ஹிஜாவு டூ ஆருத்ரா.. விசாரணையை சிபிஐக்கு மாத்தனுமாம்! குறுக்கே வந்த தமிழக போலீஸ்! எதிர்ப்பு
சென்னை: தமிழகத்தில் நடந்த நிதி நிறுவன மோசடி தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி என்பவர் தமிழகத்தில் நடைப்பெற்ற நிதி நிறுவன மோசடி வழக்குகளின் விசாரணையில் முன்னேற்றம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அதிக வட்டி தருவதாக கூறி ஹிஜாவு நிதி நிறுவனம், ஆருத்ரா கோல்டு, எல்என்எஸ் நிதி நிறுவனம், சாய் எண்டர்பிரைஸ், ஆம்ரோ அசோஷியேஷன் உள்ளிட்ட 7 நிதி நிறுவனங்கள் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்து, அதன் உரிமையாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

மக்களை ஏமாற்றி ஹிஜாவு நிறுவனம் 1,500 கோடி ரூபாய் மோசடியும், எல் என் எஸ் நிறுவனம் 6,000 கோடியும், ஆரூத்ரா கோல்டு நிறுவனம் 8,000 கோடியும், சாய் எண்டர்பிரைசஸ் 350 கோடி ரூபாயை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கொண்டு சென்றுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் சென்னை உள்ளிட்ட தமிழக வங்கிகள் மூலமாக இந்த மோசடிகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் பலர் பணம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்குகளை தற்போது மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஆனால் மோசடி செய்த பணம் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதால் இதில் ஹவாலா, கருப்பு பணம் விவகாரமும் உள்ளதால் நிதி நிறுவன மோசடி வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்போது பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் அரசு கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் அஜராகி,பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், நிதி நிறுவன மோசடி தொடர்பாக கடந்த 2021 ஆண்டு முதல் 2024 ம் வரை மொத்தமாக 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 141.29 கோடி ரூபாய் மீட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி தொடர்பாக 90 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 59 பேர் தலைமறைவாகி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மோசடியில் ஈடுப்பட்ட 1,524 வங்கி கணக்கில் இருந்த 180.70 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாகவும், மோசடி செய்த நிதி நிறுவனங்களுக்கு சொந்தமான 1118.46 கோடி ரூபாய் மதிப்பிலான 3,264 அசையும் அசையா சொத்துகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 659 வழக்குகளில் 676.6 கோடி ரூபாய் உரியவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற நிதி நிறுவன உரிமையாளர்கள், இயக்குனர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நீதிமன்றத்தில் தெரிவித்து வருவதால், சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் யாரும் ஆஜராகவில்லை என்பதால் வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications