Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு இடஒதுக்கீட்டின் மீது திடீர் கரிசனம் ஏன்? கீ.வீரமணி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு இட ஒதுக்கீட்டின் மீது தனிக் கரிசனம் ஏன்? என திராவிடர் கழகத்தின் தலைவர் கீ. வீரமணி கேள்வியெழுப்பியுள்ளார்.

மத்திய அரசின் இன்றைய திட்டங்கள், செயல்பாடுகள் அனைத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அஜெண்டாக்களையே பிரதிபலிப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், இடஒதுக்கீடு குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ள கருத்து பேசுபொருளாகியுள்ளது. கடந்த 6ம் தேதி நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், "சமூக அமைப்பில் சக மனிதர்களை நாம் பின்தங்கிய நிலையில் வைத்திருக்கிறோம். இது 2,000 ஆண்டுகளாக தொடர்ந்துக்கொண்டிருக்கிறது.

Dravidar Kazhagam president K. Viramanis question about RSS leader Mohan Bhagwats comment

இவர்களுக்கு சமத்துவம் அளிக்கும் வரை அவர்களுக்கான சலுகைகள் தொடர வேண்டும். இந்த சலுகைகளில் இடஒதுக்கீடும் ஒன்று" என்று பேசியிருந்தார். பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் பலர் இடஒதுக்கீட்டிற்கு எதிராக அவ்வப்போது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் நிலையில், மோகன் பகவத்தின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு இட ஒதுக்கீட்டின் மீது தனிக் கரிசனம் ஏன்? என திராவிடர் கழகத்தின் தலைவர் கீ. வீரமணி கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அவர்களுக்குத் திடீரென்று ''சமூகநீதி - ஒடுக்கப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மீது திடீர்ப் பற்று, பாசம் பொங்கி வழிய ஆரம்பித்துவிட்டது!

''2000 ஆண்டுகளாக அநீதி இழைக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களான எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி, முதலியவர்களுக்கு அரசமைப்புச் சட்டப்படி உள்ள சமூகநீதி அவசியம் கொடுக்கப்பட்டே தீரவேண்டும் என்பதாக சண்டப் பிரசண்டம் செய்து 'ஸனாதனம்' ஏற்படுத்திய கொடுமையை நேரிடையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக ஒப்புக்கொள்வதாகப் பேசியுள்ளார்!

பாரதம், இராமாயணம் கூறும் தர்மம் என்ன? வேட்டுவ குல ஏகலைவனின் கட்டை விரலை - சூழ்ச்சிப் புத்தியோடு குருதட்சணையாக வெட்டித் தர வேண்டும் என்று பெற்ற துரோணாச்சாரியாரும், கடவுளைக் காண 'தவம்' செய்த சூத்திர சம்பூகனால் வர்ணதர்மம் கெட்டுவிட்டது; அதன் காரணமாகத்தான் எங்கள் (பார்ப்பன) சிறுவன் இறந்தான் என்று 'இராம இராஜ்ஜியம்' நடத்திய இராமனிடம் பார்ப்பனர்கள் முறையிட, எந்த விசாரணையுமின்றி, நேரே வாளோடு சென்ற இராமன், சூத்திர சம்பூகன் கழுத்தை வெட்டினான்.

இறந்த பார்ப்பனச் சிறுவன் உயிர் பெற்றெழுந்ததாகக் கூறும் வால்மீகி இராமாயணம் - உத்தரகாண்டம் ஆகிய இரண்டும். ஸனாதன தர்மம் - வர்ண தர்மம் எவ்வளவு கொடூரமான 'ஒரு குலத்துக்கொரு நீதி' என்பதை விளக்கும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வரும் பழைய ஸனாதன சமூகக் கட்டமைப்பின் சரியான படப்பிடிப்புகளாகும்! ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தற்போதைய இட ஒதுக்கீட்டை ஒழிப்பதையே தொடக்கத்திலிருந்து கூறிய இயக்கமாகும்!

அது முழு வெற்றியடையாது என்று ஒரு புரிதல் அதற்கு ஏற்பட்டவுடன், அதனை நீர்த்து, அதன் பெரும்பங்கை மேல்ஜாதி பார்ப்பனர்களும் அனுபவிக்க பொருளாதார அடிப்படையில் அது மாற்றப்படவேண்டும் என்று மாற்றிச் சொல்லி, அதன் மூல நோக்கத்தையே முறியடிக்கும் முயற்சியில் அன்று முதல் இன்றுவரை - இன்றைய EWS என்ற உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்று பறிக்கும் கொடுமை ஒருபுறம் சட்டப் பாதுகாப்புடன் நடைபெற ஏற்பாடாகி நடந்து வருகிறது - தமிழ்நாடு தவிர!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் திடீர் பல்டிக்குக் காரணம் என்ன? இந்நிலையில், இதற்குமுன் பல மேடைகளில் இட ஒதுக்கீடு மறுபார்வைக்கு - பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று அதனை எதிர்த்து, அறவே நீக்க முழங்கிய இதே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் இப்போது ஏன் திடீர் பல்டி அடிக்கிறார்.

Dravidar Kazhagam president K. Viramanis question about RSS leader Mohan Bhagwats comment

இப்படி அவர் ராகத்தை மாற்றிப் பாடுவது இது முதல் தடவை அல்ல; முன்பு பீகாரில் காங்கிரசும் - நிதிஷ்குமார் கட்சியும் பா.ஜ.க.வுக்கு எதிராகக் கூட்டணி சேர்ந்து, பா.ஜ.க.வை தேர்தலில் எதிர்த்தபோது, சில மேடைகளில் எதிர்த்துப் பேசி, பிறகு தோல்வி முகம் பளிச்சென்று தெரிந்தவுடன், கடைசி நேரத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் இதுபோன்று இட ஒதுக்கீட்டினை எதிர்க்காமல், இவ்வளவு வெளிப்படையாக இப்போது பேசுவதுபோல் - பேசாது, பேசினார்; பிரதமர் மோடியும் பிரச்சாரம் செய்தார்.

அப்போது, பீகாரில் காங்கிரஸ் நடத்திய பேரணி 'சுயமரியாதைப் பேரணி' ('சுய அபிமான்' என்ற ஹிந்தித் தலைப்பில்) இப்போது ஒன்றியத்தில் நடைபெறும் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.க. ஆட்சியின் சரிவு - 'கவுண்ட் டவுன்' தொடங்கிவிட்டது என்பது ஆர்.எஸ்.எஸ்.சுக்கே புரிந்துவிட்டது.

ஆர்.எஸ்.எஸின் புதிய யுக்தி, எச்சரிக்கை! மக்களிடம் இனியும், நடக்காத பல வாக்குறுதிகளைக் கொடுத்து வாக்குகளை வாங்க முடியாது என்று ஆர்.எஸ்.எஸ்.சுக்குப் புரிந்துவிட்டது. பிரதமர் மோடி நமக்கு சரியான வாக்கு வங்கிச் சேகரிப்புக்கு இனி பயன்படமாட்டார் என்பதை நாளும் உணருவதால், புதிய புதிய உத்திகளும், வித்தைகளும் ஆர்.எஸ்.எஸ்.சுக்குத் தேவைப்படுகின்றன.

சமூகநீதிக் காற்று - மண்டல் காற்று இந்தியா முழுவதும் - பலமாக வீசத் தொடங்கிவிட்டது; காவிக் கட்சி ஆட்சியின் நாள்கள் எண்ணப்பட்டு வருகின்றன.
எனவே, கடைசி நேரத்தில் சமூகநீதி முகமூடியை அணிந்து புதிய மாயமானை விட்டு வெற்றி பெற முடியுமா? என்று கருதி, இப்படி ஆட்சியின் கொள்கை வகுக்கும் கர்த்தாவான மோகன் பாகவத் அவர்கள் முயற்சிக்கிறார் போலும்!

'இல்லை, உங்கள் கருத்து தவறு; உண்மையாகவே அவர் கூறுகிறார்' - என்பது காவிகளின், ஆர்.எஸ்.எஸின் பதிலாக இருப்பின், அவர்கள் அதை நிரூபிக்க - ஒடுக்கப்பட்ட வாக்காளர்கள் மத்தியில் புது நம்பிக்கையை ஏற்படுத்த இரண்டு செயல்களைச் செய்து காட்டட்டும்!" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+