"வெள்ளை கொடி"க்கு வேலை வந்துவிட்டதா? அடிச்சு தூக்கும் எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவை துளைக்கும் "2 கணை"
சென்னை: பாஜகவுடனான கூட்டணி முறிவை அதிமுக அறிவித்திருக்கும் நிலையில், 2 விதமான சிக்கல்கள் அக்கட்சியில் தற்போது எழுந்துள்ளதாக தெரிகிறது.
அதிமுக - பாஜக கூட்டணி முறிவு தற்காலிகமானது என்றே பலரும் கருதிவருகிறார்கள்.. எப்படியும் பாஜக, அதிமுகவை சமாதானப்படுத்திவிடும் என்றும் சலசலப்புகள் உள்ளன.

சமாதானம்: அதற்கேற்றவாறே, பாஜக மேலிட தலைவர், அதிமுக சீனியர் ஒருவருக்கு போனை போட்டு பேசியிருக்கிறார்.. ஆனால், வெள்ளைக்கொடி எடப்பாடி பழனிசாமியிடம் வேலைக்கு ஆகவில்லை. முறிந்தது முறிந்ததுதான் என்று கூட்டணி விஷயத்தில் கறாராக இருக்கிறாராம்.
அதேசமயம், பாஜக இல்லாத நிலையில், கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளார். இதற்காக பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்கவும் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
கூட்டணியா: மற்றொருபக்கம், மருத்துவமனையில் இருக்கும் திருமாவளவனுக்கு போனை போட்டு நலம் விசாரித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த நலம் விசாரிப்பது, அரசியல் நாகரீகமா? அல்லது கூட்டணிக்கான அறிகுறியா? என்ற குழப்பம் எழுந்துள்ளது.. அதேபோல, காங்கிரசுடன் பேசிவருவதாகவும், 10 சீட் கேட்டதற்கு, அதிமுகவும் ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல் கசிகின்றன. இந்த லிஸ்ட்டில் கம்யூனிஸ்ட்கள் பெயரும் அடிபட்டு வருகிறது.
கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, அதிமுகவுக்குள்ளேயே சில சலசலப்புகள் உள்ளதாகவும் சொல்கிறார்கள். அதாவது, ஜெயக்குமார், சிவி சண்முகம் போன்றவர்கள் பாஜகவுக்கு எதிராகவும், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர் போன்றவர்கள் பாஜகவுக்கு ஆதரவாகவும் என 2 பிரிவுகளாக உள்ளனர்.. இதில், பாஜகவுக்கு ஆதரவானவர்கள், மேலிட பாஜகவை தற்போது சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருப்பதாக சொல்கிறார்கள்.
2 பிரிவுகள்: கூட்டணியை பலப்படுத்துவதைவிட மிகப்பெரிய சிக்கல், அதிமுகவுக்குள்ளேயே நிலவும் இந்த 2 பிரிவுகளை, எடப்பாடி பழனிசாமி எப்படி ஒன்றிணைத்து, அரவணைத்து செல்வார்? என்பதில் ஏற்பட்டுள்ளது.
ஓபிஎஸ், பாஜக தரப்பில் விஜயபாஸ்கரை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி நடப்பதாக சில நாட்களுக்கு முன்பு செய்தி கசிந்தது. இதில், "டாடி மோடி" ராஜேந்திர பாலாஜியின் நிலைப்பாடு பற்றி கேட்கவே வேண்டாம்..
அதேபோல கொங்கு மண்டலத்திலும் சில சீனியர்கள் பாஜக பக்கம் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள். தங்களுடன் கூட்டணி வைக்க, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பிடிவாதம் பிடித்தால், அதிமுகவின் முக்கிய பிரமுகர்களுக்கு பாஜக வலைவிரிப்பது அதிகமாகும் என்றும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
யார் முதல்வர் வேட்பாளர்: அதேபோல, அண்ணாமலையை 2026ல் முதல்வராக்க வேண்டும் என்று பாஜக கேட்டதால்தான், கூட்டணியிலிருந்து விலகினோம் என்று கே.சி.கருப்பண்ணன் தெரியாமல் தவறான தகவலை தெரிவித்துவிட்டார் என்று மூத்த தலைவர் முனுசாமி சொல்லி உள்ளதால், அதிமுகவில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அப்படியானால் இந்த 2 தலைவர்களில் யார் சொல்வது உண்மை? என்று தெரியவில்லை. இதுபோன்ற சர்ச்சைகளுக்கும், குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், எடப்பாடி பழனிசாமிதான் இதுகுறித்து பேச வேண்டும், அதுவரை இப்படியான குழப்பங்கள் நீட்டிக்கத்தான் செய்யும், இதன்மூலம் தொண்டர்கள் சோர்வடைந்துவிடுவார்கள் என்றும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சிக்கல்கள்: ஆக, அதிமுகவை குழப்பமின்றி ஒத்த கருத்துடன் அரவணைத்து செல்வது + மற்றொன்று, திமுகவை சமாளிக்கக்கூடிய அளவுக்கு கூட்டணியை பலப்படுத்துவது என்ற 2 விதமான சிக்கல்கள் அதிமுக பொதுச்செயலாளருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.. அடுத்து என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications