தாம்பரத்தில் அமலாக்கத்துறை ரெய்டு.. பிரபல கேரள நிதி நிறுவனத்தின் உரிமையாளர் மகள் வீட்டில் அதிகாரிகள்
சென்னை: பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் உள்ள நெடும்பறம்பில் நிதி நிறுவனத்தில் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தந்திரி கண்டரரு ராஜீவரரு பணம் டெபாசிட் செய்ததாக எழுந்த புகாரையடுத்து அமலாக்க இயக்குநரகம் அதிரடி சோதனை நடத்தியது. அந்த சோதனையின் ஒரு பகுதியாக சென்னையில் தாம்பரம் சேலையூரில் உள்ள அந்த நிறுவன உரிமையாளரின் மகள் தங்கியிருக்கும் வீட்டிலும் அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சபரிமலை முன்னாள் தந்திரி கண்டரரு ராஜீவரு, நெடும்பரம்பில் நிதி நிறுவனத்தில் சுமார் 2.5 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்ததாக சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.பி. உதயபானு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். பொதுவாக ஒரு நிதி நிறுவனம் மூடப்பட்டால், அதில் முதலீடு செய்தவர்கள் பதறியடித்துக்கொண்டு புகார் அளிப்பார்கள். ஆனால், தனது இரண்டரை கோடி ரூபாய் முடங்கியும் தந்திரி கண்டரரு ராஜீவரு இதுவரை ஏன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை? என்ற கேள்விதான் அமலாக்கத்துறை சோதனைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஏற்கனவே சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் (SIT) வாக்குமூலம் அளித்த தந்திரி "பணம் நஷ்டமானது உண்மைதான், ஆனால் நான் புகார் அளிக்க விரும்பவில்லை" என்று கூறியிருந்தார். இது கணக்கில் வராத கருப்புப் பணமா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியான திருப்பமாக, பத்தனம்திட்டா எம்பி ஆன்டோ ஆன்டனி தனது 2.5 கோடி ரூபாய் முதலீட்டை இந்த நிறுவனத்திலிருந்து ரகசியமாகத் திரும்பப் பெற்றதாக எழுந்துள்ள புகாரும் சோதனையின் கீழ் வந்துள்ளது. கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரான என்.எம். ராஜுவுக்குச் சொந்தமான இந்த நிறுவனம், ஏற்கனவே பல நிதி மோசடி புகார்களில் சிக்கி அவர் கைதும் செய்யப்பட்டிருந்தார்.
உரிமையாளர் வீட்டில் சோதனை
இந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ரகசியமாகச் சில ஊழியர்களை வைத்துப் பணப்பரிமாற்றம் நடைபெற்று வருவதாகப் புகார்கள் எழுந்தது. இதையடுத்து, திருவல்லாவில் உள்ள என்.எம். ராஜுவின் இல்லம் மற்றும் நிறுவன அலுவலகங்களில் இ.டி அதிகாரிகள் ஆவணங்களைச் சல்லடை போட்டுத் தேடி வருகின்றனர்.
சிறையிலேயே தொடரும் விசாரணை
சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கில் ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் கண்டரரு ராஜீவரு, ஆஞ்சியோகிராம் சிகிச்சைக்குப் பிறகு தற்போது ஓய்வில் உள்ளார். இன்று கொல்லம் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிமன்றம் மீண்டும் 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டிருக்கிறது.
தங்கக் கொள்ளைக்கும், இந்த நிதி நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீட்டுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்ற மர்ம முடிச்சை அவிழ்க்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிதி நிறுவன மோசடியில் பல முக்கிய புள்ளிகள் பெயர் அடிபடுவது கேரள அரசியலில் ஒரு மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.
சென்னையில் ரெய்டு
இதனிடையே இந்தச் சோதனையின் ஒரு பகுதியாக, நிதி நிறுவன உரிமையாளரின் மகள் ஆஸ்லின் தங்கியிருக்கும் சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர், பரத்வாஜ் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலும் அதிகாரிகள் சோதனையைத் தொடங்கியுள்ளனர்.
ஆஸ்லின் வீடு
இவர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிஎச்டி பயின்று வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தச் சேலையூர் பகுதியில் தங்கியுள்ளார். ஆஸ்லின் தங்கியிருக்கும் வீடு, அவர் பயிலும் கல்லூரியின் பேராசிரியர் அண்ணாதுரை என்பவருக்குச் சொந்தமானது. பேராசிரியரின் வீட்டில் தங்கிப் படிக்கும் மாணவர்களில் ஆஸ்லினும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமலாக்கத்துறை சோதனை
இந்தச் சோதனையில் அமலாக்கத்துறையைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க, துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எஃப் போலீசார் அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிதி நிறுவனத்தின் பணப் பரிமாற்றங்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து ஆஸ்லினிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications