கட்சியை பலப்படுத்த களமிறங்கிய எடப்பாடி பழனிச்சாமி..அதிமுக பொதுச்செயலாளர் ஆன உடன் மாஸ் அறிவிப்பு
சென்னை: அதிமுகவின் உறுப்பினர் சேர்க்கை, புதுப்பித்தலுக்கான படிவங்களை ஏப்ரல் 5ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட உடன் முதல் அறிவிப்பாக கட்சியை பலப்படுத்தும் வகையில் மிக முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
தடைகள் பல தாண்டி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த 9 மாதங்களாகவே அதிமுகவில் நீடித்து வந்த ஒற்றைத்தலைமை பிரச்சினைக்கு நீதிமன்றம் மூலம் இன்று தீர்ப்பு கிடைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே மகிழ்ச்சியுடன் பொதுச்செயலாளராக இன்றைக்கு சூட்டோடு சூட்டாக பதவி ஏற்றுக்கொண்டார்.

பொதுச்செயலாளரானார் இபிஎஸ்
பொன்விழா கண்ட அதிமுகவின் நான்காவது பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர், அவருக்குப்பின்னர் ஜெயலலிதா 30 ஆண்டுகாலம் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவை 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர். அது சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. இடையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரட்டை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

கட்சியின் பலம் தொண்டர்கள்
அதிமுக எப்போதுமே ராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்கும். ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம் என்று எப்போதும் பெருமையுடன் கூறுவார் ஜெயலலிதா. கட்சியின் பலமே தொண்டர்கள்தான். அவ்வப்போது புது உறுப்பினர்களை சேர்த்தும், பழைய உறுப்பினர்களை புதுப்பிக்கச்சொல்லியும் கட்சியை உயிர்ப்போடு வைத்திருப்பார் ஜெயலலிதா. அதே பாணியை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. பொதுச்செயலாளர் ஆன உடன் முதல் அறிவிப்பாக உறுப்பினர் சேர்க்கை படிவம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுக சட்ட விதி
அதிமுக சட்ட விதி 30-ன்படி கட்சி அமைப்புகளின் பொதுத் தேர்தலை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டும். ஒவ்வொரு அமைப்பின் தேர்தல் நடக்கும் முன்பும், உறுப்பினர்களின் பதிவை புதுப்பித்தல், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் ஆகிய பணிகளை முடிக்க வேண்டும். எனவே, அதிமுக உறுப்பினர்களின் பதிவு புதிப்பித்தல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல் ஆகிய பணிகள் நடக்க உள்ளன.

உறுப்பினர் சேர்க்கை படிவம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் வழங்கப்படும். ரூ.10 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் தனது பலத்தை அதிகரிப்பதோடு கட்சியில் தனது செல்வாக்கை ஜெயலலிதா போல உயர்த்த திட்டமிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

அம்மாவின் அரசியல் வாரிசு
பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட உடன் அறிவிப்பு வெளியிட்ட கையோடு அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர், முன்னாள் முதல்வரும் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அம்மாவின் அரசியல் வாரிசே..கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளரே என்று உற்சாக முழக்கமிட்டு எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்தினர்.












Click it and Unblock the Notifications