உடைகிறதா கூட்டணி? வடக்கில் கிளம்பும் குரல்.. ‘வேண்டவே வேண்டாம்’.. எடப்பாடிக்கு தூபம்.. அப்போ பாஜக?
சென்னை : பாஜக தலைமை, ஓபிஎஸ்ஸுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதை எடப்பாடி பழனிசாமி துளியும் விரும்பாத நிலையில், சில முக்கிய நிர்வாகிகளும் பாஜக கூட்டணிக்கு வராமல் போனாலும் போகட்டும், ஓபிஎஸ் வேண்டாம் என கூறி வருகின்றனராம்.
அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக உடைந்த நிலையில், இணைந்து செயல்படுமாறு அட்வைஸ் கூறியுள்ளது பாஜக தலைமை. ஆனால், எடப்பாடி பழனிசாமி முரண்டு பிடித்து வருகிறார்.
பிரதமர் மோடி தன்னையும், ஓபிஎஸ்ஸையும் ஈக்குவலாக ட்ரீட் செய்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தனக்கு நேரம் ஒதுக்காததால், வருவதை பார்த்துக் கொள்ளலாம், விட்டுப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம்.
எடப்பாடி பழனிசாமி அணியைப் பொறுத்தவரை, நிர்வாகிகள் மட்டத்திலேயே பாஜக வேண்டும், பாஜக வேண்டாம் என இரட்டை நிலைப்பாடு இருக்கிறது. வட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், பாஜக தங்கள் கூட்டணியில் இருப்பதை விரும்பவில்லையாம்.

பாஜகவின் விருப்பம்
பாஜக தலைமை, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டும், டிடிவி தினகரன், சசிகலாவையும் இணைத்துக்கொள்ள வேண்டும், அப்போதுதான் தேர்தலில் வோட் கன்வெர்ஷனுக்கு உதவும் என உறுதியாக கூறி வந்தாலும், அதனை ஏற்க மறுக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் தேவையே இல்லை என தனது தரப்பை பாஜக தலைமைக்கு விளக்க முயன்று வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், பாஜக ஓபிஎஸ்-ஈபிஎஸ்ஸை ஒரே தட்டில் வைத்து நடத்துவதால், எடப்பாடி கொஞ்சம் அப்செட் ஆகியுள்ளார் என்கிறார்கள்.

எடப்பாடி பொறுமல்
பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது நேரம் கேட்டும் கிடைக்கவில்லை, அமித்ஷாவும் நேரம் தரவில்லை, லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்கின்றனர் என்பதால் டென்ஷன் ஆகியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதன் காரணமாகவே, இந்தியா சிமெண்ட்ஸ் விழாவில் அழைப்பு வந்தும், ஈபிஎஸ் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஓபிஎஸ் பாஜக தலைவர்களை விரட்டி விரட்டிச் செல்வதாலேயே தானும் போய் அசிங்கப்பட வேண்டியிருக்கிறது என்றும் ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களிடம் பொறுமியுள்ளாராம்.

போனா போகட்டும்
லோக்சபா தேர்தலில் பாஜக தங்களுடன் கூட்டணி வைக்காமல் ஓபிஎஸ், அமமுக, தமாகா, தேமுதிக, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்கட்டும். நாம் வேறு அணியை கட்டமைக்க முயற்சிப்போம். நாம் இல்லாமல் பாஜகவால் கண்டிப்பாக ஜெயிக்க முடியாது. இந்த தேர்தலில் நமது பலத்தை அவர்கள் தெரிந்துகொண்டு, தாமாக தேடி வருவார்கள். பாஜக தேசிய தலைமை இறங்கி வரும். 2026 தேர்தலில் நாம் நினைத்ததைச் சாதித்துக் கொள்ளலாம் என்ற திட்டத்தில் ஈபிஎஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமரசம் செய்ய முயற்சித்தால்
ஆனால், பாஜக, சமரசம் செய்து வைக்கவே முயற்சிப்பதால் பாஜக தலைமை மீது எரிச்சலில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள். அவ்வப்போது சில ஈபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் பாஜக உட்கட்சி விவகாரத்தில் தலையிடாது என அழுத்தமாகக் கூறி வருவதற்கும் பின்னணி இதுதானாம். பாஜக கூட்டணியில் இருப்பதில் சிக்கல் இல்லை. ஆனால், ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை இணைப்பதையே பிரதானமாக பாஜக பேச திட்டமிட்டால் பாஜகவிடமே திட்டவட்டமாக முடியாது எனக் கூறும் முடிவில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

அமைதியா இருங்க
எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலரும் கூட பாஜகவை கடுமையாக எதிர்க்கும் வகையிலேயே ஆலோசனைக் கூட்டங்களில் பேசி வருகின்றனராம். இதன் மூலம் அவர்களும் பாஜக கூட்டணியில் இருப்பதை விரும்பவில்லை என உணர்ந்து கொண்டுள்ளார் ஈபிஎஸ். ஆனால், அவர்களிடம் எல்லாம், இப்படி பொதுவெளியில் பேசி சிக்கலை உண்டுபண்ணி விடாதீர்கள் என்று சொல்லி அமைதிப்படுத்தி வைத்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

பாஜக கூட்டணியை விரும்பவில்லை
இன்னொரு விஷயத்தையும் ஆழமாகச் சுட்டிக் காட்டுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். பாஜக கூட்டணியை விரும்பாமல் பேசி வரும் ஈபிஎஸ் அணியின் உயர்மட்ட தலைவர்கள் பலரும் தங்கள் நலன் கருதியே இந்த முடிவில் இருக்கிறார்களாம். குறிப்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக கூட்டணியில் நின்றால் அவரது தொகுதியிலேயே வெல்ல முடியாத நிலை இருக்கிறது. ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமாருக்கு நல்ல பெயர் இருந்தாலும், கடந்த முறை தோற்கக் காரணம் பாஜக கூட்டணி தான் எனக் கருதுகிறாராம்.

தங்களுக்கு உதவாது
தனது தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவில் இருப்பதால், பாஜக கூட்டணியை அவர் விரும்பவில்லை. அதன் காரணமாகவே, ஈபிஎஸ் எவ்வளவு அடக்கியும் கூட ஜெயக்குமார் பாஜக பற்றி செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுந்தால் காட்டத்தை வெளிக்காட்டி விடுகிறார் என்கிறார்கள். அதேபோல, சிவி சண்முகம், கேபி முனுசாமியும், தங்கள் தொகுதிகளில் வெற்றி பெற பாஜக கூட்டணி உதவாது எனக் கருதுகிறார்கள். முன்பு சி.வி.சண்முகம் பாஜக கூட்டணியில் இருந்ததால் தான் அதிமுக தோற்றது என்று கூட பேசினார். இதன் காரணமாகவே, பாஜகவுடன் இணங்கும் எடப்பாடியின் முடிவை அவர்கள் ஆதரிப்பதில்லை என்கிறார்கள்.

எதிர்க்கவும் மனமில்லை
ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, வெளிப்படையாக பாஜகவை எதிர்க்க மனமில்லாமல் இருக்கிறார். பாஜகவை எதிர்த்தால், பாஜக தலைமை வழக்குகள் ரூபத்தில் பல்வேறு குடைச்சல்களைத் தரும் என்பது ஒருபக்கம் இருந்தாலும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய மாஜிக்கள், தென் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய மாஜிக்கள், பாஜக கூட்டணி உறுதியாக இருக்க வேண்டும் என விரும்புவதும், எடப்பாடியின் யோசனைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

ஈபிஎஸ் எண்ணம்
இப்படி பல்வேறு கணக்குகள் இருப்பதால் பாஜகவை ஒதுக்கவும் முடியாமல் இருக்கிறார் ஈபிஎஸ். அதேசமயம், ஓபிஎஸ், சசிகலாவை இணைத்துக் கொள்ளுமாறு பாஜக தலைமை தன்னிடம் சமரசம் செய்யக்கூடாது, சீட் பிரச்சனையால் பாஜக தங்கள் கூட்டணியில் இருந்து விலகி விட்டால் கூட நல்லது என்றே ஈபிஎஸ் நினைக்கிறார் என்கிறார்கள். அதேசமயம், தமிழக பாஜக தலைவர்களும், ஈபிஎஸ் தரப்பின் எண்ணவோட்டங்களை கேட்ச் செய்து வருகிறார்கள் என்பதால், அரசியல் புயல் தீவிரமாகவே தொடர்கிறது.












Click it and Unblock the Notifications