திருவண்ணாமலை கிரிவல பாதையில் அசைவ உணவகங்கள்! தமிழக அரசு தலையிட முடியாது.. ஆளுநருக்கு அமைச்சர் பதில்
சென்னை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அசைவ உணவகத்தை அகற்ற தமிழக அரசு ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் திருவண்ணாமலை கோயிலில் தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.

பிறகு கிரிவலம் சென்றார். இது தொடர்பாக ஒரு அறிக்கையை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் கிரிவலப் பகுதியில் போதிய கழிப்பறை வசதிகள் செய்யப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையிலும் அந்த கிரிவலப்பாதையில் அசைவ உணவகங்கள் இருப்பது வருத்தமளிக்கிறது.
இந்த அசைவ உணவகங்கள் இருப்பது குறித்து பக்தர்களும் வருத்தமடைந்து என்னிடம் தெரிவித்தனர். உணவு என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால் அதே சமயம் அருணாசலேஸ்வரரை தரிசிக்க வரும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும்.
எனவே கிரிவல பாதையில் உள்ள அசைவ கடைகளை மூட வேண்டும் என ஆளுநர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆளுநரின் இந்த கருத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அசைவ உணவகங்களை மூடும் விவகாரத்தில் தமிழக அரசு எதையும் செய்ய முடியாது.
கிரிவலப் பாதையில் உள்ள அசைவ உணவகத்தில் உணவு உண்பதும் உண்ணாததும் அவரவர் விருப்பம். இதில் அரசு தலையிடுவதற்கு இல்லை. பவுர்ணமி, கார்த்திகை தீபத்தின் போது அசைவ உணவகங்களை அவர்களே மூடிவிடுகிறார்கள். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி எப்போது நியமிக்கப்பட்டாரோ அப்போது முதலே திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. நீட் விலக்கு மசோதா, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநர் கையெழுத்திடாமல் நீண்ட காலமாக கிடப்பில் வைத்திருந்ததும் இந்த மோதல் போக்கிற்கு காரணம்.
அது போல் சனாதனம் குறித்த விஷயத்திலும் இரு தரப்பினருக்கும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்த எண்ணித் துணிக எனும் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். அவர் நீட் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எப்போது விலக்கு அளிக்கப்படும் என பெற்றோர் ஒருவர் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆர்.என்.ரவியோ நீட் விலக்கு மசோதாவில் ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன். அப்படி செய்தால் அது மாணவர்களுக்கு செய்யும் அநீதி. நீட் தேர்வு விலகப்பட்டால் மாணவர்களின் போட்டி திறன் குறைந்துவிடும் என பல்வேறு கருத்துகளை சுட்டிக் காட்டி பேசியுள்ளார்.
இதற்கு திமுக, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. அது போல் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications