ஃப்ரிட்ஜில் கண்ணுக்கு தெரியாத ஆபத்து.. "விஷமாகும் உணவு.." இந்த தப்புகளை எல்லாம் செய்யாதீங்க
சென்னை: கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே வெயிலின் தாக்கம் மனிதர்களை மட்டுமல்ல, நாம் சாப்பிடும் உணவுகளையும் பதம் பார்க்கத் தொடங்கிவிடும். உணவு கெட்டுப்போகாமல் இருக்கத்தானே ஃப்ரிட்ஜில் வைக்கிறோம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், சரியாகப் பராமரிக்காத ஃப்ரிட்ஜுக்குள் ஒரு பெரிய ஆபத்து ஒளிந்திருக்கிறது என்கிறது இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம். இது தொடர்பா நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இப்போது கோடை வெயில் படுத்தி எடுக்க ஆரம்பித்துவிட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெப்பம் காரணமாக நமக்கு அசவுகரியம் ஏற்படுவது ஒரு பக்கம் என்றால் இதனால் நமது உணவுப் பொருட்களும் கூட சீக்கிரமே கெட்ட போகிறது. அதுபோல வெப்பநிலை அதிகரிக்கும் போது, உணவுகளைப் பாக்டீரியாக்களிடமிருந்து காக்கும் முக்கிய அரணாக ஃப்ரிட்ஜ் மாறுகிறது.

ஃப்ரிட்ஜ்
ஆனால், உணவுகளை ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது மட்டுமே போதாது.. அதை எப்படி வைக்கிறோம் என்பதில் தான் நம் ஆரோக்கியம் அடங்கியுள்ளது என ட்விட்டரில் எச்சரித்துள்ளது FSSAI எனப்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்!
பொதுவாகவே கோடை வெயிலில் பாக்டீரியாக்கள் மிக வேகமாக இனப்பெருக்கம் செய்யும். நாம் ஃப்ரிட்ஜுக்குள் உணவுகளைச் சரியாகப் பிரித்து வைக்கவில்லை என்றால், 'கிராஸ்-கண்டாமினேஷன்' (Cross-contamination) எனப்படும் உணவு மாசுபடுதல் ஏற்படும். அதாவது, சமைக்காத இறைச்சியில் இருக்கும் பாக்டீரியாக்கள், நாம் அப்படியே சாப்பிடக்கூடிய பழங்கள், காய்கறிகள் அல்லது சமைத்த மீதமுள்ள உணவுகளுக்குப் பரவிவிடும்.
பிரச்சனை
இந்தப் பாக்டீரியாக்கள் கண்ணுக்குத் தெரியாது. உணவின் வாசனையோ, நிறமோ மாறாமல் நன்றாக இருப்பது போலத் தோன்றினாலும், அது உங்களுக்கு ஃபுட் பாய்சனிங்கை ஏற்படுத்தும். வயிற்றுப் போக்கு, வாந்தி மற்றும் அஜீரணக் கோளாறுகள் எனப் பல வகையான நோய்ப் பாதிப்புகளை ஏற்படுத்தும்! கோடைக் காலத்தில் உணவுகளைப் பாதுகாப்பாக வைக்க உணவுப் பாதுகாப்பு ஆணையம் சில எளிய வழிமுறைகளைப் பட்டியலிட்டுள்ளது.
இறைச்சி தனி... காய்கறி தனி!
கறி, கோழி, மீன் போன்ற சமைக்காத அசைவ உணவுகளை எப்போதும் மற்ற உணவுகளோடு சேர்த்து வைக்கக் கூடாது. சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும் போது முதற்கொண்டு, ஃப்ரிட்ஜில் வைப்பது வரை இவற்றைத் தனித்தனியாகப் பிரித்து வைக்க வேண்டும். அசைவ உணவுகளில் இருந்து வரும் நீர் தவறியும் மற்ற உணவுகளில் பட்டுவிடக் கூடாது.
5°C-க்கு கீழ் இருக்கட்டும்!
உங்கள் ஃப்ரிட்ஜின் வெப்பநிலை எப்போதும் 5 டிகிரி செல்சியஸ்க்குக் கீழ் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வெப்பநிலை சற்றே உயர்ந்தாலும் பாக்டீரியாக்கள் வேகமாக வளரத் தொடங்கிவிடும்.
முட்டைக்கு 'நோ' டோர் ஸ்டோரேஜ்!
முட்டைகள் வெப்ப மாறுபாடுகளால் எளிதில் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை. எனவே, அவற்றை ஃப்ரிட்ஜ் கதவுகளில் இருக்கும் ரேக்குகளில் வைக்காமல், உள்ளே இருக்கும் தட்டுகளில் வைப்பதே நல்லது. மேலும், கோடைக்காலத்தில் பச்சையாகவோ அல்லது அரைகுறையாகச் சமைத்த முட்டைகளையோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். கோடை என்றில்லை எப்போதும் நன்கு சமைக்கப்பட்ட உணவுகளையே சாப்பிட வேண்டும்.
வெயிலில் இருந்து தப்பிக்க நாம் ஏசி, கூலரைத் தேடுவது போல, நம் உணவைக் காக்க ஃப்ரிட்ஜை சரியாகப் பயன்படுத்த வேண்டும். சமைத்த குழம்பிற்கு மேலே பச்சைக் கோழி இறைச்சியை வைப்பது போன்ற சின்னஞ்சிறிய அலட்சியங்கள் கூடப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும்! இந்தச் சின்னச் சின்ன பழக்கங்களை மாற்றிக் கொண்டால், கோடைக்கால மருத்துவச் செலவுகளிலிருந்து தப்பித்து நிம்மதியாக வாழலாம்!












Click it and Unblock the Notifications