டெல்லி ஜேஎன்யூவில் பெரியார் படம் சேதம்- தமிழ்நாடு மாணவர் மண்டை உடைப்பு: கி.வீரமணி கண்டனம்
டெல்லி ஜே.என்.யூ. தாக்குதல் சம்பவங்களுக்கு கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: டெல்லி ஜே.என்.யூவில் தந்தை பெரியார் படம் சேதப்படுத்தப்பட்டு தமிழ்நாடு மாணவர் நாசர் மண்டை உடைக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை:

புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நேற்று (19.02.2023) இரவு திட்டமிட்டு, ஏபிவிபியால் பெரியார் படங்கள் உடைக்கப்பட்டுள்ளன. இந்த ரவுடிக் கும்பலின் வன்முறையைத் தட்டிக் கேட்ட தமிழ்நாட்டு மாணவர் தமிழ்நாசர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். சில நாள்களுக்கு முன்பு பெரியாரிய ஆதரவு மாணவர் பிரவீன் இதே காவிக் கும்பலால் தாக்கப்பட்டு கால் உடைந்த நிலையில் இருக்கிறார் என்றும் தெரியவருகிறது. இந்த மாணவர்கள் ஜேஎன்யூவில் தொடர்ச்சியாக சமூகநீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள். ''ரிசர்வேசன் கிளப்'' என்ற பெயரில் சமூகநீதிக்கான மாணவர் அமைப்பை நடத்தி வருகிறார்கள்.
பல்கலைக் கழகத்திலேயே பெரியார் பிறந்தநாள், சட்ட எரிப்பு மாவீரர் நாள், புதுக்கோட்டை வேங்கைவயல் வன்கொடுமைகளை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் எனத் தொடர்ந்து இயங்கியவர்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது பற்றி ஏற்கெனவே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பல்கலைக்கழக நிர்வாகமும் ஆர்.எஸ்.எஸ்., ஏ.பி.வி.பி. கூட்டத்துக்கு ஆதரவாகவே இயங்குகிறது. தமிழ்நாடு அரசும், புதுடில்லியிலுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் உடனடியாகத் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க உதவ வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

டில்லி மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டியது ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரின் கடமை.
டில்லியில் சட்டம் - ஒழுங்கு நிலை எப்படி சந்தி சிரிக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு. இதற்கு முழுப் பொறுப்பேற்கவேண்டியவர் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷாதான். தந்தை பெரியார் ஒரு கட்சித் தலைவரல்ல - உரிமை மறுக்கப்பட்ட மக்களின் மகத்தான தலைவர். எரிமலையைச் சீண்ட வேண்டாம் - எச்சரிக்கை! இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். முதல்வர் ஸ்டாலின் தமது கண்டன அறிக்கையில், பல்கலைக்கழகங்கள் வெறும் பாடம் கற்றலுக்கு மட்டுமல்ல; கலந்துரையாடல், விவாதம், மாறுபட்ட கருத்துகளுக்குமான இடங்கள் ஆகும். புது டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைக் கோழைத்தனமாகத் தாக்கியதோடு, தந்தை பெரியார், காரல் மார்க்ஸ் போன்ற பெருந்தலைவர்களின் படங்களையும் அடித்து நொறுக்கியுள்ள ABVP அமைப்பினரின் செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு; பல்கலை நிர்வாகம் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறேன்.
தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிற, ஒன்றிய பா.ஜ.க அரசை விமர்சிக்கிற மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்படும் போதெல்லாம் JNU பல்கலைக்கழகப் பாதுகாப்பு பணியாளர்களும், டெல்லி காவல்துறையும் கண்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்.
தாக்குதலுக்குள்ளான மாணவர்களுக்கு ஆதரவாக என் உறுதிப்பாட்டைத் தெரிவித்துக்கொள்வதுடன், தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டு மாணவர்களைப் பாதுகாக்குமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என கூறியிருந்தார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது அறிக்கையில், தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்க்கழகத்தில் இன்று நடைபெற்ற பேரணியின் போது தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் உள்ளிட்ட மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர். தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவை கண்டிக்கத்தக்கவை! பல்கலைக்கழக வளாகங்களில் நீதி கேட்டு போராடும் உரிமை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது; அதை தடுக்கும் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை. மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.












Click it and Unblock the Notifications