கோவை டூ சேலம் போன அரசு பஸ்சில்.. கலெக்ஷன் பணத்துடன் டிரைவர் செய்த காரியம்! அதிர்ந்த பயணிகள்
சென்னை: கை நிறைய 100 ரூபாய் தாள்களை வைத்து எண்ணிக்கொண்டே அரசு பேருந்தை இயக்கிச் சென்ற பஸ் ஓட்டுனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கோவையில் இருந்து சேலம் வரை சென்ற அரசு பஸ்சில் இரண்டு கைகளிலும் பணத்தை வைத்துக்கொண்டு எண்ணியபடியே டிரைவர் பஸ்சை இயக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கிராமங்கள் முதல் சிட்டி வரை என பயணிகளின் போக்குவரத்துக்கு பஸ் சேவைகள் இன்றியமையாததாக இருந்து வருகின்றன. காலையில் வேலைக்கு சென்று வருவதற்கும், பள்ளி, கல்லூரிகள் சென்று வருவதற்கு பஸ் சேவைகள் இன்றியமையாததாக உள்ளன.

அரசு பஸ் டிரைவர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் டிரைவர், கண்டக்டர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். ஒருசில நேரங்களில் அரசு பஸ் டிரைவர்கள் அலட்சியமாக பேருந்தை இயக்கி அரசின் நடவடிக்கைக்கும் ஆளாகி வருகிறார்கள். குறிப்பாக பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஓட்டுனர்கள், பொறுப்பின்றி செல்போனை பார்த்தபடி இயக்குவது, செல்போனில் பேசியபடி இயக்குவது என ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இப்படி பயணிகளை பற்றி கவலைப்படாமல் பொறுப்பின்றி செயல்படும் அரசு பஸ் டிரைவர்கள் மீது அவ்வப்போது பணி இடைநீக்க நடவடிக்கைகளும் பாய்ந்து வருகின்றன. அடிக்கடி செல்போன்களில் பேசியபடி பேருந்துகளை இயக்குவதாக பயணிகள் பலரும் புகார் தெரிவித்த நிலையில், அரசு பஸ் டிரைவர்கள் பணி நேரத்தின் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தான் செல்போன் பேசினால் தானே தவறு, பணத்தை எண்ணிக்கொண்டே பேருந்தை ஓட்டுவேன் என்றபடி, அரசு பஸ் டிரைவர் ஒருவர் பேருந்தை இயக்கி சென்றுள்ளார். இரண்டு கைகளிலும் பணத்தை வைத்துக்கொண்டு அதனை எண்ணியபடியே ஸ்டீயரிங்கை திருப்பிக்கொண்டே பஸ்சை இயக்குகிறார். அந்த பஸ்சில் சென்ற பயணி யாரோ ஒருவர், இதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பணத்தை எண்ணிக்கொண்டே பஸ்சை இயக்கிய டிரைவர்
அந்த வீடியோவில், "கோவையில் இருந்து சேலத்திற்கு அரசு விரைவு பஸ் ஒன்று சென்று கொண்டிருக்கிறது. இரவு நேரம் என்பதால் விளக்கு எரிந்த படி பஸ்சை டிரைவர் ஓட்டிசென்று கொண்டிருக்கிறார். அப்போது அவர் கை நிறைய 100 ரூபாய் தாள்களை வைத்துக்கொண்டு ஸ்டீயரிங்கில் முழங்கையை வைத்தபடியே எண்ணிக்கொண்டு பேருந்தை ஓட்டுவது போல் இந்த வீடியோ பதிவாகியுள்ளது.
இந்த சம்பவமானது, நேற்று (29) இரவு நடந்தது. இந்த பேருந்து கோயம்புத்தூரிலிருந்து சேலம் வரை செல்லும் நடத்துனர் இல்லாத பேருந்து சேவையாகும். பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கிய பிறகு நடத்துனர், இறுதிப் பயணநடை என்பதால் ஓட்டுநரிடம் பணத்தை கொடுத்துவிட்டு கணியூர் டோல் கேட்டில் இறங்கிவிட்டார். ஓட்டுநர் பேருந்தை இயக்குவதற்கு முன்பு பணத்தை எண்ணியிருக்க வேண்டும். அதற்கு பதிலாக அவர் பேருந்தை இயக்கும் போது எண்ணினார்.
எனவே, இந்த குறிப்பிட்ட ஓட்டுநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அனைத்து ஓட்டுநர்களுக்கும் பாதுகாப்பாக பேருந்தை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் ஆபத்தான முறையில் பஸ்சை இயக்கிய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.
நிற்காமல் சென்ற அரசு பஸ்
முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பிளஸ் டூ மாணவி பேருந்துக்காக காத்திருந்த போது, அரசு பஸ் நிற்காமல் சென்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து ஆலங்காயம் நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று வேப்பமரத்து சாலை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது.
பள்ளி மாணவிகள் காத்திருந்த போதும், அரசு பேருந்து ஓட்டுநர் முனிராஜ் என்பவர் பேருந்தை நிறுத்தாமல் சென்றார். இதனால் மாணவி ஒருவர் பேருந்தின் பின்னால் சில அடி தூரம் ஓடினார். பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் கத்தி கூச்சல் போட்டதையடுத்து பேருந்து நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிச்சென்ற டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்












Click it and Unblock the Notifications