சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமூக அநீதி...உச்சநீதிமன்ற நீதிபதிகளாக எஸ்சி, எஸ்டி, ஓபிசியினரை நியமிக்க மாட்டீங்களா? வீரமணி விளாசல்

Google Oneindia Tamil News

சென்னை: உச்சநீதிமன்ற நீதிபதிகளாக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரை நியமிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை: சமூகநீதி என்பது நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானம் வற்புறுத்தும் முக்கியமாக செயல்படுத்தப்படவேண்டிய தத்துவக் கோட்பாடு ஆகும்! அதைத் தொடர்ந்து மறுத்துவரும் உயர்ஜாதி சிறுபான்மையின் ஏகபோகம் பல்வேறு சட்ட வியாக்கியானங்கள்மூலம், உரிமைகளை ஏதோ சலுகைகள்போல மாற்றி, அவற்றையும் பல்வேறு குறுக்கு வழிகளில் பறித்திடும் செயல்கள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம்மூலம் தொடரும் நிலைதான் நாள்தோறும் அரங்கேறி வருகிறது!

Dravidar Kazhagam urges to appoint SC, ST and OBC judges in Supreme Court

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி உரிமை, உத்தியோக உரிமை பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்களான பழங்குடியினருக்கும், பட்டியல் ஜாதியான ஆதிதிராவிட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமூகத்தவருக்கும் தொடர்ந்து மறுக்கப்பட்டதற்கு மாற்றாக - காயத்திற்கு மருந்திடுவதுபோல - இந்த இட ஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்தில் சம வாய்ப்பு என்ற அடிப்படையில் தரப்பட, அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டாலும்கூட, அது நடைமுறைக்கு வராமல் பார்த்துக் கொள்வதே உயர்ஜாதியினர் குறிப்பாக பார்ப்பனரின் செயல்திட்டமாக உள்ளது.
எடுத்துக்காட்டாக, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 34. (சில ஆண்டுகளுக்கு முன்புதான் உயர்த்தப்பட்டது 31-லிருந்து 34 ஆக). இப்போது 28 நீதிபதிகள்தான் உள்ளனர். 6 இடங்கள் காலியாகவே, நிரப்பப்படாமல் உள்ளது!

லோக்சபாவில் நரிக்குறவன், குருவிக்காரன் ஜாதிகளை எஸ்டி பட்டியலில் சேர்க்கும் மசோதா நிறைவேற்றம்! லோக்சபாவில் நரிக்குறவன், குருவிக்காரன் ஜாதிகளை எஸ்டி பட்டியலில் சேர்க்கும் மசோதா நிறைவேற்றம்!

இப்போதுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகளில் எஸ்.சி., நீதிபதிகளின் எண்ணிக்கை, எஸ்.டி., நீதிபதிகளின் எண்ணிக்கை, ஓ.பி.சி. என்ற இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை வெகுவெகு சொற்பமே! 28 நீதிபதிகளில் ஒருவர் அல்லது இருவர் தவிர, சுமார் 24 பேர் உயர்ஜாதியினர் - முன்னேறிய ஜாதியினரே! தகுதியுள்ள நீதிபதிகள் அந்தப் பிரிவினரில் இல்லை என்ற வாதத்திற்கும் இடம் இல்லாத அளவுக்கு மூத்தவர்கள் அனுபவத்தோடு உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக இருப்பவர்கள் உண்டு. என்றாலும், அவர்களுக்கு வாய்ப்புக் கதவு திறப்பதே இல்லை.
நாடாளுமன்றத்தில் கேள்விகளை உறுப்பினர்கள் கேட்டபோது, பதில் அளித்த சட்ட அமைச்சரும் சரி, ஏற்கெனவே இருந்த தலைமை நீதிபதியும் சரி, வாய்ப்பு மறுக்கப்பட்ட, இத்தகைய ஒடுக்கப்பட்டோருக்குரிய உரிமைபற்றி கவனத்தில் எடுத்துச் செயல்படுவோம் என்று கூறிய உறுதிமொழிகள் வெறும் ஆறுதல் மொழிகளாகவே உள்ளன; நீர் எழுத்துக்களோ என்ற அய்யமும் பொங்கி எழுகிறது!

உயர்ஜாதி முன்னேறிய ஜாதியினர் - பாலியல் நீதிப்படி பெண் நீதிபதிகளை நியமிப்பதில்கூட - ஆக்கிரமிப்பாக உள்ளது என்பது மறுக்கப்பட முடியாத யதார்த்தம்! சமூகநீதி இட ஒதுக்கீடுபற்றிய வழக்குகள், முன்னேறிய ஜாதி நீதிபதிகள் முன் விசாரணைக்கு வரும்போது - சட்ட வியாக்கியானங்களும், தீர்ப்புகளும், பெரிதும் ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பாதுகாப்பை சட்டம் அளித்தாலும், நீதிமன்றத் தீர்ப்புகளில் மறுக்கும் நிலையே உள்ளது!
ஒரு சிறு உதாரணம் உயர்ஜாதி ஏழையினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு கல்வி, உத்தியோகத் துறையில் என்ற வழக்கில் (103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்) தீர்ப்பு எழுதிய நீதிபதிகள் ''அரசமைப்புச் சட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே தருவதற்கு இடம்பெற்ற இட ஒதுக்கீடு, இப்போது தொடர்ந்து வருவது தவறு'' என்ற கருத்தை இடித்துரைத்துத் தீர்ப்பு எழுதியுள்ளனர்! அரசமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடுபற்றி குறிப்பிடுகையில், நாடாளுமன்ற, சட்டமன்ற தனித் தொகுதி (ரிசர்வ் தொகுதிகளுக்குரிய) அரசியல் சம்பந்தப்பட்ட இட ஒதுக்கீட்டைச் சார்ந்தது. கால நிர்ணயம் ஏதும் அரசமைப்புச் சட்டத்தில் கல்வி, உத்தியோகம், இட ஒதுக்கீட்டில் குறிப்பிடவில்லை என்பதை தெரியாதவர்களாக அவர்கள் இருக்க முடியாது.அவர்களது அரசமைப்புச் சட்ட அறிவை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. என்றாலும், ஏன் இப்படி குழப்பமான கருத்துரைகளை - பொருத்தமில்லாத வாதங்களை தீர்ப்பில் வரிந்து தள்ளவேண்டும்? அது அரசமைப்புச் சட்ட தத்துவத்திற்கே முரணானவாதம் அல்லவா!

இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; அது தனியாகச் செய்யப்படவேண்டிய திட்டம் - இட ஒதுக்கீடு காலங்காலமாய் செய்யப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் தரும் ஏற்பாடு (Compensatory Justice for disadvantaged communities) என்பதையே ஒப்புக்கொள்ளாமல் எவ்வளவு காலத்திற்கு இப்படி இட ஒதுக்கீடு என்று நீதிபதிகள் - தீர்ப்பில் கேட்பது நியாயம்தானா? பல்லாயிரம் ஆண்டு சமூக அநீதியை 50, 60 ஆண்டுகளில் சரி செய்துவிட முடியாது
பாலம் கட்டும்போது மாற்றுவழிப்(Diversion Road) பாதையை ஏற்படுத்திப் பயன்படுத்துவது நடைமுறை. இது எவ்வளவு காலத்திற்கு என்ற கேள்விக்கு ஒரே பதில், எவ்வளவு காலத்திற்குப் பாலம் கட்டுவது தாமதமாகிறதோ, அதுவரை மாற்றுவழிப் பயன்பாடு தவிர்க்க இயலாதது என்பதை எவரே மறுக்க முடியும்? அடுத்து, இட ஒதுக்கீட்டை தொடங்கியது மனுதர்மக் கர்த்தாக்கள்தானே! இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து, 50, 60 ஆண்டுகளாகியும், இன்னமும் முழுமையாக செயல்படவில்லையே! பல ஆயிரம் ஆண்டு சமூக அநீதியை சில பத்தாண்டு இட ஒதுக்கீடுமூலம் முடித்துவிடுவது எளிதானதல்ல என்பதை நீதிபதிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.

English summary
Dravidar Kazhagam President K.Veeramani has urged to appoint the SC, ST and OBC judges in the Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X