கேப் விடாம அடுத்தடுத்து அதிரடி தான்.. பாஜக கூட்டணியை முறித்த வேகத்தில் எடப்பாடியின் ‘பலே’ கணக்கு!
சென்னையில்: தாம்பரத்தில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அக்டோபர் 3ஆம் தேதி முதல் தொடர்ந்து வெவ்வேறு பகுதியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி.மு.க. ஆட்சியில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 5-க்கு உட்பட்ட இடங்களில், அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தி.மு.க அரசும், தாம்பரம் மாநகராட்சியும் தவறியதன் காரணமாக, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாம்பரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்: பொதுச் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளதால், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சேலையூர் மற்றும் இரும்புலியூர் ஏரிகளில் கழிவுநீர் கலப்பதால் ஏரிகள் மாசடைந்து வருகின்றன. இங்குள்ள அம்மா உணவகத்தில், 1500-க்கும் மேற்பட்ட மக்கள் உணவருந்தி பயன்பெற்று வந்த நிலையில் தற்போது, தரமற்ற உணவு வகைகளை தயார் செய்வதால் மிகவும் குறைவான மக்களே உணவருந்தி வருகின்றனர்.
இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-5-ல் நிலவி வரும் சுகாதார சீர்கேடு, குடிநீர் பிரச்சனை, தெரு விளக்குகள் எரியாமை, பாதாள சாக்கடைத் திட்டம் சரிவர முடிக்காதது, குண்டும் குழியுமான சாலைகளை சீர்செய்யாதது, ஏரிகளில் கழிவு நீர் கலப்பது முதலானவற்றை சரிசெய்யத் தவறிய தி.மு.க அரசையும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும், அம்மா உணவகங்களில் வழங்கப் படும் உணவுகளின் தரத்தைக் குறைத்து, இத்திட்டத்திற்கு மூடுவிழா காணத் துடிக்கும் தி.மு.க அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க. செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், தாம்பரம் கிழக்கு, மாடம்பாக்கம் ஆகிய பகுதிக் கழகங்கள் ஒன்றிணைந்து, வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், தாம்பரம் கிழக்கு, வால்மீகி தெருஏரிக்கரை தெரு சந்திப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
முன்னாள் அமைச்சர்கள்: இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச. ராசேந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பார்கள்.
கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகி களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும். தி.மு.க. ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொது மக்களும், வியாபாரிகளும், தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 3 மாவட்டங்களில்: முன்னதாக, ஏற்கனவே 3 மாவட்டங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 9 ஊராட்சிகளில் உள்ள சுமார் 3300 ஏக்கர் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் அக்டோபர் 4ஆம் தேதி காலை மேல்மா கூட்டு ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல அதிமுக ஆட்சிக் காலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக கடலூர் மையப் பகுதியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தை, பொதுமக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே, குறிஞ்சிப்பாடி தொகுதி, எம். புதூரில் மாற்றி அமைக்க முடிவு செய்துள்ள விடியா திமுக அரசைக் கண்டித்தும், கடலூர் மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை உடனடியாக சீர்செய்திட வலியுறுத்தியும், கடலூர் வடக்கு மாவட்டக் அதிமுக சார்பில் வருகிற 6ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.
அடுத்தடுத்த நாட்களில்: மேலும், ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானிசாகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை ஒட்டியுள்ள மலைப் பகுதிகளில் யானை, சிறுத்தை மற்றும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் சேதங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளாத திமுக அரசைக் கண்டித்தும், இப்பிரச்சனையில் பாராமுகமாக இருந்து வரும் தமிழக வனத் துறையைக் கண்டித்தும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் அக்டோபர் 3ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இப்படியாக, 3ஆம் தேதி முதல் நாள்தோறும் அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். வெவ்வேறு மாவட்டங்களில், அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டுள்ள நிலையில், தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி, மக்கள் மத்தியில் கவனம் ஈர்க்கவும், அரசை எதிர்க்கும் வலுவான எதிர்க்கட்சி என்பதை நிறுவவும் ஈபிஎஸ் முயற்சித்து வருவதாக பேசப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளான கூட்டத்தை திரட்டவும் மா.செக்களுக்கு எடப்பாடி ஆர்டர் போட்டிருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications