மெகா ஊழல்- எஸ்.பி.வேலுமணி வீடுகளில் இப்ப ரெய்டு... எப்ப கைது? ஏக எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகள்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட 60 இடங்களில் 10 மணிநேரத்துக்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் படை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையின் முடிவில் எஸ்.பி. வேலுமணி கைது செய்யப்படுவாரா? அல்லது உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக கைது செய்யப்படுவாரா? என்பது அரசியல் வட்டாரங்களின் விவாதம்.
தமிழகத்தில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. உள்ளாட்சியின் ஒவ்வொரு டெண்டரும் வேலுமணிக்கும் அவர் கை காட்டிய பினாமிகளுக்கும் மட்டுமே முறைகேடுகளுடன் வழங்கப்பட்டிருக்கிறது.
வேலுமணியின் பினாமி நிறுவனங்கள் 10 ஆண்டுகளில் 11,300 மடங்கு அசுர வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. இத்தனையும் ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட்டவைதான். நீதிமன்றத்திலும் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில்தான் இன்று காலை முதல் 60 இடங்களில் பல மணிநேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல்கள்
10 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைச்சர் பொறுப்பில் இருந்ததால் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் முறைகேடுகளில் திளைத்திருக்கிறார் எஸ்.பி.வேலுமணி என்கின்றனர் திமுக மூத்த தலைவர்கள். இதனாலேயே அதிமுகவில் என்னதான் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கி இருந்தாலும் அவரை ஆட்டுவிக்கும் சக்தியாக இருந்தவ்ர் வேலுமணிதான் என்கின்றனர். இப்போது திமுக அரசின் விசாரணை வளையத்துக்குள் வேலுமணி சிக்கிவிட்டார். சென்னையில் வேலுமணியிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது.

ஆதரவாளர்களுக்கு விருந்து
ஆனாலும் வேலுமணியும் அவரது அடிப்பொடிகளும் கெத்து காட்டுவதற்காக ஆதரவாளர்களை திரட்டி வீடுகள் முன்பு குவித்துள்ளனர். அவர்களுக்கு டிபன், சாப்பாடு, டீ, காபி என அனைத்தும் வாங்கி கொடுத்து உபசரிக்கிறது வேலுமணி அண்ட் கோ. நடுசாலையிலேயே தமது ஆதரவாளர்களுக்கு விருந்து வைக்கும் வேலுமணியின் கூத்தாட்டம் கடுமையாக விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில்தான் வேலுமணி எப்போது கைது செய்யப்படுவார் என்கிற விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது.

அதிமுகவில் ஓங்கிய வேலுமணி கை
சட்டசபை தேர்தலில் கடுமையான போட்டிக்கு மத்தியில்தான் வேலுமணி வெல்ல முடிந்தது. வேலுமணி தொகுதியைவிட்டு வெளியே போய்விடக் கூடாது என்பதற்காகவே அவர் போட்டியிட்ட தொண்டாமுத்தூர் தொகுதியில் கார்த்திகேய சிவசேனாபதியை திமுக வேட்பாளராக நிறுத்தியது. இன்னொரு பக்கம் எடப்பாடி மூலம் தமக்கு ஆதரவானவர்களை பல தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தி பணப்பட்டுவாடா செய்திருந்தார் வேலுமணி. அவர் நிறுத்திய வேட்பாளர்களும் கணிசமான அளவில் ஜெயித்திருப்பதால் அதிமுகவில் கை ஓங்கியும் இருக்கிறது. இந்த நிலையில் 9 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் கோவை இல்லாமல் இருந்தாலும் அதிமுகவை ஜெயிக்க வைக்க வேலுமணியை எடப்பாடி பழனிசாமி களமிறக்குவார். சட்டவிரோதமான, ஊழல் முறைகேடுகள் மூலம் குவித்து வைத்திருக்கும் பணம் இருக்க பயமேன் என்ற நிலையில்தான் வேலுமணியின் போக்கு இருந்தது. இதே அணுகுமுறையைத்தான் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் கெத்தாக காட்டுவார் வேலுமணி என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் ரெய்டுக்குள் சிக்கிக் கொண்டதால் வேலுமணி முடக்கப்பட்டுவிட்டார்.

கைது எப்போது?
தற்போதைய ரெய்டு, இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் ஆகியவற்றை வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது. அல்லது இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும் போது இன்றைய சோதனைகள் முடிந்த உடனேயே கூட வேலுமணியை கைது செய்து சிறையில் அடைக்கவும் சாத்தியம் இருக்கிறது. அனேகமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் போது வேலுமணி சிறையில் இருக்கத்தான் சாத்தியம் என்கின்றன அரசியல் கட்சிகள்.












Click it and Unblock the Notifications