குவைத் தீ விபத்தில் பலியான 7 தமிழர்கள்.. நெஞ்சை பதற வைக்கும் குடும்ப பின்னணி. உருக்கமான தகவல்கள்!
சென்னை: குவைத் தீ விபத்தில் பலியான 7 தமிழர்களின் குடும்ப பின்னணி நெஞ்சை பதற வைக்கிறது. 20 ஆண்டுகள் குவைத்தில் பணிபுரிந்தவர், சொந்த ஊருக்கு திரும்ப விமான டிக்கெட் கிடைக்காமல் காத்திருந்தவர் என ஒவ்வொருவரது நிலைமையும் பெரும் துயரத்தைத் தருகிறது.
குவைத் தீ விபத்தில் பலியான 7 தமிழர்களின் உடல்கள் இன்று தமிழ்நாடு கொண்டு வரப்படுகிறது. குவைத்தில் மொத்தம் 45 இந்தியர்கள் பலியாகினர். 45 இந்தியர் உடல்களுடன் இன்று அதிகாலை இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் கொச்சியில் இருந்து புறப்பட்டது.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர் விவரம்:
கோவில்பட்டி மாரியப்பன்: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 41). குவைத்தில் 20 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். 11 வயதில் விமலா என்ற மகளும் 7 வயதில் கதிர் நிலவன் என்ற மகனும் உள்ளனர். கடந்த மார்ச் மாதம்தான் வானரமுட்டி கோவில் திருவிழாவுக்கு வந்துவிட்டு மீண்டும் குவைத் சென்றார் மாரியப்பன்.
ராமநாதபுரம் ராமு: 26 ஆண்டுகளாக குவைத்தில் சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார் ராமு (வயது 65). இவரது விசா காலம் கடந்த 11-ந் தேதி முடிவடைந்தது. ஆனால் இந்தியா திரும்ப விமான டிக்கெட் கிடைக்காமல் காத்திருந்தார். கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் குவைத் திரும்பியதும் 26 ஆண்டுகால உழைப்பின் பணப் பலன்களுடன் சொந்த ஊ திரும்ப காத்திருந்த ராமு இப்போது கருகிய உடலாக திரும்புகிறார்.
கடலூர் சின்னதுரை: கடலூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை (வயது 40). 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது. சின்னதுரைக்கு குழந்தை இல்லை. 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணிபுரிந்துவிட்டு இந்தியா திரும்பிவிட்டார் சின்னதுரை. ஆனால் சின்னதுரையை பணிக்கு வரவேண்டும் என அவரது நிறுவனம் வற்புறுத்தி அழைத்ததால் அண்மையில்தான் மீண்டும் குவைத் சென்றாராம் சின்னதுரை. அடுத்த 2 வாரங்களில் நாடு திரும்ப இருந்த நிலையில் சடலமாக முட்டம் கிராமத்துக்கு கொண்டுவரப்படுகிறார் சின்னதுரை.
செஞ்சி முகமது ஷெரீப்: செஞ்சி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 36 வயது இளைஞர் முகமது ஷெரீப். 2 பெண் குழந்தைகளின் தந்தையான ஷெரீப் குவைத்தில் 12 ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார்.
திருச்சி ராஜூ: திருச்சி நவல்பட்டைச் சேர்ந்தவர் 53 வயது ராஜூ. 12 ஆண்டுகளாக கண்டெய்னர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இப்படித்தான் உயிரிழந்த 7 தமிழரின் குடும்ப பின்னணியும் நெஞ்சை பிழிய வைக்கிறது.












Click it and Unblock the Notifications