முன்பே ரூ. 200 கோடி போச்சு’? அடுத்து ரூ.573 கோடி ‘கட்’; வஞ்சிக்கும் மத்திய அரசு? மகேஸ் புகார் உண்மையா?
சென்னை: புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால்தான் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடி நிதியை நிறுத்திவைத்துள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றஞ்சாட்டி இருக்கிறார். அது தொடர்பாக கல்வியாளர்கள் சொல்வது என்ன?
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாகச் செய்தி வெளியானது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் உடனே நிதி விடுவிப்போம் என மத்திய அரசு கூறியுள்ளதாகப் புகார் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், "கடந்த 3 ஆண்டுகளாகப் பாதியிலேயே படிப்பை நிறுத்துவிட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துள்ளோம். அதேபோல் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தி இருக்கிறோம். எண்ணும் எழுத்து திட்டம் போன்ற நல்ல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளோம். ஆசிரியர்களுக்கான புதுவிதமான பயிற்சிகளை வழங்கி இருக்கிறோம். மலைவாழ் பிள்ளைகளின் கல்வியை அதிகப்படுத்தி இருக்கிறோம். அப்படி இருந்தும் கடந்த 2023-24 நிதியாண்டில் நாம் கோரிய தொகையைவிட 200 கோடி ரூபாய் குறைவாகவே அளித்தது மத்திய அரசு. அப்படி இருந்தும் கல்வித்துறையை வளர்ப்பதற்காக மாநில அரசு பல திட்டங்களை முன்னெடுத்தது. எனவே புதிய கல்விக் கொள்கையை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற காரணத்தைக் காட்டி இப்போது ரூ.573 கோடி நிதியை நிறுத்தி வைத்துள்ளார்கள். நம் மாநிலம் 3 மொழி கொள்கையை ஏற்கவில்லை. ஆகவே புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதில் சிக்கல் இருப்பதால் நிறுத்தி வைத்தோம். அதை மனதில் வைத்து மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்து அழுத்தம் கொடுக்கிறது" என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
சரி, அமைச்சரின் இந்தக் கருத்து பற்றி கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்? கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசுகையில், "கடந்த ஜூன் மாத தவணைத் தொகையையே மத்திய அரசு இன்னும் அளிக்கவில்லை. ஆகஸ்ட் மாதம் முடியப் போகிறது. இதுவரை நிதி வழங்கப்படவில்லை என்றால், மாணவர்களின் எதிர்காலம் எந்தளவுக்குப் பாதிக்கும்? எனவே மத்திய அரசின் அலட்சியப் போக்கும் மிகவும் வருந்தத்தக்கது தான். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மத்திய அரசு புதியதாக தேசியக் கல்விக் கொள்கை என்ற ஒன்றைக் கொண்டுவருகிறது. அதை ஏற்காத மாநிலங்களைப் பற்றியும் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். மாநிலத்திற்கு ஏற்ப அதில் சில மாறுதல்களைக் கொண்டுவர மத்திய அரசு முன்வர வேண்டும்.

சில முக்கியமான வழிகாட்டுதல்களை வழங்கிவிட்டு, இரண்டாம் கட்ட விதிமுறைகளை மாநிலக் கட்சிக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் உரிமையை மாநில அரசுக்கு வழங்க வேண்டும். மூன்று மொழி கொள்கை கொண்டுவர வேண்டும் என புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை என்பதைக் காலங்காலமாகக் கடைப்பிடித்து வருகிறோம். அதை மாற்றச் சொல்வதில் நியாயம் இல்லை. ஆகவே மாநில அரசு அதை எதிர்க்கிறது. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள 80% விதிமுறைகளை ஏற்றுக் கொள்ளும்படி தான் உள்ளது. மீதம் இருக்கின்ற சில மாற்றுக் கருத்துகளை மாநில அரசுடன் விவாதித்து மத்திய அரசு மாற்றி அமைக்க முன்வர வேண்டும்" என்கிறார்.
கல்வியாளர் செல்வக்குமார் இந்த விவகாரம் குறித்து கருத்து கூறுகையில், "தேசிய கல்விக் கொள்கையில் சில மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது. ஒரு காலத்தில் 8 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி என்று அரசு சொன்னது. அடுத்து 10 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி என நிலை மாறியது. இப்போது மத்திய அரசு 12 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி என்ற நிலையை எட்டி உள்ளது. அதன்படி தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத போது மத்திய அரசு நிதியை நிறுத்தி வைக்கிறது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டாலும் மத்திய அரசு நிதி வழங்காதா? என்ற கேள்வியும் எழுகிறது. அப்படி என்றால் கல்வி உரிமையை பொதுப்பட்டியலுக்கு மாற்றும் வரை மாநில அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முன்வர வேண்டும். அல்லது மத்திய அரசுடன் கூடி விவாதித்து ஒரு சுமுகமான முடிவை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications