வேற வழி தெரியல.. மோதி மோதி பார்த்தும் மனமிரங்காத சபாநாயகர்.. ஐகோர்ட்டுக்கு ஓடிய எடப்பாடி பழனிசாமி!
சென்னை: சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டதால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஆர்பி உதயகுமாருக்கு வழங்கவேண்டும் என்றும், நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு தனியாக இருக்கை ஒதுக்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை வைத்து வருகிறார். ஆனால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியே அரசியலமைப்பில் கிடையாது, இருக்கை ஒதுக்குவது எனது முடிவு எனக் கூறி அப்பாவு, ஈபிஎஸ் கோரிக்கையை நிராகரித்து வருகிறார்.

இந்நிலையில், நீதிமன்றக் கதவுகளைத் தட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 66 அதிமுக எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. 2021ஆம் ஆண்டு மே மாதம் நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவராக தானும், துணைத் தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் தேர்ந்தெடுக்கபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எதிர்க்கட்சி கொறடாவாகவும், எஸ்.ரவி துணை கொறடாவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்ற கட்சியின் செயலாளராக அன்பழகன் மற்றும் துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியனும் தேர்ந்தெடுக்கபட்டனர் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு ஜூலை 17ல் கட்சியின் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி. உதயகுமாரையும், துணை செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமித்துள்ளதாக சபாநாயருக்கு கடிதம் அனுப்பியும், ஐந்து முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், அதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகரிடம் பலமுறை முறையிட்டும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களுடன் இருப்பதால், எதிர்க்கட்சியினர் விவாதங்களில் தலையிடுவதால், எங்கள் கட்சியினரால் திறமையாகச் செயல்பட முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, கட்சியில் சட்டமன்ற பொறுப்பிற்கு புதிதாக தேர்ந்தெடுக்கபட்டவர்களை அங்கீகரிக்கும்படி, சபாநாயகருக்கும், சட்டமன்ற செயலாளருக்கும் உத்தரவிட வேண்டும், இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications