காத திமுக? ஃபேஸ்புக்கில் ராமதாஸ் அப்படி எழுதியது ஏனாம்?
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவுடன் பாமகவும் இடம் பெற்றிருந்தது. பாமக தலைவரான அன்புமணிக்கும் ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்தது.

தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகிவிட்டது. இதனையடுத்து தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக அமைக்கப் போகும் கூட்டணிகளில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்பது விவாதமாக நடந்து வருகிறது.
திமுக கூட்டணி: லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வலிமையாக இருக்கிறது. ஆனால் பாஜகவுடனான கூட்டணியில் இருந்து அதிமுக விலகிவிட்டதால் திமுக அணியில் இருக்கும் சில கட்சிகள், அதிமுக பக்கம் தாவக் கூடும் என கூறப்படுகிறது. இருப்பினும் திமுக கூட்டணிக் கட்சிகளோ 'எங்களுக்கான தொகுதிகளை கேட்போம்; வேறு முடிவு எடுப்போம்' என்றெல்லாம் பேசினாலும் அந்த கூட்டணியிலேயே நீடிப்பதையே தற்போது வரை உறுதி செய்து வருகின்றன.
விசிக, தவாக நிலைப்பாடுகள்: இந்நிலையில் பாமகவும் கூட்டணி குறித்து முடிவெடுப்பதில் தவித்து வருகிறது. பாமகவுக்கு பாஜக, அதிமுக மற்றும் திமுக ஆகிய 3 கட்சிகளின் கூட்டணிக்கான வாய்ப்பு இருக்கிறது. அதிமுக- திமுக கூட்டணி ஆகியவற்றில் ஒன்றில் பாமக இடம் பெற்றால் அத்தனை கூட்டணிகளும் தலைகீழாக மாறும் நிலைமை உள்ளது. பாமக இடம் பெறும் அணியில் விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சிகள் இருக்காது. பாமக, விசிக, தவாக ஆகிய மூன்றும்தான் தமிழ்நாட்டின் புதிய கூட்டணியை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கின்றன.

பாமக தலைவர் அன்புமணி முயற்சி: இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெறுவதற்கு பாமக முயற்சிப்பதாக தொடர்ந்து கூறப்படுகிறது. அண்மையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து திமுகவை நோக்கி பாமக நகருகிறதா என்கிற கேள்விகள் எழுந்திருந்தன. ஆனால் வன்னியர் உள் இடஒதுக்கீடு தொடர்பாகவே திமுகவுடன் 'அத்தனை' பேச்சுகளும் நடப்பதாக பாமக தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
டாக்டர் ராமதாஸ் ஃபேஸ்புக் பதிவு: இப்பின்னணியில்தான் "தட்டுங்கள், திறக்கப்படும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்பார்கள். இவர்கள் கேட்கப் போகிறார்கள். ஆனால், எதுவும் கொடுக்கப்படப் போவதில்லை" என பூடகமான ஒரு பதிவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இப்பதிவு பாமகவினரிடையே மட்டுமல்ல அரசியல் வட்டாரங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
வன்னியர் இடஒதுக்கீடு: பாமகவினரைப் பொறுத்தவரை வன்னியர் உள் இடஒதுக்கீட்டுக்கான டாக்டர் அன்புமணி ராமதாஸின் முயற்சியைத்தான் இப்படி சுட்டிக்காட்டி எழுதி இருக்கிறார் டாக்டர் ராமதாஸ் என நினைக்கின்றனர். இதனாலேயே அவரது ஃபேஸ்புக் பதிவின் கீழ் பதிலளித்துள்ள பாமகவினர், "அய்யா ஆணையிட்டால் உடனே போராட்டத்துக்கு தயார்; முப்படைகளும் தயார்" என கொந்தளித்து கொண்டிருக்கின்றனர்.

திமுகவுடன் கூட்டணி முயற்சி: ஆனால் அரசியல் வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, கூட்டணிக்காகவே திமுகவின் கதவை பாமக தட்டிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே திமுக கூட்டணியில் விசிக, தவாக இருக்கின்றன. இந்த கட்சிகள் வெளியேறுவதை திமுக தலைமை விரும்பவில்லை. அதனால் பாமகவை கூட்டணிக்குள் அனுமதிப்பது குறித்து ரொம்பவே திமுக தலைமை தயக்கம் காட்டுகிறது என்கின்றனர்.
ராமதாஸ் பதிவுக்கான காரணம்: அத்துடன் வன்னியர் உள் இடஒதுக்கீட்டுக்காக ராமதாஸ் அப்படி பதிவு எழுதி இருந்தால், வெளிப்படையாகவே வன்னிய சொந்தங்களே! யுத்தத்துக்கு தயாராக இருங்கள் என அறைகூவல் விடுத்திருப்பார். கூட்டணி விஷயம் என்பதால்தான் அதுவும் அன்புமணி ராமதாஸ் முன்னெடுக்கும் கூட்டணி முயற்சிகள் என்பதாலும் அந்த முயற்சி பலன் தராது என நினைப்பதாலும்தான் " "தட்டுங்கள், திறக்கப்படும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்பார்கள். இவர்கள் கேட்கப் போகிறார்கள்.
ஆனால், எதுவும் கொடுக்கப்படப் போவதில்லை" என டாக்டர் ராமதாஸ் எழுதி இருக்கிறார் என்கின்றனர் பாமக தலைமைக்கு நெருக்கமான மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications