எடப்பாடி அடுத்த அதிரடி.. திண்டுக்கல் சீனிவாசனுக்குதான் பவர்.. வங்கிகளுக்கு பறந்த கடிதங்கள்
அதிமுகவின் வரவு, செலவுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் என வங்கிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை இனி அவர் மேற்கொள்வார் எனவும் வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. மொத்தமாக ஓ.பன்னீர் செல்வத்திற்கு செக் வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் தன்னை கேட்காமல் வரவு செலவு மேற்கொண்டால் வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதம் எழுதியுள்ளார் ஓபிஎஸ்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.4 மாதங்களில் நிரந்தர பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்ளாத நிலையில் கட்சியின் வரவு செலவு கணக்குகளை வாசித்தார் டாக்டர் விஜயபாஸ்கர்.

திண்டுக்கல் சீனிவாசன்
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்தில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ .பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்து இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

செல்லாது என ஒபிஎஸ் மனு
இதனிடையே எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமியை தான் கட்சியை விட்டு நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியும் கட்சியில் திருத்தப்பட்ட விதிகள், இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு, பொருளாளர் தேர்வு குறித்த தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

எடப்பாடி பழனிச்சாமி கடிதம்
இந்நிலையில் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என வங்கிகளுக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதற்கு முன் பொருளாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் வங்கி வரவு செலவுகளை பராமரிப்பது, காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை வைத்திருந்தார். தற்போது புதிய பொருளாளராக தேர்வான திண்டுக்கல் சீனிவாசனுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுவதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஓ. பன்னீர் செல்வம் கடிதம்
அதிமுக கணக்கு வைத்துள்ள கரூர் வைஸ்யா வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "இந்திய தேர்தல் ஆணைய சட்டத்தின் படி இன்று வரை நான்தான் ஒருங்கிணைப்பாளர், நான்தான் பொருளாளர். நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும் போது என்னைக் கேட்காமல் எந்தவித வரவு செலவு கணக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும், தன்னை கேட்காமல் வரவு செலவு கணக்கை மேற்கொண்டால் வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications